எலக்ட்ரிக் ஃபார்முலா ஒன் ரேஸ் கார் - ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் அசத்தல் தயாரிப்பு!
ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் முதன் முறையாக மின்சாரத்தில் இயக்கக்கூடிய பார்முலா ஒன் ரேஸ் காரை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் முதன் முறையாக மின்சாரத்தில் இயக்கக்கூடிய ஃபார்முலா ஒன் ரேஸ் (electric formula one race car) காரை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐஐடி மெட்ராஸ் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், இந்தியாவில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பாளர்களே ஆச்சர்யத்தில் வாய்பிளக்கும் அளவிற்கு எலெக்ட்ரிக் ஃபார்முலா ஒன் ரேஸ் காரை ஐஐடி மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் ரஃப்தார் டீம்:
சென்னை ஐஐடி-யில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 45 மாணவர்களைக் கொண்ட Raftar டீம் உள்ளது. ஐஐடி மெட்ராஸ் புத்தாக்க மையத்தின்(Centre for Innovation) போட்டிக் குழுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஃபார்முலா மாணவர்களுக்கான குழுவான இது, ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு எதிரான ஃபார்முலா மாணவர் போட்டிகளில் பங்கேற்று வருகிறது.
தொழில்துறை தரத்தில் நடைமுறைகளை மேம்படுத்தவும், பொறியியல் மாணவர்களிடையே உலகத்தர தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வளர்க்கவும் சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த குழுவானது, ’இந்தியாவிலேயே முதன் முறையாக மின்சக்தியில் இயக்கக்கூடிய ஃபார்முலா ஒன் ரேஸ் காரை’ வடிவமைத்துள்ளது.
இ- ஃபார்முலா ஒன் ரேசிங் கார்:
கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே பந்தயக் களத்தில் ஜனவரி-2023ல் நடைபெறும் 'ஃபார்முலா பாரத்' நிகழ்வில் ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த மாணவர்கள் குழு பங்கேற்க உள்ளது.
இதற்காக பிற உள்எரிப்பு இயந்திர மாதிரிகளை விட, மின்சாரம் மூலம் அதிக உந்துதலுடன் செயல்படக்கூடிய "RFR 23" என்ற ஃபார்முலா ஒன் ரேஸ் காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது,
"நிலைத்த போக்குவரத்தை நோக்கி உலகளவிலான போக்கு இருப்பதால், தற்போது உள்ள எரிப்பு வாகனங்கள் மின்சார (combustion to electric) வாகனங்களாக விரைந்து மாற்றம் செய்யப்படுவது தேவையின் அவசியமாகிறது. உலகளவில் மின்சார வாகனத் தொழில் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், இதன் வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் மிகப் பெரிய சாத்தியக் கூறுகள் உள்ளன," எனத் தெரிவித்தார்.
கோவையை அடுத்து ஆகஸ்ட் 2023ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகின் மதிப்புமிக்க ஃபார்முலா மாணவர் நிகழ்வான 'ஃபார்முலா ஸ்டூடண்ட் ஜெர்மனி'க்கு இந்தக் காரை கொண்டு செல்ல இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலமாக உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அணிகளுக்கு இணையாக மின்சாரம் மூலம் இயக்கக்கூடிய ஃபார்முலா ஒன் ரேசிங் காரை களமிறக்க உள்ளது.
மாணவர்களை வாழ்த்திப் பேசிய ஐஐடி மெட்ராஸ் டீம் ரஃப்தாரின் ஆசிரிய ஆலோசகர் பேராசிரியர் சத்தியநாராயணன் சேஷாத்ரி,
"ஓட்டுநர் இல்லாத கார்கள், போக்குவரத்து சாதனங்களை இணைக்கும் தொழில்நுட்பம் போன்ற எதிர்காலக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் தளமாக ரஃப்தார் விரைவில் அமையும். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் காலநேரம் பார்க்காமல் இரவுபகலாக மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகவே 'RFR 23' உருவாக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் விடாமுயற்சியின் உச்சமாக இந்தக் காரைக் குறிப்பிடலாம்," என்றார்.
ஐஐடி மாணவர்களின் அடுத்த இலக்கு:
ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வரும் ரஃப்தார் டீம் மாணவர்கள், அடுத்ததாக தானியங்கி ரேஸ் கார் மீது தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர். உலக அளவில் சிறப்பான செயல் திறன், குறைவான செலவு, வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய தானியங்கி வாகனத்தை கண்டுபிடிக்க உள்ளனர்.
2025ல் ஓட்டுநர் இல்லாத பந்தயக் காரை (Driverless race car) மேம்படுத்துவதை நோக்கி பயணிப்பதுடன், ஃபார்முலா மாணவர் நிகழ்வுகளில் ஓட்டுநர் இல்லாத பிரிவில் டீம் ரஃப்தார் பங்கேற்கும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதலாவது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான சக்தி பிராசசரை இணைக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டு உள்ளனர். கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் பிராசசிங், EVல் இருந்து DVக்கு தடையற்ற மாற்றம் செய்தல் போன்றவற்றில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
விவசாய விளை பொருட்களை எடுத்து செல்லும் இயந்திரம் - ஐஐடி மெட்ராஸ் கண்டுபிடிப்பு!