தற்கொலை; விபத்து; தொடர் தோல்வி: தளராது வாழ்க்கையை தன்வசப்படுத்திய சுனில் ராபர்ட்-இன் ஊக்கமிகு பயணம்!
தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு சென்ற சுனில் ராபர்ட் விபுலா படிப்படியாக நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு இன்று சிறந்த எழுத்தாளர், ஊக்கமளிக்கும் பேச்சாளர், மாரத்தான் போட்டியாளர், சமூக மாற்றத்தை விரும்பும் ஆர்வலர் என பரிணமித்துள்ளார்.
வாழ்க்கையில் எதையெல்லாம் தோல்வியாகப் பார்க்கிறோமோ அதையெல்லாம் வாய்ப்பாக பார்க்கிறவர்கள் வெகு சிலரே. வறுமை, விபத்து என வாழ்க்கையில் முன்னேறத் தடையாகத் தோன்றும் அம்சங்களை வேறோடு பிடுங்கி எறிந்துவிட்டு வாழ்க்கையைப் பசுமையாக மாற்றிக்கொண்டுள்ளார் சுனில் ராபர்ட் உபுலா.
இவருக்கு 16 வயதிருக்கும். இனி வாழ்வதில் பயனில்லை என்கிற வெறுப்பு ஏற்பட்டது. தற்கொலை செய்துகொள்ள நினைத்தார். ரயில் தண்டவாளத்தில் சென்று நின்றுகொண்டார். இவரது உயிரைப் பறிக்க ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. அந்த வழியாக சென்ற மாணவர்கள் சிலர் இவர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ரயில் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்க அந்த மாணவர்கள் ஓடி வந்து சுனிலை வேகமாக இழுத்து காப்பாற்றினார்கள்.
சாவின் விளிம்பு வரை சென்று திரும்பிய சுனிலின் வாழ்க்கை அதன் பிறகு வெகுவாக மாறிப்போனது. சாவையே சந்திக்கத் துணிந்தவருக்கு வேறு எது பிரச்சனையாக இருந்துவிடப் போகிறது? எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் பார்த்துவிடலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது. தன்னுடைய மறுபிறப்பு தன்னைச் சுற்றியுள்ள மக்களின் மேம்பாட்டிற்கு உதவட்டும் என நினைத்தார் சுனில்.
வெறுப்பு, சோகம், கவலை என்றிருந்த சுனிலின் வாழ்க்கையில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் முளைக்கத் தொடங்கியது.
படிப்படியாக நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்ட சுனில் எழுத்தாளர், ஊக்கமளிக்கும் பேச்சாளர், மாரத்தான் போட்டியாளர், சமூக மாற்றத்தை விரும்பும் ஆர்வலர் என பரிணமித்தார்.
இவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மட்டுமே இவரை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள Digitate என்கிற ஐடி நிறுவனத்தில் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியாக உயர்பதவியை எட்டும் அளவிற்கு இட்டுச் சென்றது.
“என் வாழ்க்கையில் நான் சந்தித்த துன்பங்கள் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்துள்ளன. இளம் சமூகத்தினரிடையே நேர்மறையான எண்ணங்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதையே என் லட்சியமாகக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் சுனில் ராபர்ட்.
போராட்டம் நிறைந்த வாழ்க்கை
சுனிலுக்கு 12 வயதிருக்கும்போது அவரது அப்பாவிற்கு வேலை போய்விட்டது. நல்ல சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்தார் சுனிலின் அப்பா. திடீரென்று வருமானம் இல்லாமல் போனது. கடன் அதிகமானது. இதை சமாளிக்க பெரும்பாலான சொத்துகளை விற்றுவிட்டார்கள். மூன்று குழந்தைகளில் சுனில்தான் பெரியவர். குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சக வயதினர் விளையாட்டு, படிப்பு என வாழ்க்கையை ரசித்த சமயத்தில் சுனில் வீடு வீடாக சென்று சேல்ஸ்மேன் வேலை செய்துகொண்டிருந்தார். யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தில் வேலை. இருந்தாலும் சுனில் படிப்பை நிறுத்திக்கொள்ளவில்லை. படிப்பைத் தொடர்ந்தார்.
“படிப்பின் முக்கியத்துவம் எனக்குத் தெரிந்தது. படிப்பை நிறுத்தக்கூடாது எனத் தீர்மானித்தேன். அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். என்னுடைய படிப்பு செலவையும் உடன்பிறந்தவர்களின் படிப்பு செலவையும் சேர்த்து சமாளிப்பதற்கு கஷ்டப்பட்டேன்,” என்று நினைவுகூர்ந்தார் சுனில்.
இந்தச் சூழலிலும் படிப்பைக் கைவிடவில்லை. எம்பிஏ முடித்தார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஜர்னலிசம் படித்தார். இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் Acer, Oracle, TCS போன்ற பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
மேல்நோக்கி சென்றுகொண்டிருந்த இவரது வாழ்க்கையை ஒரு விபத்து மீண்டும் புரட்டிப்போட்டது. இருபது வயதுகளின் இறுதியில் இருந்திருப்பார். பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது. வலதுமுட்டியில் பலத்த காயம். இனி சப்போர்ட் இல்லாமல் நடக்கமுடியாது என்றனர் மருத்தனர்.
ஆனால், சுனில் மற்றவர்களைப் போல் கிடையாதே! இதையும் சமாளிப்போம் என மீண்டெழுந்தார். மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் நடந்தார். அதுமட்டுமா? மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றார்.
“விபத்திற்குப் பிறகு உடல் முன்புபோல் சுறுசுறுப்பாக இல்லை. கார்ப்பரேட் பணி. ஒரே இடத்தில் வேலை. உடல் உழைப்பே இல்லாமல் போனது. விளைவு உடல் பருமன்,” என்கிறார்.
அந்த சமயத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ என்.சந்திரசேகர் இவர் மீண்டெழ மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளார்.
“அவரது உரைகளில் ஒன்றைக் கேட்டேன். ஒரு சிறந்த தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்று அதில் கூறியிருந்தார். தன்னையே முறையாகப் பராமரித்துக்கொள்ள முடியாத ஒருவரால் எப்படி ஒரு நிறுவனத்தை முறையாக நிர்வகிக்கமுடியும்? அவர் கேட்ட இந்தக் கேள்வி எனக்குள் ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்றி வைத்தது. ஜிம் சென்றேன். மாரத்தான் ஓட ஆரம்பித்தேன்,” என்கிறார் சுனில்.
மற்றவர்களுக்கு உந்துதல்
கவலையில் இருப்போர் மீண்டு மகிழ்ச்சியாக வாழ உதவவேண்டும். இதுவே சுனிலின் நோக்கமாக இருந்தது. டோஸ்ட்மாஸ்டர்ஸ் என்கிற சர்வதேச கிளப்பில் சேர்ந்தார். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார். இளம் மாணவர்களுக்கு இவரது வார்த்தைகள் மிகப்பெரிய உந்துசக்தியாக மாறியது.
Teendemy ஆசிரியர் மற்றும் வழிகாட்டியாக ஆயிரக்கணக்கான பதின்ம வயதினரின் வருங்காலத்திற்கு வழிகாட்டியுள்ளார். 2018-ம் ஆண்டு TEDx உரையாற்றினார். கடினமான சூழலைக் கண்டு மனம் துவண்டுவிடாமல் எதிர்கொள்ளும் உத்திகளை இதில் பகிர்ந்துகொண்டார்.
இவற்றைத் தொடர்ந்து சுனில் 2010-ம் ஆண்டு I Will Survive என்கிற முதல் புத்தகத்தை எழுதினார். ரத்தன் டாடா, Joseph Kennedy II உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்தப் புத்தகத்தை அங்கீகரித்தனர். சுனிலின் அனுபவங்களும் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் இந்தப் புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள வாசகர்களின் கவனம் பெற்று சிறப்பாக விற்பனை செய்யப்பட்டது.
Bound to Rise என்கிற இரண்டாவது புத்தகம் எழுதினார். இன்றைய போட்டி நிறைந்த கார்ப்பரேட் உலகில் நுழையத் துடிக்கும் இளைஞர்களுக்காக இந்தப் புத்தகம் எழுதப்பட்டது.
நியூஜெர்சி சிறையில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றதும் சரியான வழியில் செல்ல உதவும் திட்டங்களை ஏற்பாடு செய்தார்.
“சிறைக் கைதிகளுடன் பேசி அவர்களுக்கு ஊக்கமளிப்பது எளிதான செயல் அல்ல. அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமைய உதவி செய்தது திருப்தியளித்தது,” என்கிறார் சுனில்
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா