Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘பசுமைப் புரட்சியின் தந்தை' எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

முன்னாள் பிரதமர்கள் பிவி நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பசுமைப் புரட்சியின் தந்தை' எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

Friday February 09, 2024 , 4 min Read

முன்னாள் பிரதமர்கள் பிவி நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு ஏற்கனவே பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் எல்.கே.அத்வானி தவிர, மற்ற 4 பேரும் தற்போது உயிருடன் இல்லை.

எம்.எஸ்.சுவாமிநாதன்:

“இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை” என அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, வேளாண் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, மத்திய அரசின் 'பாரத ரத்னா விருது' வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் நாட்டிற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, இந்திய அரசு, எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.

சவாலான காலங்களில் இந்தியாவின் விவசாயத் தன்னம்பிக்கையில் முக்கிய பங்கு வகித்தது. இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.எஸ்.சுவாமிநாதனின் தொலைநோக்கு தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழுமையையும் உறுதி செய்தது.

தனது தந்தைக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெருமைக்குரிய தருணம் என்றும் அவரது மகள் செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

MS Swaminathan
“என் தந்தை தனது வாழ்நாள் முழுவதும் விவசாயத்திற்கும், மிக முக்கியமாக விவசாயிகள் மற்றும் நாட்டின் ஏழை மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் நலனுக்காகவும் செய்த பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்த அங்கீகாரத்தில் அவரை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கும், ஆனால் அவர் விருதுகளுக்காக உழைத்தவர் அல்ல. வேளாண்மையில் அவர் செய்த முயற்சிகளுக்கான முடிவுகளும், மக்கள் அவர் மீது காட்டிய அன்பு மற்றும் பாசத்தாலேயே உந்துதல் பெற்றார். இந்தியாவில் எங்கு சென்றாலும் தன்னைச் சந்தித்த விவசாயிகள் காட்டிய அன்பையும் நன்றியையும் அவர் எப்போதும் நினைவு கூர்ந்தார்,” என்றார்.

விவசாயத் துறையில் பணியாற்றிய மற்றும் ஆராய்ச்சியின் சமூக தாக்கத்தை நம்பிய விஞ்ஞானியான தனது தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, நாட்டின் இளைஞர்களுக்கு வலுவான உந்துதலாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.

யார் இந்த எம்.எஸ்.சுவாமிநாதன்?

1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். எம்.எஸ்.சுவாமிநாதனின் முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். பெற்றோர் எம்.கே.சாம்பசிவன், பார்வதி தங்கம்மாள். தந்தை எம்.கே.சாம்பசிவன் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். மகனும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று தந்தை விரும்பினார். ஆனால், சுவாமிநாதன் அதில் ஆர்வம் காட்டவில்லை.

1943 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது வங்காளத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மக்கள் பசியால் வாடினர். இதனைக் கண்டு மனவேதனை அடைந்த சுவாமிநாதன், வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

MS Swaminathan

திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தைப் பெற்றதும், கோவை வேளாண் பள்ளியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தைப் பெற்றார். 1952 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மரபியல் ஆர்வத்துடன் முனைவர் பட்டத்தை முடித்தார்.

1954 இல், அவர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் தனது படிப்பைத் தொடர்ந்தார். கட்டாக்கில் உள்ள மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது இந்தியாவில் உணவு பஞ்சம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது, இதனால் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற கிடைத்த நிரந்தர வேலையை துரத்துவிட்டு, 1954ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.

வேளாண் புரட்சி:

அத்தருணத்தில் இந்தியாவில் விவசாயத் துறை பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்று நினைத்த சுவாமிநாதன், பல்வேறு வகையான சத்துக்கள் அடங்கிய தயாரிப்போடு விவசாயிகளுக்கு உரம் கிடைக்கச் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டார்.

உலகெங்கிலும் உள்ள மற்ற விவசாய நிபுணர்களின் உத்வேகத்துடன் பல்வேறு பயிர்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதனால் இந்தியாவிற்கு ஒரு புதிய மரபணு திரிபு அறிமுகப்படுத்தப்பட்டது. கலப்பின தாவரங்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்தது. இவரது முயற்சியால் எந்த குளிரையும் தாங்கும் கலப்பின உருளைக்கிழங்கு சாகுபடி துவங்கியுள்ளது

தாவரங்களில் மரபணு மாற்றங்களைச் செய்து, கோதுமை மற்றும் அரிசியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இவர் தான் பாசுமதி அரிசி வகையை அறிமுகப்படுத்தியவர்.

MS Swaminathan

அதன் பிறகு, இந்தியாவில் விவசாயத் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர கடுமையாக உழைத்தார். 1960 மற்றும் 70 களில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் இன்று இந்தியாவை உணவுப் பாதுகாப்பில் வைத்திருக்கின்றன என்றால் மிகையாகாது.

1964ம் ஆண்டு ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட நாரி என்ற குட்டை ரக கோதுமைப் பயிர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தார். விவசாயிகளுக்கு 200 சதவீத லாபம் கிடைத்ததால் அவர்களும் இந்த குட்டை ரக கோதுமைப் பயிர்களை அதிகம் விவசாயம் செய்யத் தொடங்கினர். இதனை 1968ம் ஆண்டு கோதுமைப் புரட்சியை அறிவித்தார் இந்திராகாந்தி.

“வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன், ‘இந்தியாவில் பட்டினியைப் போக்கும் ஒரே வழி, நிலையான வேளாண்மையை ஏற்படுத்துவதுதான்’ என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ‘பட்டினியில்லாத இந்தியா’வைத்தான் தனது கனவாக வைத்திருந்தார்.”

சுவாமிநாதன் வகித்துள்ள முக்கிய பொறுப்புகள்:

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன், அதனைவிட விவசாயத் துறையை விரும்பினார்.

  • 1981-85 காலகட்டத்தில் உணவு மற்றும் விவசாய அமைப்பு கவுன்சிலின் தலைவராக பணியாற்றினார்.

  • 1987 இல், சுவாமிநாதன் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRR) இயக்குநர் ஜெனரலாக இருந்தார்.

  • 1981-85 இல் உணவு மற்றும் விவசாய அமைப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.

  • 1989-96 க்கு இடையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) பொது இயக்குநராக பணியாற்றினார். அந்த நேரத்தில் அவர் முதல் முறையாக மிகவும் மதிப்புமிக்க உலக உணவு பரிசை வென்றார்.

விருதுகள்,அங்கீகாரம்:

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க 20 ஆசியர்களின் ஒருவராக டைம் பத்திரிகையால் எம்.எஸ்.சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார்.

1988ஆம் ஆண்டு தனது பெயரிலேயே எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (MS Swaminathan Research Foundation) என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, கிராமப்புற பகுதிகளில் வேளாண் தொழில் வளர்ச்சி பெற பங்காற்றத் தொடங்கினார். இந்த தொண்டு நிறுவனம் தற்போது, இந்தியாவில் 14 மாநிலங்களில் வேளாண் சார்ந்த ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறது.