சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராகும் கீதா கோபிநாத் யார்?
தற்போது துணை நிர்வாக இயக்குநராக உள்ள ஜெஃப்ரி ஒஹமோடோவிற்கு பதிலாக கீதா கோபிநாத் பொறுப்பேற்க உள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தப் பதவியில் உள்ள ஜெஃப்ரி ஒஹமோடோவிற்கு பதிலாக கீதா கோபிநாத் பொறுப்பேற்க உள்ளார்.
கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளியல் வல்லுநராக மூன்றாண்டுகள் வரை பணியாற்றியவர். சர்வதேச நாணய நிதியத்தின் வரலாற்றில் இந்தப் பதவியை வகித்த முதல் பெண் என்கிற பெருமைக்குரியவர் கீதா. IMF நிர்வாக இயக்குநரான கிரிஸ்டலினா ஜார்ஜிவா கீதா கோபிநாத்தின் பங்களிப்பைப் பாராட்டினார்.
“பெருந்தொற்று மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிதியத்தின் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அதேபோல் சர்வதேச கூட்டுறவும் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக கிரிஸ்டலினாவிற்கும் குழுமத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிதியத்தில் உள்ள சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற உற்சாகமாகக் காத்திருக்கிறேன்,” என்கிறார் கீதா கோபிநாத்.
கீதா கோபிநாத் 1971ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். கர்நாடகாவின் மைசூருவில் வளர்ந்தார். கீதாவிற்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். கிடார் கற்றுக்கொண்டுள்ளார். ஃபேஷன் ஷோவில் பங்கேற்றிருக்கிறார். ஆனால் அனைத்தையும் கைவிட்டு படிப்பில் முழுகவனம் செலுத்தியதாக அவரது அப்பா கோபிநாத் தெரிவிக்கிறார்.
”ஏழாம் வகுப்பில் 45 சதவீத மதிப்பெண் எடுத்த கீதா அதன் பிறகு 90 சதவீதம் எடுக்கத் தொடங்கினார். நான் என் மகள்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதித்ததில்லை. பள்ளிப்படிப்பு முடிந்ததும் கீதா மைசூருவில் உள்ள மகாஜனா பியூ கல்லூரியில் சேர்ந்து அறிவியல் படித்தார். மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேரும் அளவிற்கு மதிப்பெண் எடுத்தபோதும் பிஏ (ஹானர்ஸ்) பொருளாதாரம் படிக்கத் தீர்மானித்தார்,” என்று கீதாவின் அப்பா கோபிநாத் தெரிவித்தார்.
கீதா சிவில் சர்வீஸ் தேர்வெழுத விரும்பியே பொருளாதாரப் படிப்பைத் தேர்வு செய்தார். டெல்லி லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகளிலும் முதல் மதிப்பெண் எடுத்தார்.
பட்டப்படிப்பு முடித்ததும் கீதா கோபிநாத் டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் சேர்ந்தார். அங்குதான் கீதா தனது கணவர் இக்பால் சிங் தாலிவாலை சந்தித்தார். சியாட்டில் பகுதியில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் பிஎச்டி சேர்ந்தார். 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் பிஎச்டி பெற்றார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் உதவி பேராசிரியராக இருந்தார். 2005ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். 2016-2018 காலகட்டத்தில் கேரள முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராக இருந்தார்.
2011ம் ஆண்டில் உலக பொருளாதார மன்றத்தால் ‘இளம் உலகத் தலைவர்’ (YWL) என கீதா கோபிநாத் அங்கீகரிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் ‘45 வயதிற்குட்பட்ட 25 முன்னணி பொருளாதார வல்லுநர்கள்’ பட்டியலில் இவர் இடம்பிடித்தார்.
2019-ம் ஆண்டு உலகளாவிய முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவராக ‘ஃபாரீன் பாலிசி’ செய்தி இதழ் கீதா கோபிநாத்தைத் தேர்வு செய்து கவுரவித்தது. 2021-ல் ’ஆண்டின் அதிக செல்வாக்குள்ள 25 பெண்களில்’ ஒருவராக ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ இவரை அங்கீகரித்துள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உயரிய விருதான 'பிரவசி பாரதிய சம்மான்’ விருது கீதா கோபிநாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: இந்துஸ்தான் டைம்ஸ்