முதல் குழந்தை அரசுப் பள்ளியில், 2வது பிறந்தது அரசு மருத்துவமனையில்: 'வாவ்' கலெக்டர்!
சத்திஸ்கர் மாநிலம், கபீர்தாம் மாவட்ட ஆட்சியர் அவ்னீஷ் குமார் அரசுப் பள்ளி மற்றும் மருத்துவமனையை பயன்படுத்தி மக்களுக்கு நம்பிக்கை வழிகாட்டியாக திகழ்கிறார்.
ஆட்சியில் இருப்பவர்களும், அரசின் உயர் பதவிகளில் இருக்கும் சில அதிகாரிகள் தங்கள் அரசுப் பணி தவிர சில நேரங்களில் மக்கள் நலப்பணிகள் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு, மக்களுக்காகவே தாங்கள் என மெய்ப்பிக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வார்கள்.
அப்படிபட்டவர்தான் சத்திஸ்கர் மாநிலம், கபீர்தாம் மாவட்ட ஆட்சியரான அவினிஷ் குமார் சரண். இவர், தனது கருத்துக்கள் மற்றும் சேவைகள் மூலம் சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமாக அறியப்படுபவர்.
பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 2009ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி பிரிவு அதிகாரியாவார். கடந்த ஐனவரி 5ஆம் தேதி பிரசவ வலியால் துடித்த தனது மனைவி ருத்ராணியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்காமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது மனைவிக்கு சுகப்பிரசவமும் நிகழ்ந்தது. அழகான பெண் குழந்தை பிறந்தது. இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவி ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்தன.
அரசு அதிகாரிகளான நாம்தான் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தவேண்டும் எனக் கூறும் இவரின் முதல் குழந்தை ஓர் அரசுப் பள்ளியிலேயே பயின்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு வழங்கும் கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளை பொதுமக்கள் முன்வந்து பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் தேவை அதிகரிக்கும். இதையடுத்து அரசும் அதிகப்படியான சேவைகளை மக்களுக்கு வழங்க முன்வரும் என அவர் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், இவர் பொதுமக்கள் எப்போதும் தன்னைத் தொடர்பு கொண்டு எந்த விதமான பொது பிரச்னைகள் குறித்தும் தெரிவிக்கலாம் எனக் கூறி, தனது செல்போன் எண்ணை பள்ளிச் சுவர்கள், அரசு மருத்துவமனை சுவர்கள் போன்ற பொது இடங்களில் அச்சிட்டுள்ளார். இதன்மூலம் பள்ளிக்கு முறையாக வராத அல்லது பாடம் நடத்தாத ஆசிரியர்கள் குறித்து மாணவர்களும், மருத்துவமனைகளில் ஏற்படும் அசெளகரியங்கள், குறைபாடுகள் குறித்து கிராம மக்களும் நேரடியாக ஆட்சியரிடமே புகார் அளிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரின் இந்நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் அவ்வப்போது பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை ஆய்வு செய்யும் இவர், அங்கேயே அமர்ந்து மாணவர்களுடன் மதிய உணவும் உண்கிறார். சில நேரங்களில் வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்களுக்கு பாடமும் நடத்துகிறார். இவரின் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டம் அம்மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திட்டமாகும்.
அரசு வேலை மட்டும் வேண்டும் என விரும்பும் அனைவரும், அரசுப் பள்ளிகளையும், அரசு மருத்துவமனைகளையும் புறக்கணிப்பது ஏன் எனத் தெரியவில்லை. ஓர் சிறிய நேர்மறையான சிந்தனை மாற்றம் மொத்த சமூகத்திலும் ஓர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பும் அவினிஷ்குமார் சரண், அந்த மாற்றத்தை தன்னில் இருந்தே தொடங்கி விட்டதை அவரின் நடவடிக்கைகள் காட்டுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டபோது, சில மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த ஆட்சியர் அவினிஷ், தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து வேதனையும் வருத்தமும் தெரிவித்ததோடு, மாணவர்களை ஊக்குவிக்கும்விதமாக தனது 10, 12ஆம் வகுப்பு, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து அவர் இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு அளித்த பேட்டியில்,
“மதிப்பெண்கள் என்பவை வெறும் எண்கள்தான். இந்த எண்கள்தான் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகள், இவைதான் வாழ்க்கையின் முடிவு என எக்காரணம் கொண்டும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் நினைத்துவிடக் கூடாது. இந்த மதிப்பெண்களைத்தாண்டியும் வாழ்க்கையில் வெற்றி பெற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் மறந்து விடக்கூடாது என்பதை நிரூபிக்கவே நான் எனது மதிப்பெண்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டேன்.”
இவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 44.5%, பிளஸ் 2-வில் 65% மற்றும் பட்டப்படிப்பில் 60.7% மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இவ்வளவு குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ள நான், இந்திய குடிமைப் பணித் தேர்வெழுதி இன்று ஓர் மாவட்ட ஆட்சியராக மக்களுக்கு சேவை புரியும் போது, இன்று குறைவான மதிப்பெண்களை பெற்ற உங்களால் நாளை உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதா என மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றி, ஊக்குவிக்கிறார்.
இன்னும் 2 மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு அரசுத் தேர்வுகள் தொடங்கவுள்ள சூழ்நிலையில் மாணவர்களின் மதிப்பெண்கள் குறித்த பார்வையை மாற்றி, அவர்களை ஊக்குவித்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் இவரைப் போன்ற மக்கள் நலப் பணி மற்றும் மாணவர் முன்னேற்றப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் நிறைந்துள்ள நம் நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக ஜொலிக்கத்தான் போகிறது என்றால் அது மிகையல்ல.