‘மரங்கள் முதல் பறவைகள் வரை’ - திருப்பூர் சுற்றுச்சூழலை மாற்றிய ‘வனத்துக்குள் திருப்பூர்’
‘வனத்துக்குள் திருப்பூர்’ என்ற அமைப்பு மாசடைந்த திருப்பூர் நகரத்தை பசுமையாக்கி வருகின்றனர்.
‘வனத்துக்குள் திருப்பூர்’ என்ற அமைப்பு மாசடைந்த திருப்பூர் நகரத்தை பசுமையாக்கி வருகின்றனர்.
திருப்பூர் என்றாலே அனைவருக்கும் பின்னலாடை தொழில், ஜவுளித் தொழில், சாயப்பட்டறைகள் உள்ள தொழில் நகரம் தான் நினைவுக்கு வரும். ஆனால், இதன் அசுர வளர்ச்சி காரணமாக நொய்யல் என்ற ஆற்றையே தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.
மாசடைந்த நொய்யல் ஆற்றையும், 70களில் இருந்த பசுமையான திருப்பூரை மீட்கவும் களமிறங்கியுள்ளது ‘வெற்றி’ என்ற தன்னார்வ அமைப்பு. கிளாசிக் போலோ நிறுவனர் சிவராம், இந்த தன்னார்வ அமைப்பை 2004ம் ஆண்டு முதல் வழிநடத்தி வருகிறார்.
பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள முதலாளிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இணைந்து 18 வருடங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூழலியல் மீட்டெடுப்பு மற்றும் கல்வி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிப்பறை வசதி கூட சரிவார இல்லாத அந்த பள்ளியை மேம்படுத்த முடிவெடுத்த வெற்றி அமைப்பு, அதன் அருகிலேயே 9 ஏக்கர் நிலத்தை சென்னை குழுமம் உதவியுடன் வாங்கியுள்ளனர். அதன் பின்னர், திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை தொழிலதிபர்களின் உதவியுடன் 24 வகுப்பறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். அதனைச் சுற்றிலும் மரத்தை வைத்து வளர்த்து வருகின்றனர்.
‘வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பு
ஆரம்பத்தில் கல்விப் பணிகளில் மட்டுமே தீவிரம் காட்டி வந்த இந்த அமைப்பு, முதன் முறையாக திருப்பூர் மாநகராட்சி முதல் மங்கலம் என்ற கிராமம் வரை சாலையின் இரண்டு புறங்களிலும் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகளை முதன் முறையாக நட்டு வைத்துள்ளனர்.
அதன் பின்னர், இடுவம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிற்கு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள சென்றுள்ளனர்.
இதனையடுத்து, தன்னார்வலர்கள், திருப்பூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து ‘வனத்துக்குள் திருப்பூர்' என்ற திட்டத்தினை உருவாக்கியுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாருவது, மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள குளத்தை பல கட்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு மீட்டு தூர்வாரும் பணியை செய்து முடித்துள்ளனர். அத்துடன் இதன் இரு கரைகளிலும் பல பழம் தரும் மரங்களை நட்டு பறவைகளுக்கான வாழ்விடமாகவும் அதனை மாற்றியுள்ளனர்.
கலாம் நினைவாக ஒரு லட்சம் மரக்கன்றுகள்:
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த அன்று நடந்த நினைவு அஞ்சலி கூட்டத்தில் 1 லட்சம் மரங்களை நட்டு, பராமரித்து, வளர்த்துக்காட்ட வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, கொடையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளின் உதவியுடன் 4 மாதங்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் எந்த இடம் காலியாக உள்ளதோ அந்த நிலத்தின் உரிமையாளருடன் பேசி மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். கடந்த 8 வருடங்களில் மட்டும் திருப்பூர் நகரம் முழுவதும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினர் 13 லட்சத்து 8 ஆயிரம் மரங்களை நட்டு வைத்துள்ளனர். அதாவது, திருப்பூர் மாவட்டம் முழுவதும் 88.4 சதவீத மரங்கள் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினர் நட்டு வைத்தவை தான்.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின்கீழ் வேம்பு, தேக்கு, மலை வேம்பு, செம்மரம், ஈட்டி, தூங்குவாகை, இலுப்பை, பூவரசம், ஆலமரம், பீயன், இலவம், புளியன், புங்கன் போன்ற மரக்கன்றுகளை திருப்பூர் நகரம் முழுவதும் நட்டு வைக்க ஆரம்பித்துள்ளனர்.
பெரும்பாலானவர்கள் மரக்கன்றுகளை நடுவதோடு சரி அதனை பராமரிக்க மாட்டார்கள். ஆனால் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினர் தாங்கள் நடும் மரக்கன்றுகள் ஒவ்வொன்றையும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து திட்ட மேலாளரான குமார் துரைசாமி கூறுகையில்
“களப்பணிகளை மேற்கொள்வதற்காக திருப்பூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்துள்ளோம். அந்த 3 பகுதிகளையும் மேற்பார்வையிட 3 கள மேலாளர்களை நியமித்துள்ளோம். எங்கள் அமைப்பை விவசாயிகள் யாராவது தொடர்பு கொண்டு, தங்களது நிலத்தில் மரம் நட வேண்டும் என கோரிக்கை வைத்தால் கள மேலாளர்கள் முதலில் அந்த இடத்தை ஆய்வு செய்வார்கள். மண் வளத்தையும், அந்த நில உரிமையாளருக்கு மரம் வளர்ப்பதில் இருக்கும் ஆர்வத்தையும் அறிந்து கொள்வார்கள். அதன் பின்னர் அவர்கள் நிலத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளை நட்டு வைத்து, அதற்கு முதல் தண்ணீர் ஊற்றுவது வரை உடன் இருந்து அனைத்து பணிகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்,” என்றார்.
சுற்றுச்சூழலை மீட்டெடுத்த அமைப்பு:
திருப்பூர் முழுவதும் ‘வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பினர் நட்டு வைத்த மரங்கள் மூலமாக பல சுற்றுச்சூழல் மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. சுமார் 44 வகையான பட்டாம்பூச்சி இனங்கள், 52 வகையான சிலந்தி இனங்கள் மீண்டும் திருப்பூருக்குள் தென்பட ஆரம்பித்துள்ளது.
“ஆண்டுதோறும் பருவமழைக்காலமான ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை மரக்கன்றுகளை நடும் பணிகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 60 களப்பணியாளர்கள் மரம் நடும் பணிகளில் ஈடுபடுகின்றனர். எங்களுடைய சொந்த பண்ணையில் வளர்க்கப்பட்ட மரங்களை இலவசமாக நடவு செய்து வருகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதையும் இந்த அமைப்பே செய்கிறது. இதற்காக 30 டிராக்டர்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு நீர்விடும் பணி கண்காணிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுநீரைச் சேகரித்து மறுசுழற்சி செய்து செடிகளுக்கு விடப்படுகிறது. இதன்மூலம் திருப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் மரக்கன்று நடவு அதிகரித்து வருகிறது.
‘அறப்பொருள் வேளாணகம்’ என்ற பெயரில் இயற்கை வேளாண் விற்பனர்கள் மூலமாக விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி வகுப்புகள் மற்றும் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பறவைகள் மீதான பாசம்:
வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு நட்டுள்ள மரங்களின் விதைகளை நகரம் முழுவதும் பரப்பும் வேலையை பறவைகள் செய்து வருகின்றன. அப்படிப்பட்ட பறவைகளை பாதுகாக்கும் பணியை வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு செய்து வருகிறது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்திலும், பறவைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. நட்டு வளர்க்கப்பட்டுள்ள மரங்களில், ஏராளமான பறவைகள் வசிக்கின்றன. பழமாக உணவு கிடைக்கிறது, தண்ணீரும் வழங்கலாம் என திட்டமிட்டனர்.
எனவே, கோடை காலத்தில் மரத்திற்கு அருகிலேயே சிறிய சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். இந்த அமைப்பு நட்டு வைத்த மரங்கள் மயில், காகம், குருவிகள் என பல வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக மாறியுள்ளது. மரங்களுக்கு செல்லும் சொட்டு நீர் பாசனம் மூலமாகவும் பறவைகளுக்கான தண்ணீர் தொட்டிகளை வைத்துள்ளனர். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிமெண்ட் தொட்டிகளை வைத்துள்ளனர்.