‘இயற்கைச் சுற்றுலா’ மூலம் இந்த கிராமம் ரூ.1 கோடி ஈட்ட உதவிய வனத்துறை அதிகாரி!
சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்தை தொடங்கி, கடந்த 2 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது எந்த கிராமம்?
ஒடிசாவின் மகாநதி அருகே அமைந்துள்ள சிறிய கிராமம் முடுலிகாடியா. இது நயாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தற்சார்புடனும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் அமைந்துள்ள இந்த கிராமம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
மகாநதி வனவிலங்குகள் பிரிவு டிவிஷனல் வனத்துறை அதிகாரி அன்ஷு பிரக்யான் தாஸ். இவர் தனது உறுதியான, அர்ப்பணிப்புடன்கூடிய செயல்பாடுகளால் இந்த கிராமத்தை இவ்வாறு மாற்றியுள்ளார்.
சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவேண்டும். வனப் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்தவேண்டும். இந்த இரண்டு நோக்கங்களையும் இத்திட்டம் பூர்த்தி செய்கிறது.
மணலில் கூடாரம் அமைப்பது, வீடுகளைச் சுற்றி சுவரோவியங்கள் தீட்டுவது என இந்த முயற்சியால் மக்கள் ஒன்றிணைந்து நிலையான மாதிரியை உருவாக்கியுள்ளனர். அத்துடன் இந்தக் கிராமம் மாநில வனத்துறையின் உதவியுடன் சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு (EDC) நிறுவியுள்ளது.
“கிராமத்தைச் சேர்ந்த குழுவினர் என்னை அணுகினார்கள். கிராம வளர்ச்சிக்கு எப்படி முதலீடு செய்யலாம் என ஆலோசனை கேட்டனர். அப்போதுதான் சுற்றுச்சூழலுக்கு உகந்த கிராமத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது,” என்று அன்ஷு `தி பெட்டர் இந்தியா’ இடம் தெரிவித்தார்.
இன்று மொத்தமுள்ள 35 குடும்பங்களும் விறகிற்கு பதிலாக எல்பிஜி பயன்படுத்துகின்றன. இதனால் இந்தப் பகுதியில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புவாசிகள் மரங்கள், சாலைகள் மற்றும் இதர பொது இடங்களை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அழகாக மாற்ற அன்ஷுவும் அவரது குழுவினரும் ஊக்குவித்தனர்.
திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியாக இந்தக் கிராமத்தை மாற்ற கழிப்பறை கட்டுவது, குப்பைத் தொட்டிகளை அமைப்பது, தண்ணீர் இணைப்பு ஏற்படுத்துவது போன்றவற்றில் அன்ஷு கிராமமக்களுக்கு ஆதரவளித்துள்ளார்.
சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம் காரணமாக கிராம மக்களின் வாழ்க்கை முறை மேம்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது என்று EDC தலைவர் சுமந்தா தாஸ் `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்துள்ளார்.
“இயற்கை சுற்றுலாப் பகுதிகள் உள்ளூர் மக்களுக்கு கணிசமான வருவாய் ஈட்டித் தர ஆரம்பித்துள்ளது. வாழ்வாதாரத்திற்கு வனத்தில் உள்ள பொருட்களைச் சார்ந்திருந்த நிலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
ஒடிசாவின் சுற்றுச்சூழல் சுற்றுலா மாதிரியானது இந்தியாவின் சமூகம் சார்ந்த ஒரே மாதிரி ஆகும். சுற்றுலா மூலம் ஈட்டப்படும் ஒட்டுமொத்த வருவாயில் 80% ஊதியமாக சமூகத்திற்கே திருப்பியளிக்கப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதம் சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தும் பணிகளில் முதலீடு செய்யப்படுகிறது,” என்று அன்ஷு விவரித்தார்.
அன்ஷுவின் தலைமையில் இயங்கும் வனத் துறையின் ஒட்டுமொத்த வனவிலங்கு பிரிவும் கிராமத்தில் உள்ள பெரும்பாலான தனிநபர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் மாத வருவாயாக 15,000 ஈட்டியுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA