அப்பாவும் - மகளும்...! ஒரே போர் விமானத்தை திறம்பட இயக்கி சாதனை!
இந்தியாவிலேயே முதன் முறையாக ராணுவ போர் விமானத்தை விமானிகளான அப்பாவும், மகளும் ஓட்டி புதிய சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதன் முறையாக ராணுவப் போர் விமானத்தை விமானிகளான அப்பாவும், மகளும் ஓட்டி புதிய சாதனை படைத்துள்ளனர்.
பெண்களை சமையலறைக்குள் பூட்டி வைத்த காலம் மலையேறி தற்போது ஆணுக்கு பெண் இங்கு நிகர் என காட்டும் வகையில் பல்வேறு வேலைகளை பெண்கள் செய்து வருகின்றனர். ஆட்டோவில் ஆரம்பித்து போர் விமானம் வரை இயக்கும் அளவிற்கு கெத்து காட்டி வருகின்றனர்.
பெண்களால் முடியாதது ஏதும் உண்டா? பெண்கள் தங்கள் மனதில் நினைத்த எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் மற்றொரு அசாதாரண கதை இன்று அரங்கேறியுள்ளது. தற்போது ஒரே போர் விமானத்தில் தந்தையும், மகளும் சேர்ந்து பறந்து புதிய வரலாறு படைத்துள்ளனர்.
வரலாறு படைத்த அப்பா, மகள்:
இந்திய விமானப் படையின் (IAF) கமாண்டர் சஞ்சய் சர்மா மற்றும் பறக்கும் படை அதிகாரியான அனன்யா ஷர்மா ஆகியோர் தந்தை-மகள் ஆவர். இந்த இரண்டு பேரும் சேர்ந்து கடந்த மே 30ம் தேதி அன்று கர்நாடகாவின் பிதாரில் உள்ள IAF நிலையத்தில் ஒரே போர் விமான ஹாக்-132 ஐ பறக்கவிட்டு வரலாறு படைத்ததுள்ளனர். ஐஎஃப்எஸ் வெளியிட்ட அறிக்கையில்,
"IAFல் ஒரு தந்தையும் அவரது மகளும் ஒரு பணிக்காக ஒரே போர் விமானத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு எந்த நிகழ்வும் இப்படி நடந்தது இல்லை. அது வேறு யாருமில்லை அப்பாவான கமாண்டர் சஞ்சய் ஷர்மாவும், மகளான ஏர்போர்ஸ் அதிகாரி அனன்யா ஆகியோர் தான் அதனை செய்துள்ளனர். அவர்கள் சக வீரர்களைப் போல ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை கொண்ட தோழர்கள்," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது மேம்பட்ட போர் விமானங்களை இயக்குவது தொடர்பாக அனன்யா பிதாரில் உள்ள IAF நிலையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். சின்ன வயதில் இருந்தே போர் விமானியான தந்தையைப் பார்த்து வளர்ந்த அனன்யாவிற்கு, தானும் போர் விமானியாக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்துள்ளது. தனது குழந்தைப் பருவ கனவை நனவாக்கியதோடு, தற்போது தந்தையே பார்த்து ஆச்சர்யப்படும் அளவிற்கு அவருடன் ஒன்றாக போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.
இந்த ராணுவ உடையில் கம்பீரமாக தந்தை மற்றும் மகள் எடுத்துக்கொண்ட போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அற்புதம், பெருமிதமான தருணம் என பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
தொகுப்பு - கனிமொழி