OLA IPO: ரூ.76 என்ற விலைக்கே முதல் நாளில் பட்டியலிடப்பட்ட ஓலா பங்குகள்!
நேற்று அதிகாரப்பூர்வ விற்பனைக்கு முந்தைய க்ரே சந்தையில் ரூ.3-4 வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது.
பங்குச் சந்தையில் அறிமுகமான முதல் நாளில் ஓலா பங்கு ஒன்றின் விலை அதன் ஐபிஓ விலையான ரூ.76 என்றே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமையான இன்று பங்குச்சந்தையில் அனைத்துத் துறை பங்குகளும் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை (09-08-24) தொடக்கத்தில் சென்செக்ஸ் 789 புள்ளிகள் உயர்ந்து 79,675 ஆகவும், நிஃப்டி 0.98% உயர்ந்து 24,352 ஆகவும் இருந்தது. ஓலா எலக்ட்ரிக் பங்குகளின் விலை வியாழக்கிழமையான நேற்று அதிகாரப்பூர்வ விற்பனைக்கு முந்தைய க்ரே சந்தையில் ரூ.3-4 வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கிரே மார்க்கெட் என்பது அதிகாரப்பூர்வமற்ற சந்தையாகும், பொதுச் சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் தொடங்குவதற்கு முன்னரே வர்த்தகர்கள் பங்குகளை அல்லது நிறுவனங்களின் IPO விண்ணப்பங்களை பிரீமியம் அல்லது தள்ளுபடியில் விற்பனை செய்வார்கள்.
பாவிஷ் அகர்வால் தலைமையிலான நிறுவனத்தின் ஐபிஓ, ஏலத்தின் மூன்றாவது மற்றும் இறுதி நாளான செவ்வாய்கிழமை தகுதிவாய்ந்த பெரு நிறுவன வாங்குவோர்களின் ஆர்வம் காரணமாக 4 மடங்கு கூடுதலாக சந்தாக்களைக் கண்டது.
Ola Electric ரூ.10 முகப்பு மதிப்பு கொண்ட 33,500 கோடி (சுமார் $4 பில்லியன்) மதிப்புடைய பங்குகளின் விலையை ரூ.72-76 ஆக நிர்ணயித்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி பெருநிறுவன முதலீட்டாளர்களுக்காக திறக்கப்பட்ட ஐபிஓ சந்தா, 80 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளில் இருந்து ரூ.2,763 கோடியை திரட்டியது.
ஓலா எலெக்ட்ரிக் பங்குகளுக்கு வலுவான தொடக்கம் இருந்த போதிலும் நிறுவனத்தின் தொடர் நஷ்டங்கள், மற்ற ஆட்டோ நிறுவனங்களின் கடும் போட்டிகள், மேலும் அரசு மானியங்களை பெரிய அளவில் நம்பியிருப்பது போன்ற காரணங்களினால் முதலீட்டாளர்களின் ஆர்வங்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை, என்று யுவர்ஸ்டோரி செய்தி வெளியிட்டிருந்தது.
மார்ச் 31, 2024 முடிந்த ஆண்டில் ஓலா எலெக்ட்ரிக்கின் நஷ்டம் ரூ.1584 கோடியாகும். ஓலா எலெக்ட்ரிக் ஐபிஓ, இன்னுமிரண்டு டெக்னாலஜி நிறுவனங்களின் ஐபிஓ செயல்திறனுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. Firstcry என்ற நிறுவனத்தின் ஐபிஓ கடைசி நாளில் 12 மடங்கு அதிக சந்தாக்களை ஈர்க்க, மற்றொரு டெக்னாலஜி நிறுவனமான Unicommerce முதல் நாளிலேயே முழு சந்தாக்களையும் திரட்டியது.
இன்றைய தினம் காலை 10:33 மணி நிலவரப்படி, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனப் பங்குகளின் விலை 15% அதிகரித்து பங்கு ஒன்றின் விலை ரூ.87.57 ஆக உள்ளது.