ரூ.1 கோடி வர்த்தகம் செய்த 'IppoPay'- லாக்டவுனில் தொடங்கிய ராமேஷ்வர மீனவரின் மகன்!

By YS TEAM TAMIL
October 03, 2020, Updated on : Tue Oct 06 2020 10:05:55 GMT+0000
ரூ.1 கோடி வர்த்தகம் செய்த 'IppoPay'- லாக்டவுனில் தொடங்கிய ராமேஷ்வர மீனவரின் மகன்!
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த மோகன் IppoPay என்கிற பேமெண்ட் அக்ரிகேட்டர் ஸ்டார்ட் அப் தொடங்கி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த சிறு வணிகங்கள் கட்டணங்கள் பெற உதவுகிறார்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பிரதமர் நரேந்திர மோடி இந்தியா தற்சார்பு பெறவேண்டும் என்று முழங்குவதற்கு இணங்க இன்று உள்நாட்டு தயாரிப்பு மற்றும் சேவைகள் ஊக்குவிக்கப்பட்டு வருவதைப் பார்க்கமுடிகிறது.


அந்த வகையில் பேமெண்ட் அக்ரிகேட்டர் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் மீனவரின் மகனான மோகன். இவர் சென்னையில் இருந்து சுமார் 500 கி.மீட்டர் தொலைவில் ராமேஸ்வரத்தில் உள்ள தாமரைக்குளம் என்கிற சிறிய கிராமத்தில் உள்ள மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

படிப்பு மற்றும் வேலை

“நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். 2006-ம் ஆண்டு முகமது சதக் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து சம்பாதிக்கும் நோக்கத்துடன் சென்னை வந்தேன்,” என்றார்.

சிறு நிறுவனம் ஒன்றில் புரோக்கிராமராக வேலை செய்தபோதும் சொந்தமாக தொழில் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்கிற ஆர்வம் தொடர்ந்து அவருக்கு இருந்து வந்தது.

2010-ம் ஆண்டு வெப் டெவலப்மெண்ட் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். விரைவில் இந்நிறுவனம் நல்ல வருவாய் ஈட்டத் தொடங்கியது.

“50-க்கும் மேற்பட்ட பேமெண்ட் அக்ரிகேட்டர்களை ஒருங்கிணைத்தேன். நிதி தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. மெல்ல என் வெப் டெவலப்மெண்ட் நிறுவனம் சாஃப்ட்வேர் டெவலெப்மெண்ட் நிறுவனமாக உருவெடுத்தது,” என்று அடுத்தகட்ட வளர்ச்சியை விவரித்தார் மோகன்.

துபாய் நிறுவனத்துடன் இணைந்தார்

2018-ம் ஆண்டு மோகன் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற நிதி தொழில்நுட்ப நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தார். வாடிக்கையாளர்களையும் நிதியையும் பெறமுடியும் என்பதே இதில் அவர் பங்கேற்றதற்கான முக்கியக் காரணம்.


அங்கு துபாயைச் சேர்ந்த தொழில்முனைவர் உமர் பின் பெர்க் என்பவரை சந்தித்தார். Foloosi என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் சிடிஓ-வாகவும் இணையுமாறு அவர் மோகனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். வணிகங்கள் பிஓஎஸ் இயந்திரம் இல்லாமல் QR code, பேமெண்ட் லிங்க் அல்லது பேமெண்ட் கேட்வே மூலம் கட்டணங்களைப் பெற இந்நிறுவனம் உதவுகிறது.

“வணிக வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் வருவாய் ஈட்ட எதிர்பார்த்தேன். ஆனால் சிடிஓ-வாக முதலீடு செய்யவேண்டியிருந்தது. சென்னையில் குழு உருவாக்கி அதன் மூலம் அரபு நாடுகளுக்கான பிராடக்ட் உருவாக்க வேண்டியிருந்தது,” என்று மோகன் நினைவுகூர்ந்தார்.

2018-ம் ஆண்டு மோகன் தனது சேமிப்பில் இருந்து சில லட்சங்களைக் கொண்டு Foloosi உருவாக்கும் பணியைத் தொடங்கினார். ஓராண்டு செலவிட்டு பேமெண்ட் கேட்வே பிராடக்ட் உருவாக்கினார். 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

“நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் மாதமே 10,000 திர்ஹாம் அளவிற்கு பரிவர்த்தனைகள் நடந்தன. ஓராண்டில் 15 மில்லியன் திர்ஹாமைக் கடந்தது,” என்கிறார் பூரிப்புடன்.

இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட்டது. கிட்டத்தட்ட 1,000 வணிகர்கள் இணைந்துகொண்டனர். அரபு நாடுகளில் செயல்பாடுகளை விரிவுபடுத்த அரை மில்லியன் டாலர் ஏஞ்சல் நிதியும் பெற்றது.

இந்தியாவிற்கான பிரத்யேக நிதி தொழில்நுட்பத் தீர்வு

பெரும்பாலான பேமெண்ட் அக்ரிகேட்டர்ஸ் பெங்களூரு, மும்பை, குருகிராம் போன்ற நகரங்களைச் சேர்ந்தவை என்பதை மோகன் கவனித்தார். இந்த சேவைகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வழங்கப்படுவதையும் கவனித்தார். உள்ளூர் பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தமிழில் கேட்வே உருவாக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது.

இந்த யோசனை உதித்ததும் Foloosi நிறுவனத்தை விட்டு விலகினார்.


தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையளிக்க விரும்பி 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் IppoPay என்கிற பேமெண்ட் அக்ரிகேட்டர் சேவையைத் தொடங்கினார்.

“தமிழில் இப்போதே பே பண்ணலாம் என்கிற பொருளை உணர்த்தும் வகையில் ‘இப்போபே’ (IppoPay) என பெயரிட்டோம்,” என்கிறார் இதன் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ மோகன்.

IppoPay செயல்பாடுகள்

சென்னையைச் சேர்ந்த பேமெண்ட் அக்ரிகேட்டர் IppoPay, அதன் பிஓஎஸ் மென்பொருள் மூலம் வணிகங்கள் கட்டணங்களைப் பெற உதவுகிறது. வணிகங்கள் இன்வாய்ஸ் மட்டுமல்லாது வணிகம் தொடர்பான புள்ளிவிவரங்களைப் பெறவும் வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக தொடர்பில் இருக்கவும் உதவுகிறது.


வணிகங்கள் கட்டணங்களைப் பெற்றுக்கொள்ள பேமெண்ட் டெர்மினல், பிஓஎஸ், ஸ்வைபிங் மெஷின் போன்றவை அவசியமில்லை. மாறாக அதன் மொபைல் செயலியைப் பயன்படுத்தி QR கோட் உருவாக்கிக்கொள்ளலாம்.

இலக்காகக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள்

IppoPay வணிகர்களையும் விற்பனையாளர்களையும் இலக்காகக் கொண்டுள்ளது. இவர்கள் இந்தத் தளத்தின் எளிமையான பயனர் இடைமுகம் மூலம் டிஜிட்டல் கட்டணங்கள் பெறலாம்.

தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள பால் விற்பனையாளர்கள், செய்தித்தாள் விநியோகிப்பவர்கள், சிட் ஃபண்ட் நிறுவனங்கள் போன்றவை இதன் வாடிக்கையாளர்கள்.

இவர்கள் பேப்பர் மூலமாகவே கட்டணங்களை நிர்வகிக்கின்றனர். இவர்களுக்கு மொபைல் செயலி உருவாக்கி அவர்களது மொழியிலேயே சந்தா திட்டத்தை வழங்கத் தீர்மானித்தோம்,” என்றார் மோகன்.

அவர் மேலும் கூறும்போது,

“இவர்கள் கட்டண விவரங்களை நிர்வகிக்க 2,000 ரூபாய் வரை செலவிட்டு இன்வாய்ஸ் மென்பொருள் பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் நாங்கள் இந்த வணிகங்கள் கட்டணங்களை பெற்றுக்கொள்ள புதுமையான முறையில் விலை மதிப்பீடு (quotation), விலை பற்றிய விவரக்குறிப்புகள் (proforma), இன்வாய்ஸ் ஆகியவை அடங்கிய இன்வாய்ஸ் மென்பொருள் உருவாக்கினோம்,” என்றார்.

குழு, முதலீடு மற்றும் வருவாய் மாதிரி

மோகன் தனது வணிக முயற்சியில் சிறு வயது நண்பர் ஜெய்குமாரை இணை நிறுவனர் மற்றும் சிடிஓ-வாக இணைத்துக்கொண்டார். 15 பேர் கொண்ட குழுவை உருவாக்கினார்.

2

சுயநிதியில் இயங்கும் IppoPay தளத்தில் நிறுவனர்கள் இதுவரை 50 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

தற்சமயம் இதன் வணிக மாதிரி பரிவர்த்தனைகள் மூலம் பணம் ஈட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பேமெண்ட் கேட்வே மூலமாக வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும்போது மட்டும் வணிகங்கள் IppoPay நிறுவனத்திற்கு பணம் செலுத்தும்.

இந்தத் தளம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் 1 கோடி ரூபாய் அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. மாதந்தோறும் 40 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போதைய கொரோனா தொற்று சூழல் வணிகங்களிடையே எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் இதே சூழல் இந்நிறுவனத்தின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது.

சந்தையில் ஏற்புத்தன்மை

“உள்ளூர் வணிகர்கள் எங்களது சேவைகளைப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நிதி தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை நம்பகத்தன்மையை உருவாக்குவது முக்கியம். எனவே உள்ளூரில் சேவையளிப்போரை விரும்பி நாடுகின்றனர். Razorpay, Cashfree, Payu போன்றோரிடமிருந்து சேவை பெறும் வணிகர்களை மெல்ல எங்களுடன் இணைத்து வருகிறோம்,” என்றார் மோகன்.

இந்தத் துறையில் அபிரிமிதமான வளர்ச்சி இருக்கும் என்றும் ஆஃப்லைன் வணிகங்கள் ஆன்லைனில் மாறி வருவதாகவும் மோகன் குறிப்பிட்டார்.

வருங்காலத் திட்டம்

இந்திய வணிகங்களுக்கு உதவவேண்டும் என்பதே மோகனின் நோக்கம். தொழில்முனைவோர் எளிதாக ஆன்லைனிற்கு மாற உதவும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

“தமிழகத்தில் பெரும்பாலான இல்லத்தரசிகள் ஹோம்ப்ரூனார்களாக உள்ளனர். அவர்களுக்கு மின்வணிக தளம் அவசியம். ஆனால் டெவலப்மெண்ட் நிறுவனத்தை நியமிப்பதும் கடினம். ஷாப்பிஃபை போன்ற தளங்கள் செயல்பட்டாலும் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இதிலுள்ள இடைவெளியை நிரப்புகிறது IppoPay,” என்கிறார் மோகன்.

தொடர்ந்து வணிகத்தையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தி 2021-ம் ஆண்டில் தமிழகத்தில் முன்னணி வகிக்கவும் அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் செயல்படவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


தமிழில்: ஸ்ரீவித்யா