உத்வேக நாயகன் 'அப்துல் கலாம்'- நினைவு கொள்வோம் அவரது பொன்மொழிகளை!
இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவராக இருந்த மாபெரும் விஞ்ஞானி Dr. ஏபிஜே அப்துல் கலாம், 2015 ஜூலை 27 ஆம் தேதி உயிரிழந்தார். ஆனால் அவர் கண்ட கனவுகளும், இளைஞர்கள்-மாணவர்களுக்கு அவர் அளித்த உத்வேகமும் சற்றும் குறையாமல் இருந்து வருகிறது. அப்துல் கலாமின் பொன்மொழிகள் மனதிலிருந்து மறையா பொக்கிஷங்கள். 'கனவை'வாழ்க்கையாக்கிக் கொள்ள அறிவுரைத்த அவரது ஒரு சில கவிதைகள் மற்றும் மேற்கோள்களின் தொகுப்பு உங்களுக்காக...
முதன்முதலில் பலரை திரும்பிப் பார்க்கவைத்த, சிந்திக்க வைத்த 'கனவு காண்பது' பற்றிய அவரது உயரிய கவிதை,
"கனவு காணுங்கள் ஆனால்... கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல... உன்னை தூங்கவிடாமல் செய்வதே..."
கலாமின் கனவு பற்றிய தொடரும் பொன்மொழிகள்...
"கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை, கனவு காண்பவர்கள் மட்டுமே! தோற்கிறார்கள்."
"அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்."
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இன்றளவும் ரோல் மாடலாக திகழும் அப்துல் கலாம், அவர்களை சந்தித்து ஊக்கமளித்து உரையாடுவதை பெரிதும் விரும்பியவர். உத்வேகம் தரக்கூடிய இளைஞர்கள் சாதிக்கத் தூண்டும் அவரது பொன்மொழிகள் சில..
"நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன."
"நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்."
"வாய்ப்புக்காக காத்திருக்காதே... உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்..."
'மிசைல் மேன்' Missile Man என்று அழைக்கப்படும் அப்துல் கலாம், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'ரோஹிணி' 1980 இல் ஏவப்பட்ட போது அதன் திட்ட இயக்குனராக இருந்தார். பின்னர், போக்ரான்-II அணு சோதனை குழுவின் முதன்மை திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார். சுமார் 40 பல்கலைகழகங்கள் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதை தொடர்ந்து நம் நாட்டின் உயரிய விருதுகளான, பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் பாரத் ரத்னா பெற்ற மாமனிதர்.
இத்தகைய சாதனைகளை படைத்துள்ள இந்த தமிழரின் வளர்ச்சியும், வெற்றியும் சுலபமாக அவருக்கு வந்த ஒன்றல்ல. ஏழைக் குடும்பத்தில் பிறந்த கலாம், சிறு வயதில் தன் தந்தைக்கு உதவி புரிய பள்ளி நேரத்தை தவிர வீடுகளுக்கு நாளிதழ்கள் போட்டு வருமானம் ஈட்டிய உழைப்பாளி. தான் சந்தித்த சவால்களை படிக்கற்களாக நினைத்து முன்னேறிய கலாம் சோதனைகளை கையாள்வது குறித்து உதித்த வரிகள் இதோ...
"சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன."
"சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை."
"நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை."
"பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது."
"ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!."
தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டான அப்துல் கலாமின் நினைவு தினமான இன்று, அவருக்கு நமது மரியாதைகளை செலுத்துவதோடு, அவரின் கனவுகளை நம் கனவுகளாக சுமந்து, அதை நினைவாக்குவதற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்...
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்