ரூ.2,563 கோடி டர்ன்ஓவர் ஈட்டும் 80'களில் 5 நண்பர்கள் தொடங்கிய மும்பை நிறுவனம்!

By YS TEAM TAMIL
November 30, 2020, Updated on : Tue Dec 01 2020 11:05:21 GMT+0000
ரூ.2,563 கோடி டர்ன்ஓவர் ஈட்டும் 80'களில் 5 நண்பர்கள் தொடங்கிய மும்பை நிறுவனம்!
சர்ஃபக்டெண்ட் தயாரிக்கும் நிறுவனமான Galaxy Surfactants 80-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

2019-2025 ஆண்டுகளிடையே இந்தியாவின் சர்ஃபக்டண்ட் (Surfactant) சந்தை 5.38 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என்கிறது Industry Arc. சர்ஃபக்டண்ட் என்பது வீடுகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற பகுதிகளில் சுத்தப்படுத்துவதற்கும் தனிநபர் பராமரிப்புப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு ரசாயனம். இது ஷாம்பூ, ஃபேஸ்வாஷ், சோப்பு, டிடெர்ஜெண்ட், எமல்சிஃபையர் போன்றவற்றை தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.


வெவ்வேறு துறையைச் சேர்ந்த நிபுணர்களான சேகர், கீரா ராமகிருஷ்ணன், சாஷி ஷன்பாக், ராமகிருஷ்ணா, சுதிர் பாடீல் ஆகிய ஐந்து நண்பர்கள் ஒன்றிணைந்து Galaxy Surfactant நிறுவனத்தை நிறுவியுள்ளார்கள்.


இவர்களில் இணை நிறுவனர்களான ராமகிருஷ்ணா, சுதிர் பாடீல் இருவரும் மறைந்துவிட்டனர். கீரா ராமகிருஷ்ணன், சாஷி ஷின்பாக் இருவரும் வணிகத்தில் இருந்து விலகிவிட்டனர். எனவே சேகர் தனியாகவே வணிகத்தை நடத்தி வருகிறார்.


கெவின்கேர், கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா), டாபர் இந்தியா, ஹென்கெல், ஹிமாலயா, லாரியல், பிராக்டர் & கேம்பிள், ரெக்கிட் பென்கிசர், ஆயுர் ஹெர்பல்ஸ் (பிரைவேட்), ஜோதி லேபராடரீஸ், யூனிலிவர் போன்ற நிறுவனங்களுக்கு Galaxy Surfactant சேவையளிக்கிறது.

2020 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் டர்ன்ஓவர் 2,563 கோடி ரூபாய். தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Galaxy Surfactant நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் உற்பத்தி துறையைப் பொருத்தவரை தற்சார்புடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் நிர்வாக இயக்குநர் யூ சேகர் எஸ்எம்பிஸ்டோரி உடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.

1

அவருடனான உரையாடலின் தொகுப்பு இதோ:


எஸ்எம்பிஸ்டோரி: வெவ்வேறு பின்னணி கொண்ட ஐந்து நண்பர்கள் எப்படி ஒன்றிணைந்து சர்ஃபக்டண்ட் வணிகத்தைத் தொடங்கினீர்கள்?


சேகர்: நானும் என் நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்துதான் இந்த வணிகத்தைத் தொடங்கினோம். இது தற்செயலாக நடந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் கெமிக்கல் என்ஜினியரிங், ஃபார்மசி, அக்கவுண்டன்சி என வெவ்வேறு துறைகளில் செயல்பட்டு வந்தோம். ஆனால் எங்கள் அனைவருக்குமே தொழில்முனைவு கனவு என்பது பொதுவானதாக இருந்தது. ஆனால் எந்தத் துறையில் செயல்படலாம் என்பதில் தெளிவு இல்லாமல் இருந்தது.

நாங்கள் அனைவருமே நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படிப்பு மட்டுமே எங்களது மூலதனமாக இருந்தது. நாங்கள் அனைவரும் பல முறை ஒன்றாக சந்தித்து வணிக முயற்சி குறித்து கலந்துரையாடினோம். தயாரிப்புத் துறையில் செயல்படுவது என்று தீர்மானித்தோம்.

அந்த சமயத்தில் கீரா ராமகிருஷ்ணன் கோல்கேட்-பால்மோலிவ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நாங்கள் இருவரும் சென்று நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவின் தலைவரை சந்தித்தோம். கோல்கேட் தொடர்புடைய தயாரிப்புகளில் ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டோம். “சோடியம் லாரெத் சல்ஃபேட் (Sodium Laureth Sulphate - SLES) தயாரிக்க முடியுமா?” என்று அவர் கேட்டார். எனக்கு அது பற்றி தெரியாது என்றாலும் சம்மதித்தேன்.


ஷாம்பூ தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் SLES TLS தயாரிப்பிற்கு அதிக முதலீடு தேவைப்படாது என்றும் அவர் எங்களிடம் கூறினார். நான் கெமிக்கல் என்ஜினியர் என்பதால் இந்தப் பிரிவு குறித்த புரிதல் ஓரளவிற்கு இருந்தது. இந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு பற்றி புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொண்டேன். உள்ளூரில் கிடைத்த மூலப்பொருட்களை வாங்கினேன். மும்பையில் இருந்த என் நண்பரின் ஆய்வகத்தில் கெமிக்கலை தயாரிக்கத் தொடங்கினேன்.


விரைவில் எங்கள் தயாரிப்பிற்கு கோல்கேட் பச்சைக்கொடி காட்டியது. வங்கியில் கடன் வாங்கினோம். நாங்கள் ஒவ்வொருவரும் 20,000 ரூபாய் முதலீடு செய்தோம். இந்தத் தொகையைக் கொண்டு 1980-ம் ஆண்டு Galaxy Surfactants தொடங்கினோம்.

2

எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் நிறுவனத்திற்கு சொந்தமாக எத்தனை தொழிற்சாலைகள் இயங்குகின்றன? ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் என்ன?


சேகர்: மகாராஷ்டிராவில் தலோஜா மற்றும் தாராபூர், குஜராத்தில் ஜகாதியா, அமெரிக்கா, எகிப்து என ஐந்து தொழிற்சாலைகள் உள்ளன. 1980-ம் ஆண்டில் எங்கள் உற்பத்தித் திறன் 30 மெட்ரிக் டன்னாக இருந்தது. இன்று 4,00,000 டன்னாக அதிகரித்துள்ளது. 205-க்கும் அதிகமான வகைகளைத் தயாரிக்கிறோம். இந்தியா மற்றும் இதர நாடுகளில் 1,750 வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறோம். 80-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.


எஸ்எம்பிஸ்டோரி: 80-களில் தொழில்முனைவு சுற்றுச்சூழல் எப்படி இருந்தது? இத்தனை ஆண்டுகளாக இதில் தொடர்ந்து செயல்பட எது உந்துதலாக இருந்தது?


சேகர்: 80-களில் நிதி, மூலப்பொருட்கள் போன்றவற்றிற்கான பற்றாக்குறை இருந்தது. வங்கிகள் 18-19 சதவீதம் வட்டி வசூலித்தன. மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்தது. ஷாம்பூக்கள் போன்றவை ஆடம்பர பொருட்களாக கருதப்பட்டதால் 117.5 சதவீதம் சுங்க வரி விதிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தனிநபர் வீட்டு பராமரிப்புப் பொருட்கள் பிரிவில் அதிக வாய்ப்புகள் இருந்தன. இதுவே எங்களைத் தொடரந்து செயல்படவைத்தது. இந்தத் துறையில் தரத்திற்கும் சேவைக்கும் மதிப்பளிக்கப்பட்டது. அதன் பின்னரே 1991ம் ஆண்டு தாராளமய கொள்கைகள் அறிமுகமாகின.

வாடிக்கையாளர் சேவையில் தொடர்ந்து கவனம் செலுத்தி புதுமைகளையும் தொடர்ந்து புகுத்தி வந்தோம். சர்வதேச தரத்துடன் சேவையளித்தோம்.

3

எஸ்எம்பிஸ்டோரி: எந்த ஆண்டு உலகளவில் செயல்படத் தொடங்கினீர்கள்? நிலையான வணிக மாதிரியை அமைக்க உலகளாவிய செயல்பாடுகள் எப்படி உதவியது?


சேகர்: 1997ம் ஆண்டு உலகளவில் செயல்படத் தொடங்கினோம். பின்னர் ஜகாடியா, எகிப்து ஆகிய பகுதிகளில் புதிய கிரீன்ஃபீல்ட் பிராஜெக்ட் அமைக்க 500 கோடி ரூபாய் முதலீடு செய்தோம். இதனால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, துருக்கி ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களை அணுகும் வாய்ப்பு கிடைத்தது. Galaxy நிறுவனத்தை உலகளவில் செயல்படும் இந்திய பன்னாட்டு நிறுவனமாக நிறுவினோம்.


அமெரிக்காவில் ஸ்பெஷாலிட்டி புரோட்டீன் டிவிஷனை கையகப்படுத்தியதும் அதன் புதிய ஸ்பெஷாலிட்டி மாலிக்யூல் பாஸ்கெட் உருவாக்கியது அடுத்த பத்தாண்டு கால (2010-2020) வளர்ச்சிக்கு உதவியது.

மூன்றில் இரண்டு பங்கு வணிகம் சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. வணிகத்தை நிலைப்படுத்த சர்வதேச அளவில் செயல்படுவது முக்கியம். அதிலும் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்படவேண்டும்.

உலகளவில் சிறப்பாக போட்டியிட அடுத்தடுத்த கட்டமாக வளர்ச்சியடைவது முக்கியம். வெளிநாடுகளில் நாங்கள் அமைக்கும் தொழிற்சாலைகள் இந்தியாவில் இருப்பதைக் காட்டிலும் இருமடங்கு திறன் கொண்டதாக அமைந்திருக்கும். உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்ய இது உதவுகிறது.


மற்றொரு முக்கிய அம்சம் விரைவாக செயல்படவேண்டும். உலகளவில் விநியோகச் சங்கிலியை அமைத்த அதேசமயம் தொடர்ந்து நிலையாக செயல்பட்டோம். இதுவே சந்தையில் நிலவும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ள உதவியது.


உதாரணத்திற்கு கடந்த ஐந்தாண்டுகளாக கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை அடைந்துள்ளோம்.


எஸ்எம்பிஸ்டோரி: இத்தனை ஆண்டுகளில் உங்கள் செயல்பாடுகளில் எவ்வாறு புதுமைகளை புகுத்தியுள்ளீர்கள்?


சேகர்: நீண்ட கால செயல்பாடுகளுக்கு புதுமை இன்றியமையாதது. எங்கள் வணிகம் எங்கள் வாடிக்கையாளர்களுடன் வளர்ச்சியடைந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படவேண்டும் என்பதை இத்தனை ஆண்டுகளில் உணர்ந்தேன். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற தயாரிப்பை உருவாக்கும் திறன் உங்களிடம் இருக்கவேண்டும். சர்வதேசத் தரத்துடன் இருக்கும் வகையில் தயாரிப்பை உருவாக்கவேண்டும்.

மக்கள் சுகாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதிக ரசாயனங்கள் சேர்க்கப்படாத பாதுகாப்பான ஷாம்பூக்களையே மக்கள் விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே நாங்கள் அமினோ அமிலம் கொண்டு தயாரிக்கப்படும் மிதமான சர்ஃபக்டண்ட் தயாரிக்கத் தொடங்கினோம். இந்தத் தயாரிப்பு பசுமையான மூலப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது.


ஷாம்பூ, ஃபேஸ்வாஷ் மற்றும் இதர தயாரிப்புகள் சுத்தமாகவும் நறுமணத்துடன் இருக்க நச்சுத்தன்மை இல்லாத பதப்படுத்தும் பொருட்களை அறிமுகப்படுத்தினோம்.

4

எஸ்எம்பிஸ்டோரி: கோவிட்-19 உங்கள் வணிகத்தை எவ்வாறு பாதித்துள்ளது? உங்கள் வருங்காலத் திட்டம் என்ன?


சேகர்: சுகாதாரமான, பாதுகாப்பான தயாரிப்புகளுக்கான தேவையை கோவிட்-19 அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் சுத்தப்படுத்தும் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இருப்பினும் உலகளவில் விநியோகச் சங்கிலி தடைபட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு முழுவீச்சில் சேவையளிக்க முடியவில்லை.


தொடர்ந்து எங்கள் தயாரிப்பு தொகுப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக பசுமையான பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் மிதமான சர்ஃபக்டெண்ட் பிரிவில் கவனம் செலுத்த உள்ளோம். மேலும் சந்தையை விரிவுபடுத்தவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் விரிவடைவதிலும் கவனம் செலுத்த உள்ளோம்.


ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கவுஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா