அமெரிக்க தகவல் தொடர்பு கமிஷனின் முதல் பெண் ’சிடிஓ’வாக இந்திய அமெரிக்கர் நியமனம்!
இந்திய அமெரிக்கரான டாக்டர். மோனிஷா கோஷ், எப்சிசி தலைவர் இந்திய அமெரிக்கார் அஜீத் பை மற்றும் இந்த அமைப்பிற்கு, தொழில்நுட்பம், பொறியியல் விஷயங்களில் ஆலோசனை வழங்குவார்.
இந்திய அமெரிக்கரான டாக்டர். மோனிஷா கோஷ், அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க, பெடரல் கம்யூனிகேஷன்ஸ் அமைப்பின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பின் தலைவரான இந்திய அமெரிக்கர் அஜீத் பை மற்றும் இந்த அமைப்பிற்கு, தொழில்நுட்பம், பொறியியல் விஷயங்களில் இவர் ஆலோசனை வழங்குவார். அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி கோஷ் பொறுப்பேற்க உள்ளார். டாக்டர். எரிக் பர்கர் இடத்தில் அவர் பொறுப்பேற்கிறார்.
எப்.சி.சி அமைப்பு அமெரிக்காவின் 50 மாநிலங்கள் , கொலம்பியா மாவட்டம் மற்றும் அமெரிக்க பிராந்தியங்களில் வானொலி, கம்பி, செயற்கைகோள் மூலமான மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் சர்வதேச தகவல்தொடர்பை நெறிப்படுத்துகிறது.
அமெரிக்க காங்கிரஸ் மேற்பார்வை கீழ் செயல்படும் சுயேட்சையான அமைப்பான எப்.சி.சி, அமெரிக்காவின் தகவல் தொடர்பு சட்டம் மற்றும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி, அமலாக்குவதற்கான பொறுப்பைக் கொண்டிருக்கும் அமைப்பாகும்.
"5ஜி தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் முன்னணி நிலைக்கு எப்சிசி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், மோனிஷா கோஷின் வயர்லெஸ் தொழில்நுட்பம் தொடர்பான ஆழமான அறிவு மிகவும் உதவியாக இருக்கும்,” என அமைப்பின் தலைவர் அஜீத் பை கூறியுள்ளார்.
"கல்வி மற்றும் தொழில்துறையில் அதி நவீன வயர்லெஸ் நுட்பம் தொடர்பான ஆய்வுகளை மோனிஷா முன்னின்று நடத்தியிருக்கிறார். இண்டெர்நெட் ஆப் திங்க்ஸ், மெடிகல் டெலிமெட்ரி மற்றும் ஒளிபரப்பு தர நிர்ணயம் என அவரது அனுபவம் விரிவானதாக இருக்கிறது.
இது வரலாற்று சிறப்புமிக்க நியமனம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மோனிஷா, எப்.சி.சி அமைப்பின் முதல் பெண் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக இருப்பார் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் மற்றும் ஸ்டெம் துறைகளில் ஈடுபட இளம்பெண்களுக்கு ஊக்கமாக இருப்பார் என்றும் நம்புகிறேன். இந்த முக்கியமான கட்டத்தில் முக்கிய பதவி வகிக்க இருக்கும் அவருக்கு நன்றி,” என்றும் அஜீத் பை கூறியுள்ளார்.
மோனிஷா கோஷ், 1991ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பிஎச்டி பட்டம் பெற்றார். அதற்கு முன் 1986ல் இந்தியாவின் கரக்பூர் ஐஐடியில் பிடெக் பட்டம் பெற்றார்.
மோனிஷா, தேசிய அறிவியல் கழக்கத்தில், 2017 செப்டம்பர் முதல், கம்ப்யூட்டர் மற்றும் தகவல் அறிவியல், பொறியியல் பிரிவுக்குள் கம்ப்யூட்டர், வலைப்பின்னல் அமைப்பு துறையில் சுழற்சித் திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இங்கு அவர் வயர்லெஸ் ஆய்வு மற்றும் வயர்லெஸ் வலைப்பின்னல் அமைப்புகளுக்கான மெஷின் லேர்னிங் உள்ளிட்டவற்றுல் ஆய்வு செய்து வருகிறார்.
சிக்காகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு பேராசிரியராகவும் இருக்கும் அவர், இண்டெர்நெட் ஆப் திங்க்ஸ், 5ஜி செல்லுலார், அடுத்த தலைமுறை வைபை அமப்புகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்து வருகிறார்.
சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன் அவர், இண்டர்டிஜிட்டல், பிலிப்ஸ் ரிசர்ச் மற்றும் பெல் லாபரட்டரிஸ் உள்ளிட்டவற்றில் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.
"தேசிய அறிவியல் கழகத்தில் ( என்.எஸ்.எப்) மோனிஷா மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.”
"கம்ப்யூட்டர் மற்றும் நெட்வொர்க் அமைப்பின் திட்ட இயக்குனர் என்ற முறையில் ஸ்பெக்டரம் புதுமையான பயன்பாடு மற்றும் வயர்லெஸ் ஸ்பெக்டரம் பகிர்வு தொடர்பான ஆய்வுகளில் பங்காற்றி இருக்கிறார். எப்சிசியில் அவரது நியமனத்திற்கு வாழ்த்துகள் என கம்ப்யூட்டர் மற்றும் தகவல் அறிவியல், பொறியியல் பிரிவு இயக்குனராக பொறுப்பு வகிக்கும் எர்வின் கியான்சந்தானி கூறியுள்ளார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்