'உழவர் பூமி' நிறுவனத்தில் ரூ.1.20 கோடி முதலீடு செய்தது நேடிவ் லீட்!
ரசாயன கலப்பு இல்லாத தூய்மையான பசும்பால் வினியோகம் செய்யும் நிறுவனமான 'உழவர் பூமி'யில் நேடிவ் லீட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
ரசாயன கலப்பு இல்லாத தூய்மையான மாட்டுப்பால் வினியோகம் செய்யும் நிறுவனமான 'உழவர் பூமி'யில் நேடிவ் லீட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் இருந்து இயங்கி வரும் உழவர் பூமி என்ற ஸ்டார்ட்-அப்’ல் ‘நேடிவ் ஏஞ்சல் நெட்வொர்க்’ 1.20 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நெட்வொர்கைச் சேர்ந்த சங்கர் கனகசபை இதன் முன்னணி முதலீட்டாளராக இருக்கிறார்.
கொரோனா நோய் தோற்றால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு சமயத்தில் தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இத்தகைய முதலீடுகள் தொடக்க நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘உழவர் பூமி அக்ரோ ப்ராடக்ட்ஸ்’ நிறுவனம் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து சுத்தமான கறந்த பாலை பெற்று வந்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வீட்டில் அளிக்கிறது. பிரஷ்ஷான பால் கறந்து 12 மணி நேரத்தில் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உழவர் பூமி, சுத்தமான வெண்ணெய் மற்றும் தேனையும் விற்பனை செய்கிறது.
தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த முதலீடு பற்றி பேசிய உழவர் பூமி இணை நிறுவனர் வெற்றிவேல் பழனி,
“சுத்தமான பால் மற்றும் பால் பொருட்கள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது உழவர் பூமி. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த வகை கறந்த பசும்பால் மூலம் நல்ல ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இதைத் தொடங்கினோம் என்றார்.
உழவர் பூமி தொடங்குவதற்கு முன் ஐடி ஊழியராக இருந்த வெற்றிவேல், நாட்டு மாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அறிந்த பின்னர் தன் பணியை விட்டுவிட்டு உழவர் பூமி தொடங்க முடிவெடுத்தார். இதுதவிர ‘விவசாய நாடு அறக்கட்டளை’ மூலம் வெற்றிவேல் மற்றும் அவர்களது நண்பர்கள், பல விவசாயிகளோடு நேரடியாக தொடர்பில் இருந்து அவர்களுக்கு உதவி வருகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறப்படும் சுத்தமான பசும்பால் சென்னையில் உள்ள உழவர் பூமியின் கிடங்கை வந்தடைகின்றது. பின்னர் பாட்டில்களில் அவை அடைக்கப்பட்டு 12 நேரத்துக்குள் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுகிறது.
இவர்களின் பாலில் எந்த வித ரசாயனக் கலப்படமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 பாட்டில்கள் டெலிவரி செய்து வந்த உழவர் பூமி, இன்று 4000 பாட்டில்கள் வரை தினமும் வீடுகளுக்கு டெலிவரி செய்கிறது. ஒரு பாட்டில் பாலின் விலை 60 ரூபாய் என்று விற்கப்படுகிறது.
Native lead உறுப்பினரான முதலீட்டாளர் சங்கர் உழவர் பூமியில் தான் முதலீடு செய்தது பற்றி கூறுகையில்,
“மக்களின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறையும், ஆர்வமும் கொண்டிருக்கும் உழவர் பூமியின் நிறுவனர்கள் மீது நான் வைத்த நம்பிக்கையால் இதில் முதலீடு செய்தேன். எங்களுடைய ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் முதலீடு உழவர் பூமி குழுவினருக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதுமட்டுமன்றி சமூக அக்கறையுடன் செயல்படும் தொடக்க நிறுவனங்களுக்கு இது ஒரு ஊக்கியாக இருக்கும்,” என்றார்.
இந்த முதலீடு பற்றி பேசிய நேடிவ்லீட் பவுண்டேஷன் இணை நிறுவனர் சிவராஜா ராமனாதன், இந்த லாக்டவுன் சமயத்தில் மட்டுமின்றி வருங்காலத்திலும் உழவர் பூமி ஒரு சிறந்த வெற்றி நிறுவனமாக வெளிவரும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.
“சுயசார்பு வாழ்க்கை முறையை வாழ வேண்டிய நேரமான தற்போது, இவர்களைப் போன்ற நிறுவனங்கள் இருப்பது மிகவும் அவசியம். இயற்கைப்பொருட்களை வினிநோகிக்கும் இவர்கள், மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் உகந்த நிறுவனமாக உருவாகும் என்பதில் சந்தேகமில்லை,” என்றார்.
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த சில ஸ்டார்ட்-அப்’களில் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது உழவர் பூமியில் முதலீடு செய்துள்ளது நல்ல செய்தியாகும். தமிழகத்தையும் தமிழக மக்களையும் இயற்கைப் பொருட்களைச் சார்ந்து வாழ நேடிவ்லீட் என்றென்றும் துணைபுரியும் என்று தெரிவித்துள்ளது.