பூங்கா பெஞ்சில் தூங்கிய காலம் முதல் மிகப்பெரிய நிறுவன சி.இ.ஓ. வரை– ஒரு நிர்வாகியின் வெற்றி பயணம்!
பன்னாட்டு மனிதவள ஆலோசனை நிறுவனமான ரான்ஸ்டட் இந்தியாவின் சி.இ.ஓவாக பொறுப்பேற்றுள்ள பால் டுபியஸ், பூங்கா பெஞ்சில் படுத்து தூங்கியதில் இருந்து வர்த்தக தலைவராக முன்னேறி வந்திருக்கிறார்.
கனடாவின் ஆண்டாரியோவில் வளர்ந்த பால் டுபியஸ் தற்காப்புக் கலைகளால் கவரப்பட்டார். கனடாவில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான கிரைஸ்லரில் வெல்டராக பணியாற்றியவர் தற்காப்புக் கலையின் தாயகமான ஆசியாவுக்கு செல்ல விரும்பினார்.
அதன் பிறகு பணத்தை சேமித்து ஜப்பானுக்கு பயணமானார். ஆறு மாத காலம் தங்கியிருக்கும் திட்டத்துடன் ஒசாகா நகரில் வந்திறங்கினார். அந்த கால கட்டத்தில் (1990) அவரிடம் 300 கனடா டாலர் இருந்தது.
“இது என் வாழ்நாள் சேமிப்பு, பேக்பேக்குடன் வந்திருந்தேன். தங்குவதற்கு இடமில்லை. இணையம் பிரபலமாகாத காலம் என்பதால் எங்கே செல்வது எனத்தெரியவில்லை. லோன்லிபிலேனட் வழிகாட்டி புத்தகம் இருந்தது. ஒரு பூங்கா பெஞ்சை கண்டுபிடித்து அதில் படுத்துக்கொண்டேன்,” என்கிறார் Randstad நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுள்ள முதல் இந்தியர் அல்லாத சி.இ.ஓவான பால் டுபிய்ஸ்.
ஆனால் பால், இளம் வயதிலிருந்து பொறுபேற்தில் ஆர்வம் கொண்டிருந்தார். உயர் நிலை பள்ளி ஆசிரியரின் மகனான பால், சமூக செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்ட தந்தையிடம் இருந்து தலைமைப் பண்புகளுக்கான பாடம் கற்றதாகக் கூறுகிறார். பள்ளியில் மாணவர் சங்கத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர், ஐஸ் ஹாக்கி குழுவில் கேப்டனாகவும் இருந்தார்.
ஆசியாவில் ஆறு மாத காலம் தங்கியிருக்க திட்டமிட்டிருந்தவர் இங்கேயே 30 ஆண்டுகளை கழித்தார். வர்த்தக உலகில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி முன்னேறி வந்தார்.
“கனடாவில் வளர்ந்த நான், ஒரு போதும், இந்தியாவில் ரான்ஸ்டண்ட் நிறுவன சி.இ.ஓ. ஆவேன் என நினைக்கவில்லை. தினமும் 60,000 பேரை பணிக்கு அமர்த்தும் நிலையில், இந்த பெரிய நிறுவனத்தில், பெரிய பொறுப்பை மிகவும் விரும்புகிறேன்,” என்று யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷர்த்தா சர்மாவிடன் கூறுகிறார்.
இந்த நிலையை அவர் எப்படி வந்தடைந்தார்?
பல ஆண்டுகளாக தனது பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததாகவும், சி.இ.ஓ பொறுப்பை ஒரு நாளும் கருதவில்லை என்றும் பால் கூறுகிறார்.
“நான் எப்போதுமே செயல்திட்டத்தில் கவனம் செலுத்துபவராக இருந்தேன். என் முன் இருக்கும் பணியில் எப்போதும் கவனம் செலுத்தினேன். இவ்வாறு செயல்பட்டால், உங்கள் சிறந்த செயல்பாட்டை அளித்தால், இந்த பாதையில் சாதித்து, உங்கள் செயலியில் சிறந்து விளங்கி, அதை அனுபவித்து மகிழ்ந்தால், அடுத்த விஷயங்கள் தானாக நடக்கும். இது வாழ்க்கையின் வட்டம்,” என்கிறார்.
பல இளம் நிர்வாகிகள் என்னிடன், நான் எப்படி சி.இ.ஓ ஆவது எனக் கேட்கின்றனர். என்னுடைய பதில் எளிதானது,
“சி.இ.ஓ ஆவதில் கவனம் செலுத்துவதை விடுத்து, இன்று உங்கள் வேலையில் கவனம் செலுத்தி, இப்போது செய்வதில் உலகிலேயே சிறந்து விளங்குங்கள். அடுத்த விஷயம் தானாக வரும். இப்படி தான் நான் செயல்பட்டிருக்கிறேன். எனவே நான் ஐந்து வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் கழித்து என்ன என்றெல்லாம் யோசித்ததில்லை. இப்போது உள்ளதில் கவனம் செலுத்தி, என்னுடைய சிறந்த செயல்பாட்டை அளிக்கிறேன்.”
கடந்த ஆண்டு, பால், The E5 Movement: Leadership through the Rule of Five எனும் புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தனது வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் தலைமை குணம் பற்றி விவரிக்கிறார்,
“என்னை செயல்படத்தூண்டிய ரிச்சர்டு பிரான்சன் மேற்கோள் ஒன்றை படித்தேன். உங்கள் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருந்தால், ஒரு புத்தகம் எழுதி உலகுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் கடமை,” என்று புத்தகம் எழுதியது பற்றி பால் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலத்தில்: ராமர்கோ சென்குப்தா, தமிழில்-சைபர்சிம்மன்