மக்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் இலவச குடிநீரை வழங்கும் சமூக ஆர்வலர்!
குடிநீரை காசு கொடுத்து வாங்கும் அவலை நிலையில் உள்ள நம்மிடையே, தினமும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு தன் வீட்டில் இருந்து இலவசமாக குடிநீர் வழங்கும் காசிராஜன்!
தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட தராத சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். முன்பெல்லாம் அறிமுகம் இல்லாத நபர்களுக்குக் கூட தாகத்துக்கு தண்ணீர் கொடுத்து வந்த நம் மக்களுக்கு, இன்று காசு கொடுத்தாலும்கூட பயன்படுத்த தண்ணீர் கிடைக்காத சூழலில் பிறருக்கு எங்கே தண்ணீர் இறவல் தருவது என்கிற நிலைதான் நிலவி வருகிறது.
அதிலும் இந்த ஆண்டு கோடையில் வழக்கத்தைவிட வெயில் வாட்டி வதைக்க, மக்கள் தண்ணீருக்காக அலைந்து திரிந்து தவித்து வருகின்றனர். ஆனால் மக்கள் தண்ணீருக்காக குடங்களைத் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைவதைப் பார்த்து மனம் கலங்கிய சமூக ஆர்வலர் ஒருவர், தன் வீட்டுக் கிணற்றில் மழைநீரைச் சேகரித்து, அந்த நீரை இயந்திரத்தின் உதவியோடு சுத்திகரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் காசிராமன் (45). இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயம் செய்து வரும் இவர் இதுகுறித்து நம்மிடம் கூறியதாவது,
கடந்த 300 ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை மிகவும் தவறானதாகும். நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்தனர். அதனால் மாதம் மும்மாரி பொழிந்தது. நாடு செழிந்திருந்தது.நீரின்றி அமையாது உலகு என்றான் வான்புகழ் கொண்ட வள்ளுவன். நாம் இதனையெல்லாம் மறந்துவிட்டு இயற்கைக்கு முரணான செயற்கை வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்,” என்கிறார்.
காசிராமன் பள்ளிக் கல்வியை மட்டுமே முடித்தவர். ஆனால் படித்து பட்டம் வாங்கிவிட்டு, பணத்தின் பின்னால் ஓடும் இக்கலிகாலத்தில், மக்கள் பணி என்னும் அறத்தின் பின்னால் ஓட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள், ஏரிகள், கிணறுகள் போன்றவற்றைத் தூர்வாரி மழைநீரைச் சேமிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
மழை பெய்து நம் வீட்டின் முன்னோ, பின்னோ மழைநீர் தேங்கினால், அங்கே மண் போட்டு மேடாக்கி மழை நீரை வடிய விடுவதுதான் மக்களின் வழக்கம். ஆனால் இவரோ தனது வீட்டின் பின்பகுதியில் நீலத்தடிநீர் மட்டம் உயர வேண்டும் என ஓர் குட்டை அமைத்து அதில் மழைநீரைச் சேமித்து வைத்துள்ளார்.
அனைத்துக்கும் மேலே ஓர்படி கூடுதலாகச் சென்று தன் வீட்டுக் கிணற்றில் மழைநீரைச் சேமித்து, அந்த நீரை இயந்திரத்தின் துணை கொண்டு சுத்திகரித்து, பொதுமக்களுக்கு இவர் இலவசமாக விநியோகிக்கிறார்.
இவரது வீட்டின் முன் பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் பிடித்துச் செல்லலாம். இவரின் இச்சேவையால் திருவெண்காடு பகுதி மட்டுமன்றி, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
தினசரி எவ்வளவு பேருக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் வழங்குகிறீர்கள் என நாம் கேட்டபோது, தாய் தன் குழந்தை எத்தனை இட்லி சாப்பிடுகிறது என கணக்கு பார்ப்பாளா, அதுபோலத்தான் நானும்.
“யாருக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நீரை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். வானம் மாரியாகப் பொழிந்து நீரை வழங்குகிறது. என் முன்னோர்கள் வெட்டிய இக்கிணற்றில் அட்சயப் பாத்திரம் போல தண்ணீர் ஊறுகிறது. பிறகு நான் ஏன் கணக்கு பார்க்கவேண்டும்,” என்கிறார்.
இவர் மழைக்காலத்தில் தண்ணீரில் மூலிகைகளை கலந்து மக்களுக்கு பருக அளிக்கிறார். இதேபோல வெயில் காலத்தில் வெந்தயம், கருஞ்சீரகம் போன்றவை கலந்த தண்ணீரை மக்களுக்கு வழங்கி வருகிறார். மேலும், தன் வீட்டின் முன் மற்றும் பின்பகுதிகளில் பறவைகள் வந்து தாகம் தீர்த்து இளைப்பாற அவற்றுக்கும் சிறுசிறு கலயங்களில் தண்ணீர் வைத்துள்ளார்.
மேலும், அப்பகுதிகளில் மரம் நடுவது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்.
மனிதர்கள் பணத்தின் பின்னால் ஓடி வாழும் வாழ்க்கை வாழ்க்கையல்ல. அறத்தின் வழி வாழ வேண்டும் என்பதே என் கருத்தாகும். நம் முன்னோர்கள் நமக்கு வகுத்த பாதையை மறந்து, வேறு பாதையை மாற்றி நமது அழிவுக்கு நாமே வழிவகுத்துக் கொண்டோம், என வேதனை படுகிறார்.
நம் தலைமுறையிலாவது காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலையில் நாம் உள்ளோம். ஆனால் இனி அடுத்து வரும் எதிர்காலத் தலைமுறை தண்ணீருக்கு என்ன செய்யும் என்பதை நாம் யோசிக்கத் தவறிவிட்டோம்.
எனவே இன்றே நாம் நம் அருகில் இருக்கும் குளம், குட்டை, ஏரிகளைத் தூர்வார வேண்டும். அதிக அளவில் மரங்களை வளர்த்து மழை வளம் பெருக பாடுபடவேண்டும். இல்லையென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாய் பரிணாம வளர்ச்சியடைந்து வந்த இந்த மனித இனம் நம் அசட்டையாலும், இயற்கையை மறந்த இந்த வாழ்க்கையினாலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது என்று முடிக்கிறார்.