குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள்: தொழில்முனைவோராகி ஆண்டுக்கு 36 லட்ச ரூபாய் ஈட்டும் தோழிகள்!
2016-ம் ஆண்டு வந்தனா கலாகரா தொடங்கிய Keebee Organic குழந்தைகளுக்கான ஆடைகளை ஆன்லைனில் விற்பனை செய்து 36 லட்ச ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளது.
வந்தனா கலாகரா, ஸ்மிருதி ராவ் இருவரும் ஒன்றாகப் படித்தனர். ஒன்றாகப் படித்தவர்கள் தொழிலிலும் ஒன்றாக இணைந்து கலக்கி வருகின்றனர்.
இவர்கள் Keebee Organic இணை நிறுவனர்கள். இந்நிறுவனம் குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகளைத் தயாரித்து சொந்த வலைதளம் மூலமாகவும் Myntra, FristCry, Nestery போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறது.
தொடக்கம்
வந்தனா NIFT கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தார். அமெரிக்காவின் FIDM கல்வி நிறுவனத்தில் ஃபேஷன் டிசைன் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சில ஆண்டுகள் ஃபேஷன் துறையில் வேலை செய்தார்.
வந்தனாவிற்குத் திருமணம் முடிந்தது. குழந்தை பிறந்த பிறகு பணியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.
“வேலையில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்ட சமயத்தில் டிசைன் வேலைகளை ஃப்ரீலான்ஸ் முறையில் செய்து வந்தேன். குழந்தைகளுக்கான ஆடைகளை வடிவமைப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்,” என்கிறார் வந்தனா.
வந்தனா தனது மகளை நர்சரி பள்ளியில் சேர்த்தார். அந்த சமயத்தில் ஒருமுறை வந்தனாவிற்கும் அவரது குழந்தைக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உரையாடல் வந்தனாவிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வந்தனா, “நீ பெரியவள் ஆனதும் என்ன ஆகப்போகிறாய்?” என்று குழந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு “பாட்டியையும் உங்களையும் போல் வீட்டிலேயே இருக்கப் போகிறேன்,” என்று பதிலளித்துள்ளார் வந்தனாவின் குழந்தை.
குழந்தையின் பதில் வந்தனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதே எந்த ஒரு தாயின் விருப்பமாகவும் இருக்கும்.
வந்தனா தனக்கு ஆர்வமிருந்த பகுதியில் தொழில் முயற்சியில் களமிறங்க எண்ணினார்.
ஆடைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள் சந்தையில் கிடைப்பதில்லை என்பதைத் தெரிந்துகொண்டார். குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடை தயாரித்து விற்பனை செய்ய 2016-ம் ஆண்டு Keebee தொடங்கினார்.
”முதல் தயாரிப்பை 2017ம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தினோம். குழந்தைகளுக்கான ஆடைகளை ஆன்லைனில் விற்பனை செய்து ஆண்டு வருவாய் 36 லட்ச ரூபாய் ஈட்டி வருகிறோம். இந்த ஆண்டு 75 லட்ச ரூபாய் ஈட்ட திட்டமிட்ட்டுள்ளோம்,” என்கிறார் வந்தனா.
2018-ம் ஆண்டு வந்தனாவின் வகுப்புத் தோழியான ஸ்மிருதி இணை நிறுவனராக இணைந்துகொண்டார். ஆரம்பத்தில் வணிகத்திற்காக 15 லட்ச ரூபாய் கடன் வாங்கிய இவர்கள், படிப்படியாக சொந்த பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.
தொழிற்சாலைகள் மற்றும் தயாரிப்புகள்
ஹைதராபாத்தைச் சேர்ந்த Keebee நிறுவனத்தின் தயாரிப்புகள் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலைகள் உலகளாவிய ஆர்கானிக் ஜவுளி தரநிலைக்கான (Global Organic Textile Standard-GOTS) சான்றிதழ் பெற்றவை.
ஆரம்பத்தில் இந்த GOTS சான்றிதழ் பெற்ற, ஆர்கானிக் காட்டன் சப்ளையர்களைக் கண்டறிவதில் வந்தனா சிரமப்பட்டுள்ளார். நாடு முழுவதும் செயல்படும் பல்வேறு தொழிற்சாலைகளைத் தொடர்பு கொண்டுள்ளார். சிலர் மட்டுமே பதிலளித்துள்ளனர்.
”GOTS சான்றிதழ் பெற்ற தயாரிப்பாளர்கள் பெரும்பாலானோர் ஏற்றுமதியிலேயே கவனம் செலுத்தினார்கள். நாங்கள் கொடுத்த குறைந்த ஆர்டர் அளவை வெகு சிலரே ஏற்றுக்கொண்டனர்,” என்கிறார்.
அவர் மேலும் கூறும்போது,
“இறுதியாக குஜராத்தில் உள்ள Cotton Eco Fashion என்கிற நிறுவனம் எங்களுக்கு உதவ முன்வந்தது. எங்களுக்காகத் தயாரிக்க சம்மதித்தது. இவர்கள் எங்கள் வணிகத் தேவைகளை சரியாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். இன்றளவும் எங்களுடன் இணைந்துள்ளனர்,” என்றார்.
சமீபத்தில் இந்நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலை ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான GOTS சான்றிதழ் இன்னமும் பெறப்படவில்லை என்கிறார் வந்தனா.
“நாங்கள் GOTS சான்றிதழ் பெறப்பட்ட துணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். விரைவில் எங்கள் தொழிற்சாலைக்கு GOTS சான்றிதழ் கிடைத்துவிடும். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்கிறார் வந்தனா.
போட்டி மற்றும் வருங்காலத் திட்டங்கள்
இன்று பெரும்பாலான வீடுகளில் கணவன்-மனைவி இருவரும் சம்பாதிக்கிறார்கள். இதனால் இவர்களது செலவிடும் திறன் மேம்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்காக பெற்றோர் செலவிடத் தயங்குவதில்லை. இதன் காரணமாக குழந்தைகளுக்கான ஆடைகள் சந்தை வளர்ச்சியடைந்து வருகிறது.
இந்தியாவில் குழந்தைகளுக்கான ஆடை சந்தை 2020-ம் ஆண்டில் 16.62 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. 2026-ம் ஆண்டில் 5.89 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 22.53 பில்லியன் டாலர் மதிப்புடையதாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்ச்அண்ட்மார்க்கெட்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.
Greendigo, Love the world today போன்ற பிராண்டுகள் போட்டியாளர்களாக இருப்பினும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்து தேவைகளை உணர்ந்து சேவையளிப்பது போட்டியாளர்களை சிறப்பாக எதிர்கொள்ள உதவுவதாக தெரிவிக்கிறார் வந்தனா.
மற்ற தொழில்கள் போன்றே Keebee வர்த்தகமும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை காரணமாக பாதிக்கபட்டாலும் விரைவில் மீண்டெழுவோம் என இணை நிறுவனர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆர்கானிக் ஆடைகளில் கூடுதல் வகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அதிக சாய்ஸ் உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்று நிறுவனர்கள் விரும்புகின்றனர்.
”சர்வதேச வாடிக்கையாளர்களிடம் பிராண்டைக் கொண்டு சேர்க்க விரும்புகிறோம். பெருந்தொற்றுப் பரவல் குறைந்ததும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் வந்தனா.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா