புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு குவியும் நிதியுதவி!
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தாண்டி பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது கடந்த 14ம் தேதி, வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது.
வீரமரணம் அடைந்தவர்களில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேலதெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் (30). மற்றொருவர் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் ஆவர்.
கண்டனம் :
நாடு முழுவதும் பெரும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக முக்கிய பிரபலங்களும், பொதுமக்களும் சமூகவலைதளங்கள் வாயிலாக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக இந்தியாவே அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பிற நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், பிரபலங்ளும் பயங்கரவாதத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கான நிதியுதவியும் பல்வேறு தரப்பில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பதற்கு வசதி செய்யும் மத்திய அரசின் பிரத்யேக இணையதளமான பாரத் கீ வீர் (Bharat Ke Veer) மூலம் பொதுமக்கள் தங்கள் நிதி உதவியை அளிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அமைச்சகத்தின் அறிவிப்பு வெளியான 36 மணிநேரத்திலேயே, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரூ.7 கோடிக்கு மேல் அந்த இணையதளம் வாயிலாக நிதி கிடைத்துள்ளது.
இது தொடர்பான மோசடியில் நிதி வழங்குபவர்கள் சிக்காமல் இருக்க, http://www.bharatkeveer.com மூலம் தங்கள் உதவியை கொடுக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மாநில அரசுகள் :
வீர மரணம் அடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அது தவிர, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதேபோல், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநில அரசு, தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியும், மத்தியப் பிரதேச அரசு தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வீரரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளது.
எஸ் பி ஐ:
எஸ் பி ஐ சார்பில், காஷ்மீர் தற்கொலைப்படை தாக்குதலில் வீர மரணமடைந்த 23 வீரர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு, மேலும் 23 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ‘வீரர்களின் குடும்பச் செலவுகள் அனைத்தையும் ஏற்க தயார் என ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் அறிவித்துள்ளது.
திரையுலகப் பிரபலங்கள் :
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக, இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோர் வீர மரணம் அடைந்த குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கியுள்ளனர். மேலும் பாலிவுட் சார்பில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
அஜய் தேவ்கன், அர்ஷத் வர்சி, மாதுரி திக்ஷித், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள பாலிவுட் திரைப்படம் “டோட்டல் தமால்”. இந்தப்படக்குழுவினர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
விளையாட்டு வீரர்கள் உதவி :
புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்தோர்களது குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அறிவித்துள்ளனர்.
வீரேந்தர் சேவாக்:
வீர மரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களது குழந்தைகளின் கல்விக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொள்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சேவாக் அறிவித்துள்ளார்.
இவரது இந்த முயற்சிக்கு பக்கபலமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் கவுதம் கம்பீர் மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
ஷிக்கார் தவான்:
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்தோரது குடும்பங்கள் அனைத்திற்கும் தம்மால் இயன்றளவு நிதியுதவி வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஷிக்கார் தவான் அறிவித்துள்ளார்.
முகமது ஷமி:
புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக ரூ.5 லட்சம் நிதியை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வழங்கியுள்ளார்.
விஜயேந்தர் சிங்:
குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் ஹரியானா போலீஸில் பணியாற்றி வருகிறார். அவர் தனது ஒருமாத ஊதியத்தை வீரர்களின் குடும்பத்தின் நலனுக்காக வழங்குவதாகஅறிவித்துள்ளார். மேலும், பிசிசிஐ செயல் தலைவர் சி.கே கண்ணா, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் வினோத் ராய்க்கு விடுத்துள்ள கோரிக்கையில், பலியான வீர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமணத் தம்பதிகளின் உதவி :
புல்வாமா தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்காக திருமணத்துக்கு வந்த பரிசுகளை வழங்கியுள்ளனர் குஜராத்தைச் சேர்ந்த மணமக்கள்.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த மகேஷ் விராஸ், தீபிகா சவுகான் திருமணம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த புதுமணத் தம்பதி, தங்களது திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருட்கள், மொய்ப் பணம், நகைகள் அனைத்தையும் புல்வாமா தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்கியுள்ளது.
திருமண வைபவத்தில் சினிமா பாடல்களுக்குப் பதிலாக, தேசப் பற்று பாடல்கள் இசைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் நடனமாடிய உறவினர்களின் கைகளில் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.
இதேபோல், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைரவியாபாரிகளான ஹஸ்முக்பாய் சேத்- அஜய் சங்வி வீட்டுத் திருமணம் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இவர்கள் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி. ஆனால், ராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தியை கேட்ட இக்குடும்பத்தினர் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி திருமண வரவேற்பை ரத்து செய்ததோடு அனைத்து சம்பிரதாயங்களையும் ரத்து செய்து விட்டனர். மேலும், சமையல், அலங்காரம் உள்ளிட்ட செலவுக்காக வைத்திருந்த ரூ.11 லட்சம் பணத்தையும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன் வந்துள்ளனர்.
தனியார் அமைப்பு :
இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மும்பையில் உள்ள தனியார் அமைப்பு ஒன்று ரூ.17 லட்சம் வசூலித்து அந்தந்த குடும்பங்களுக்கு அனுப்பி வைக்க நேர்மையாக செயலாற்றி வருகின்றனர்.
மாதா அமிர்தானந்தமயி வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
காவல்துறை எச்சரிக்கை:
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் குவிந்து வரும் நிலையில், சில மோசடிப் பேர்வழிகள் இதை தங்களுக்கு சாதகமாக்கி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
‘சல்யூட் இந்தியன் ஆர்மி’ என்ற வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்து, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி வழங்க போவதாகவும், இந்த கணக்கிற்கு மக்கள் தங்கள் நிதியை அளிக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. ‘ராணுவ நல நிதி’ எனும் பெயரிலும் ஒரு வங்கி கணக்கு எண் உலா வருகிறது.
தேசப் பக்தியின் காரணமாக உண்மையை ஆராயாமல், இதை உண்மையென்று நம்பி சிலர் இந்த வங்கி எண்களுக்கு பணம் அனுப்பி வருகின்றனர். ஆனால், இவர்கள் மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் இதுபோன்ற மோசடியில் சிக்கி ஏமாற வேண்டாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள், அந்தந்த மாவட்டங்களின் ராணுவ அலுவலகத்துக்கு சென்று நேரடியாக நிதியுதவி வழங்கலாம். மாவட்ட ஆட்சியர் அல்லது தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று கொடிநாள் நிதியாக எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம்.
http://www.bharatkeveer.com இந்த இணையதளம் மூலமாகவும் மக்கள் தங்கள் உதவியை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லையில் அவர்கள் உறங்காமல், தன் உயிரையும் துச்சமென மதித்து நமக்காக எதிரிகளுடன் போராடுவதால் தான், நாட்டிலுள்ள குடிமக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நிம்மதியாக சாப்பிட்டு, உறங்க முடிகிறது. எனவே, நமக்காக இன்னுயிரை அளித்த அவ்வீரர்களின் குடும்பத்தைக் காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையே. இதை உணர்ந்து வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம்.