600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்’ வணிகம் உருவாக்கிய நண்பர்கள்!
நண்பர்களான சுனில் ஸ்ரீனிவாசன் சாரி, எட்வர்ட் வால்டர் மெனெசெஸ் இருவரும் ஜவுளித் துறைக்குத் தேவையான ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கி சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளனர்.
சுனில் ஸ்ரீனிவாசன் சாரி, எட்வர்ட் வால்டர் மெனெசெஸ் இருவரும் நண்பர்கள். டெக்ஸ்டைல் பிராசசிங், சாயப்பொருட்கள், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் துறை போன்றவற்றில் பணியாற்றிய அனுபவமிக்கவர்கள். இதனால் இதே துறையில் தொழில் தொடங்கத் திட்டமிட்டனர்.
உள்ளூர் தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் விநியோகிப்பது தொடர்பாக தொழில் தொடங்க முடிவெடுத்தார்கள்.
1997-ம் ஆண்டு இந்த எண்ணம் தோன்றியபோதும் 2003-ம் ஆண்டு முறையாக Rossari Labtech என்கிற நிறுவனத்தைப் பதிவு செய்தார்கள்.
“ஆரம்பகட்டமாகத் தயாரிப்புப் பணிகளுக்காக சில்வாசா பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் முதலீடு செய்தோம். பின்னர் 2009-ம் ஆண்டு Rossari Biotech Limited என பெயர் மாற்றம் செய்தோம். அதன் பிறகே தயாரிப்பில் புதுமை புகுத்துவது, செயல்முறைகளை மேம்படுத்துவது, ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பிரிவில் தனித்தேவைக்கேற்ற தீர்வுகளை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கினோம்,” என்கிறார் Rosssari நிர்வாக இயக்குநர் சுனில்.
அப்போதிருந்து இந்த நண்பர்கள் Rossari நிறுவனத்தை மிகப்பெரிய ‘மேட் இன் இந்தியா’ ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் உற்பத்தியாளர்களாக வளர்ச்சியடையச் செய்துள்ளனர்.
ஜவுளித் துறைக்கான ரசாயனங்களில் தொடங்கி வீட்டு உபயோகம், தனிநபர் பராமரிப்பு, விலங்குகள் ஆரோக்கியம், ஊட்டச்சத்து போன்ற பிரிவுகளில் சேவையளிக்கும் வகையில் விரிடவடைந்துள்ளது.
BSE, NSE பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனம், 2020 நிதியாண்டில் 600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
சுனில் ஸ்ரீனிவாசன் சாரி, எட்வர்ட் வால்டர் மெனெசெஸ் இருவரும் தங்கள் வணிக வளர்ச்சியைக் குறித்து எஸ்எம்பிஸ்டோரி இடம் பகிர்ந்துகொண்டனர். அந்த நேர்காணலின் தொகுப்பு இதோ:
எஸ்எம்பிஸ்டோரி: Rossari ஆரம்ப நாட்கள் எப்படி இருந்தன?
சுனில்: அதிக நேரமும் பணமும் வீணாகாத வகையில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் வழங்குவதற்கான தேவை இருந்ததை உணர்ந்தோம். நாங்கள் சிறியளவில் தொடங்கினாலும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்டோம்.
எங்கள் பேராசிரியர் ஆலோசனையின்படி வழக்கமான, மலிவான தயாரிப்பாக இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுமையான தயாரிப்பாக உருவாக்கினோம். ஜவுளித் துறை சார்ந்த தீங்கு நிறைந்த ரசாயனங்களுக்கான பசுமையான மாற்றாக எங்கள் தயாரிப்பு உருவானது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வணிக மாதிரி என்ன? உங்கள் தனித்துவமான வணிக உத்திகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
எட்வர்ட்: நாங்கள் எப்போதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.
எங்கள் தயாரிப்பு தனித்துவமானதாக இருக்கவேண்டும்; தேவைக்து ஏற்றவாறு இருக்கவேண்டும்; சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கவேண்டும்; நியாயமான விலையுடன் இருக்கவேண்டும்; இவையே எங்கள் நோக்கம்.
ரசாயனங்கள் தொடர்பான தீர்வளித்துத் தூய்மையான, ஆரோக்கியமான உலகை உருவாக்குவதில் பங்களிக்க விரும்புகிறோம். அனைத்து வகையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்ய விரும்புகிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: வெவ்வேறு கெமிக்கல் பிரிவுகளுக்கு எவ்வாறு விரிவடைந்தீர்கள்?
எட்வர்ட்: ஆரம்பத்தில் இருந்து ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் துறையில் நாங்கள் கவனிக்கும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு எங்கள் உத்திகளையும் மாற்றியமைத்து வருகிறோம். தற்போது நாங்கள் முன்னணி அக்ரிலிக் பாலிமர் தயாரிப்பாளராக செயல்படுகிறோம். கிட்டத்தட்ட 300 தயாரிப்புகளை உற்பத்தி செய்து வீட்டு உபயோகம், தனிநபர் பராமரிப்பு, பெர்ஃபாமன்ஸ் கெமிக்கல் (HPPC) பிரிவு போன்ற முக்கியத் துறைகளுக்கு சேவையளிக்கிறோம்.
பி2பி பிரிவில் முக்கிய கவனம் செலுத்தினாலும் மின்வணிகத்திலும் செயல்படத் தொடங்கியுள்ளோம். அமேசான் இந்தியா தளத்தில் எங்கள் தயாரிப்புகள் கிடைக்கின்றன. கூடுதலாக மற்ற தளங்களிலும் செயல்பட்டு வருவாயை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும் செல்லப்பிராணிகளுக்கான உணவு மற்றும் பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்புப் பிரிவிலும் சேவையளிக்கிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: தயாரிப்புப் பணிகள் எங்கே நடைபெறுகின்றன? சொந்த தொழிற்சாலைகள் இயங்குகின்றனவா?
எட்வர்ட்: Rossari Biotech தயாரிப்புகளில் பெரும்பாலானவை ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்புகள். இவை சில்வசா மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. இது 1,20,000 MTPA திறன் கொண்டது.
தயாரிப்புகளின் வகைகள் அதிகரித்த சூழலில் சில்வசா பகுதியில் உள்ள தொழிற்சாலையின் திறன் போதவில்லை. எனவே 1,32,500 MTPA திறன் கொண்ட தொழிற்சாலையைத் தஹேஜ் பகுதியில் தொடங்கினோம்.
தஹேஜ் தொழிற்சாலை முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன வசதிகள் கொண்டுள்ளது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் ரசாயனங்களின் தனித்துவமான அம்சங்கள் என்ன?
எட்வர்ட்: குறிப்பிட்ட வணிகங்களின் பிரத்யேக தேவையைக் கருத்தில் கொண்டு எங்கள் ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், சரியான நேரத்தில், பிரத்யேகமாக தீர்வளிப்பதே எங்கள் செயல்பாடுகளின் தனித்துவமான அம்சமாகும்.
தரத்தைப் பொருத்தவரை சர்வதேச தரநிலைகளின்படி செயல்படுவதால் பல்வேறு நாடுகளுக்கு விநியோகச் சங்கிலி பார்ட்னராக உள்ளோம். இந்தியாவில் ஜவுளித் துறை சார்ந்த ரசாயனங்களைப் பொருத்தவரை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் வழங்கும் வெகு சில நிறுவனங்களில் நாங்களும் ஒருவர்.
கார்பன் தடத்தைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பசுமையான முறையில் தயாரிக்கிறோம். குளோபல் ஆர்கானிக் டெக்ஸ்டைல் ஸ்டாண்டர்ட் (GOTS), ZDHC போன்றவற்றில் முதலீடு செய்து தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் வெளியேற்றத்தை முற்றிலுமாகத் தவிர்ப்பதை உறுதிசெய்கிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் போட்டியாளர் யார்?
எட்வர்ட்: நாங்கள் பல்வேறு பிரிவுகளின்கீழ் செயல்பட்டு வருவதால், நாங்கள் புதுமையான தயாரிப்புகளைத் திறம்பட உருவாக்க சக நண்பர்கள் ஊக்குவிக்கின்றனர். அதேசமயம் Achroma, Dystar, Huntsman, Zydus, Pedigree போன்ற போட்டியாளர்களும் உள்ளனர்.
ஐஐடி பொவாய் ஆய்வகத்தில் பல்வேறு புதுமையான தீர்வுகளை நாங்களை உருவாக்கி வருகிறோம். இதுபோல் புதுமையானத் தீர்வுகளைத் தொடர்ந்து வழங்கி வருவதே போட்டியாளர்களிடமிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. சந்தை தேவைகளை முறையாகக் கணித்துத் தொடர்ந்து புதுமை படைப்பதே 23 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டிகளைத் திறம்பட எதிர்கொள்ள உதவுகிறது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
எட்வர்ட்: எங்கள் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் நிதி, கட்டமைப்பு என பல்வேறு சவால்களை சந்தித்துள்ளோம். ஒவ்வொரு கட்ட விரிவாக்கப் பணிகளையும் முறையான உத்திகள் வகுத்து மேற்கொண்டு வருகிறோம்.
தொழில்நுட்பத் திறன்கள், அறிவியல் ரீதியான அறிவாற்றல், உற்பத்தித் திறன், தொழில்முனைவு ஈடுபாடு ஆகியவற்றுடன் எங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறோம்.
கடந்த ஆண்டு பொதுப் பங்கு வெளியீடு அறிவித்தபோது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சிறிது காலம் காத்திருந்திருந்தபோதும் துணிந்து சந்தையை எதிர்கொண்டோம்.
எஸ்எம்பிஸ்டோரி: கோவிட் உங்கள் வணிகத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது? உங்கள் வருங்காலத் திட்டங்கள் என்ன?
சுனில்: கோவிட்-19 நிச்சயம் அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை. எங்கள் சந்தையிலும் தேவை குறைந்தது.
சற்றும் தாமதிக்காமல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத் தயாரிப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். ஈஆர்பி டூல்களில் நாங்கள் முதலீடு செய்திருந்தது பலனளித்தது. தொலைதூரத்தில் இருந்தே குழுக்கள் பணிகளை முறையாக நிர்வகிக்க முடிந்தது.
நீண்ட கால அடிப்படையில் வீட்டு உபயோகம் மற்றும் தனிநபர் பராமரிப்பு தொடர்பான மக்களுடைய கண்ணோட்டம் மாறியுள்ளது. இதற்கான தயாரிப்புகள் ஏற்கெனவே எங்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளதால் இது சிறந்த பலனளிக்கும்.
கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக சுகாதாரப் பொருட்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் சானிட்டரி தயாரிப்புகளுக்கான தேவை குறைந்தாலும்கூட எங்களது மற்ற வணிகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்பதால் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவோம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா