கழுதைப் பால் பண்ணை தொடங்கிய முன்னாள் ஐடி ஊழியர்: ரூ.17 லட்சத்திற்கு ஆர்டர் பெற்று அசத்தல்!
42 வயது ஸ்ரீநிவாஸ் கவுடா தனது ஐடி பணியை ராஜினாமா செய்துவிட்டு கர்நாடகாவில் கால்நடை பண்ணையை தொடங்கி இருக்கிறார். கழுதைப் பால் விற்பனையை தொடங்கிய அவருக்கு ஆர்டர் மட்டுமே ரூ. 17 லட்சத்திற்கு கிடைத்துள்ளது.
மணிக்கணக்கில் கணினித் திரையின் முன்னாள் கழியும் காலம். ஆரோக்கியமில்லாத பணிச்சூழல், குடும்பத்தினர், உற்றார் உறவினருடன் கூடி பேசுவதற்குக் கூட நேரமில்லை. பலர் இதனை சகித்துக் கொண்டு தொடர்ந்து அதே பணியில் நீடித்தாலும் இயந்திரமயமான இந்த வாழ்க்கையை கைவிட்டு சொந்தத் தொழிலை நாடி சிலர் வந்துவிடுகின்றனர்.
42 வயதான ஸ்ரீநிவாஸ் கவுடாவும் அப்படித் தான் தன்னுடைய சாப்ட்வேர்பணியை ராஜினாமா செய்துவிட்டு கால்நடைப் பண்ணையை தொடங்கி இருக்கிறார்.
பெங்களூரூ அருகே ராம்நகரைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா, BA பட்டதாரியாவார். இவர் 2020ம் ஆண்டு வரை பன்னாட்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் நல்ல சம்பளத்திற்கு பணியாற்றி வந்தவர். கொரோனா காலத்தில் அந்தப் பணிக்கு முழுக்கு போட்டவர் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, முதன்முதலில் கர்நாடகாவின் தட்சின கன்னட மாவட்டத்தின் பந்த்வால் தாலுகாவில் ஈரா என்ற கிராமத்தில் சுமார் 2.3 ஏக்கர் நிலத்தில் 'ஐசரி ஃபார்ம்ஸ்' (Aisiri Farms) தொடங்கி இருக்கிறார்.
2019ம் ஆண்டில் இந்த பண்ணையைத் தொடங்கிய போது ஒருங்கிணைந்த விவசாயம், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கான சேவைகள், தீவன வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கான மையமாக செயல்பட்டு வந்தது. அரிய வகை மற்றும் அழிந்து வரும் கால்நடைகளின் வகைகளை பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு ஐசரி பண்ணையைத் தொடங்கி இருக்கிறார் ஸ்ரீநிவாஸ்.
ஆடுகள், முயல்கள் மற்றும் கடக்நாத் கோழிகள் என்று கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக இருந்தவரின் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பது 20 கழுதைகள்.
“கழுதைகள் என்றாலே பலரும் ஏளனமாக சிரிக்கிறார்கள். அழிந்து வரும் கால்நடைகளின் பட்டியலில் கழுதைகளும் சேரப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை,” என்று கூறுகிறார் ஸ்ரீநிவாஸ்.
பொதி சுமப்பதற்காக கழுதைகளை டோபிகள் பயன்படுத்தி வந்தனர், இப்போது துணிகளை வெளுக்கும் வேலையும் குறைந்து போய்விட்டதால் கழுதைக்கான வேலையும் இல்லை. இதனால் கழுதைகள் இனம் பராமரிப்பவர்களின்றி குறைந்து வருகிறது.
“என்னுடைய பண்ணையில் கழுதைகளுக்கென தனி பண்ணை வைக்கப் போகிறேன் என்றதும் பலர் என்னைப் பார்த்து சிரித்தனர். அவர்களுக்குத் தெரியவில்லை கழுதைப் பாலுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு மவுசு இருக்கிறது என்பது. ஏனெனில் கழுதைப் பால் சுவையானவை, விலைமதிப்பானவை மற்றும் மருத்துவக் குணம் நிறைந்தவை.”
இப்போது 30 மி.லி கழுதைப் பாலை பாக்கெட்டுகளில் ரூ.150 என்கிற விலையில் விற்பனை செய்து வருகிறேன். கழுதைப் பால் விற்பனை தொடங்கிய உடனேயே சுமார் ரூ.17 லட்சத்திற்கு ஆர்டர் பெற்றுவிட்டேன். இதை ஒரு நல்ல தொடக்கமாகவே நான் பார்க்கிறேன்.
அடுத்த மாதத்தில் இதனை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அருகில் உள்ள ஷாப்பிங் மால்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கச் செய்ய திட்டமிட்டுள்ளேன் என்கிறார் ஸ்ரீநிவாஸ்.
எல்லோருக்கும் எளிதில் கழுதைப் பால் கிடைக்கச் செய்வதே என்னுடைய நோக்கம் என்று கூறும் இவர் மருத்துவ குணம் நிறைந்துள்ளதால் இவை அழகுச் சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே அத்தகைய தேவை இருக்கும் நிறுவனங்களை அணுகிப் பேசி வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார் இவர்.
ரூ.42 லட்சம் முதலீட்டில் தொடங்கிய ஐசிரி பார்ம்ஸில் கால்நடைகள் பல வளர்க்கப்பட்டு வந்தாலும், இவரின் தற்போதைய சேர்ப்பான கழுதைப் பால் பண்ணை இவரை மக்கள் மத்தியில் மீடியாக்கள் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றன. ஏனெனில் கேரளாவின் எர்ணாகுளத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது கழுதைப் பால் பண்ணை அமைந்திருப்பது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்