ஒரேநாளில் 1.5 லட்சம் தேசிய கொடிகளை தயாரித்த ‘கொடி மாமா’ - தன் சாதனையை தானே முறியடித்து அசத்தல்!
இந்திய மக்களால் ‘கொடி மாமா’ என அழைக்கப்படும் அப்துல் கஃபார், ஒரே நாளில் 1.5 லட்சம் தேசிய கொடிகளை தயாரித்து தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.
இந்திய மக்களால் ‘கொடி மாமா’ ’Flag Uncle' என அழைக்கப்படும் அப்துல் கஃபார், ஒரே நாளில் 1.5 லட்சம் தேசிய கொடிகளை தயாரித்து தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.
இந்தியர்களின் தேசப்பக்தியை பறைசாற்றும் விதமான பல கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் சிறிய அளவில் தையல் கடை நடத்தி வரும், அப்துல் கஃபார் என்பவர் தனது தேசப்பற்றையே சாதனையாக மாற்றியுள்ளார்.
‘கொடி மாமா’ அப்துல் கஃபார்:
இந்தியாவின் ‘கொடி மாமா’ என அழைக்கப்படுவர் 71 வயதான அப்துல் கஃபார். டெல்லி சதர் பஜாரில் உள்ள சிறிய கடை ஒன்றில், தனது தையல் இயந்திரத்தின் துணையுடன் தேசிய கொடிகளை தைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார், இந்த வேலையை இவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அல்ல, 60 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
பாரத் ஹேண்ட்லூம்ஸ் கடையின் உரிமையாளரான அப்துல் கஃபார் கூறுகையில்,
”நான் உருவாக்கிய மூவர்ணக் கொடி, இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலக்கட்டத்தையும், வாஜ்பாய் அரசையும், அன்னா ஹசாரேவின் போராட்டத்தையும் கடந்துள்ளது,” என பெருமையுடன் கூறுகிறார்.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, அப்துல் கஃபாரின் கடையில் உள்ள 4 அறைகளிலும் மூவர்ண கொடிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான மூன்று நாட்களுக்கு 20 கோடி குடிமக்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக 'ஹர் கர் திரங்கா' என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
எனவே, தான் ‘கொடி மாமா’ அப்துல் கஃபாரும் தீவிரமாக மூவர்ண கொடியை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
"1975 மற்றும் அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு தேசிய கொடிகளுக்கு மிகப்பெரிய தேவை இருந்தது. ஆனால், இப்போது நடப்பது போல் நான் எப்போதும் பார்த்ததில்லை. தற்போது, மூவர்ணக் கொடிக்கான தேவை உச்சத்தில் உள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ம் தேதி நெருங்குவதை முன்னிட்டு அப்துல் கஃபார் கடையில் மட்டும் ஒருநாளைக்கு 4,000 முதல் 5,000 கொடிகளை தயாரித்து வருகின்றனர். கொடிக்கான தேவை அதிகரித்திருப்பதால், கடையில் நான்கு ஷிப்டுகளாக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கஃபாருக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதாகக் கூறும் அவரது இளைய சகோதரர் அப்துல் மாலிக் சதார், தினந்தோறும் 500 போன்களுக்கு குறையாமல் வருவதாகத் தெரிவிக்கிறார்.
"ஒரு நாளில் தயாரிக்கப்படும் கொடிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டும், இது இன்றுவரை செய்துள்ள அனைத்து சாதனைகளையும் முறியடிக்க உள்ளது. கொடிகளை உருவாக்கும் முதல் மற்றும் பழமையான கடை நாங்கள் தான் என நான் நம்புகிறேன். இது கொடிகளின் உற்பத்தி இடைவிடாமல் நடக்கும் ஒரே நேரம், வணிகம் மற்றும் லாபம் என்ற கண்ணோட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இது நம் அனைவருக்கும் ஒரு பொற்காலம் என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில், எங்களால் அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்க முடியும். மேலும், தொழிலாளர்களும் அதற்கான ஊதியத்தை பெற முடியும்,” என அப்துல் கஃபார் தெரிவித்துள்ளார்.
அப்துல் கஃபார் கடையில் தேவையை பூர்த்தி செய்வதற்காக சுமார் 600 கைவினைக் கலைஞர்கள் வேலை செய்கிறார்கள். தற்போது மூவர்ண கொடிக்கான டிமெண்ட் அதிகமுள்ள நேரம் என்பதால், முன்னர் நாள் ஒன்றுக்கு ரூ.200-250 ஊதியம் பெற்ற கைவினைஞர்கள் இப்போது ஒரு நாளைக்கு ரூ. 800-1000 வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் ஒரு தொழிலாளி இங்கு 500 முதல் 700 கொடிகளை தயாரிக்கிறார்.
தேசிய கொடிகளை தைத்து தனது நாட்டுக்கு தொடர்ந்து சேவை செய்து வரும் அப்துல் கஃபார், தான் தொழிலை லாபத்திற்காக அல்ல, தேசத்திற்காக நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி - இந்தியா டுடே | தமிழில் - கனிமொழி