மாதவிடாய், காதல், கருவுறுதல்... - வளரிளம் பெண்களுக்கு ‘முடிவெடுக்க’ கற்றுத் தரும் கேம்!
‘கோ நிஷா கோ’ என்பது இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய மொபைல் கேம். இந்தியாவில் 15-19 வயதுடைய வளரிளம் பெண்களுக்கு மாதவிடாய், கருவுறுதல், கல்வி மற்றும் தொழிலைத் தொடர, பருவ வயதில் நிகழும் திருமணத்தை தாமதப்படுத்துதல் ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
‘கோ நிஷா கோ’ என்பது இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய மொபைல் கேம் ஆகும். இந்தியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் 15-19 வயதுடைய இளம்பெண்களுக்கு மாதவிடாய், கருவுறுதல், கல்வி மற்றும் தொழிலைத் தொடர பருவ வயதில் நிகழும் திருமணத்தை தாமதப்படுத்துதல் ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
நிஷா எனும் கதாபாத்திரம் வழியாக கேள்வி - பதில் முறையிலான விளையாட்டு கேம் வளரிளம் பெண்கள் பேச தயங்கும் டாபிக்குகளில் தெளிவுற வைத்து வாழ்க்கையின் மீதான புரிதலை ஏற்படுத்துகிறது ‘கோ நிஷா கோ’.
இந்தியா முழுவதிலும் இருந்து 3 லட்சம் பேர் தரவிறக்கம் செய்து இதன்மூலம் பயன்பெற்று வருகின்றனர். விளையாட்டை விளையாடிய பெண்களில் 48% பேர் 10-12 ஆம் வகுப்பிலும், 31% பேர் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.
சமூக, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சவால்களை எதிர்கொண்டு, ஆக்கப்பூர்வமான பிரச்சனைகளை தீர்க்கும் பெண்கள் தலைமையிலான குழுவான ஹோவர்ட் டெலாஃபீல்ட் இன்டர்நேஷனல் (எச்டிஐ)-இன் இணை நிறுவனர் சூசன் ஹோவர்ட். எச்டிஐ-யானது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (USAID) இருந்து நிதியுதவி பெற்று, 'கேம் ஆஃப் சாய்ஸ், நாட் சான்ஸ்' எனும் சமூகத் தாக்கத் திட்டத்தின் கீழ் 15 முதல் 19 வயது வரையிலான சிறுமிகளுக்காக 'கோ நிஷா எனும் மொபைல் கேம் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் ‘கோ நிஷா கோ’ கேம் ஆப்பானது, ஐந்து வெவ்வேறு நிலைகளில், கற்பனை கதாபாத்திரமான நிஷாவின் வழியாக ஆழ்ந்த முடிவெடுக்கும் திறன்களை ஆராயவும், கற்றுக்கொள்ளவும் மற்றும் மேம்படுத்தவும் உதவுகிறது.
எச்டிஐயின் இணை நிறுவனரும், கோ நிஷா கோவின் தொலைநோக்கு பார்வையாளருமான டாக்டர் சூசன் ஹோவர்ட், விளையாட்டை உயிர்ப்பிக்கத் தூண்டியதைப் பற்றி பகிருகையில், “எனது அம்மா அவருடைய இளம் வயதில் எதிர்காலத்தை பற்றிய தெளிவான இலக்குகளை கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டும் என்பதை தாண்டி, அதை அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்ற லட்சியமும் அவருக்கு இருந்தது.
கல்வியினை முடிக்கும் வரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்து, அதற்காக அவருடைய பெற்றோர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அவர் தன் லட்சியங்களைப் பின்பற்றாமல் இருந்திருந்தால் அவருடைய வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாக மாறியிருக்கும்” என்றார்.
கேம் ஆப்பினை வடிவமைக்கும் முன்பு வளரிளம் பெண்களின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆராய்வதற்காக, 'கேர்ள் எஃபெக்ட்' எனும் லாப நோக்கற்ற அமைப்பின் உதவியுடன், 200-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆய்வின் முடிவில், மாதவிடாய், கருவுறுதல் மற்றும் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஏற்படும் குழப்பம் ஆகியவற்றில் பெண்கள் தெளிவற்று இருந்தது தெரியவந்துள்ளது
“இவை அனைத்தும் ஒரு சிறிய USAID மானியத்துடன் தொடங்கியது. ஆப்பினை வடிவமைக்கும் செயல்பாட்டின் போது...
டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் 'கேர்ள் எஃபெக்ட்' - ன் உதவியுடன் ஆராய்ச்சி செய்தோம். ஆரோக்கியம், மாதவிடாய், சவால்களை எதிர்கொள்ளும் போது யாரிடம் ஆலோசனை கேட்பார்கள், குடும்பத்தாரிடம் அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவது போன்ற பல கேள்விகளைக் கேட்டோம். ஆனால், அனைத்திற்கும் தெளிவான பார்வையுடன் கூடிய அறிவினை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஏன், இந்த பிரச்சினைகளை விவாதிக்கவே அவர்கள் தயக்கம் காட்டினர். மேலும் அவர்களது குடும்பத்தினரும் சமூகத்தில் பெண்களுக்காக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கும் சூழலுக்குள் அவர்களை தள்ளுகின்றனர்" என்று அவர் கூறினார்.
கேமில் வரும் கதாபாத்திரமான நிஷாவாக பயனர்கள் அவர்களை சித்தரித்துக் கொள்ள வேண்டும். கேமின் 5 படிநிலைகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்தல் மற்றும் சூழ்நிலைகளில் முடிவு எடுப்பது என மெய்நிகர் உலகில் நிஷாவாக வலம் வந்து, அவர்களெடுக்கும் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்ளலாம்.
ஆப்பில் சைன் இன் செய்து வயதினை குறிப்பிட்டவுடன், கேமின் முதல் லெவல் தொடங்கும். முதல் லெவில் நிஷா அவரது தந்தையுடன் அவள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை பற்றி சண்டையிடுகிறார். மேலும், பல்வேறு பெண் சாதனையாளர்களைக் கொண்ட 'மை மன்சில்' என்ற வெப் சீரிஸைப் படமெடுக்கும் டாக்டர் பரோமிதா கோஷ்ஷுடன் பயிற்சி பெறுகிறார்.
இரண்டாவது லெவலில், நிஷா டாக்டர் கோஷுடன் சிக்கிமுக்கு பயணம் செய்கிறார். அங்கு அவர்கள் டாக்டர் அருணாவை சந்திக்கிறார்கள். அவர் மாதவிடாய் தயாரிப்புகளை சிறந்ததாக்கும் மையத்தை நடத்திவருகிறார். 3வது லெவலானது மாதவிடாய் ஆரோக்கியம், தகவல்களை வழங்குதல், தயாரிப்புகளின் ஆதாரங்களை வழங்குதல் மற்றும் கட்டுக்கதைகளை உடைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. விளையாட்டிற்கு இடையில் நிஷாவிற்கு, ஆயுஷ் மீது காதல் வருகிறது.
“எபிசோடின் முடிவில், நிஷாவிற்கு முதல் மாதவிடாயை எதிர்கொள்ளும் அவளது தங்கையிடம் இருந்து அழைப்பு வருகிறது. நிஷா லெவல் 2ல் கற்றுக் கொண்டதை வைத்து தங்கைக்கு அறிவுரை கூறுகிறாள்" என்கிறார் 'கேம் ஆஃப் சாய்ஸ், நாட் சான்ஸ்' திட்டத்தின் தலைவரான கவிதா அய்யாகரி.
விளையாட்டிற்கு இடையே மாதவிடாய் சுகாதார ஹெல்ப்லைன் உட்பட வீடியோக்கள் மற்றும் சுகாதார தயாரிப்புகளின் லிங்குகளையும் கேம் வழங்குகிறது.
மேலும், நிலை 3ல் நிஷா, யூடியூப் இன்ஃப்ளூயன்சரான ஷிரீன் மிஸ்திரியை சந்திக்கிறார். அவர், ஒவ்வொரு உறவும் எப்படி மரியாதையாகவும் நட்பாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறார். இடை இடையே உறவு பற்றிய புரிதலுக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரமான ஆயுஷுடனான நிலவும் சந்தர்பங்களையும் கையாள வேண்டும். லெவல் 3ல் ஆயுஷுடன் ஒரு படத்திற்கு வெளியே செல்ல வேண்டுமா, அந்த உறவை எவ்வளவு தூரம் கொண்டு செல்வது என்பதையும் நிஷா தீர்மானிக்க வேண்டும்.
“அவர்களது முதல் டேட்டிங்கில், ஆயுஷ் ஒரு முத்தம் கேட்கிறார். அதற்கு ஆம் அல்லது இல்லை என்று சொல்வதை அவள் தேர்வு செய்யலாம். விளையாட்டின் நோக்கமானது நிஷாவின் முடிவுகளின் மீது விமர்சனங்களை வைப்பதற்காக அல்ல. மாறாக, அவள் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் விதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது” என்றார் அய்யாகரி.
TechSakhi, Rati Foundation மற்றும் Project Nyay'ri போன்ற பெண்களை மையமாகக் கொண்ட என்ஜிஓக்களின் ஹெல்ப்லைன்களின் இணைப்புகளையும் இந்த செயலி வழங்குகிறது.
நான்காவது நிலையில், நிஷா செவிலியரரும் தொழில்முனைவோரான அனு ஜார்ஜை சந்திக்கிறார். அவருடனான உரையாடல் பாதுகாப்பற்ற பாலுறவு, கருத்தடை மற்றும் மருத்துவரிடம் ஆலோசனை ஆகியவற்றை மையப்படுத்தி உள்ளது.
இறுதி நிலை நிஷாவை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளுகிறது. அவளுடைய பெற்றோர் அவளுக்குத் திருமணம் செய்ய ஒரு பையனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆயுஷைப் பற்றி அவள் பெற்றோரிடம் சொல்வாளா, அல்லது அவளுக்கு உடனே திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லையா அல்லது திருமண யோசனையை முழுவதுமாக நிராகரித்துவிட்டு, பத்திரிக்கையாளராக வேண்டும் என்ற தனது லட்சியத்தைத் தொடர்வாளா? - இதுபோன்ற விருப்பத் தேர்வுகள் நிஷாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. பயனர்கள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தேர்வுகளை தேர்ந்தெடுத்து அதன் விளைவுகளை கண்டுக் கொள்ளலாம்.
“விளையாட்டின் முடிவில் மதிப்பெண்களுடன் கூடிய அறிக்கை அட்டையும் பயனாளர்களுக்கு வழங்குகிறது. நீங்கள் கற்றுக்கொண்டதை சோதிக்க கேள்விகளுடன் கூடிய ஒரு மினி கேம் உள்ளது. இன்னும் உங்களிடம் ஏதேனும் கேள்விகளும், சந்தேகங்களும் இருந்தால், குறுந்தகவல் செய்து அறிந்துகொள்வதற்காக Ask Paroக்கான இணைப்பும் ஆப்பில் உள்ளது” என்கிறார் அய்யாகரி.
இதுவரை, கோ நிஷா கோ ஆப்பானது 3 லட்சம் பதிவிறக்கங்களை பெற்றுள்ளது. இந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதற்காக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.
“நாங்கள் பதிவிறக்கங்களை அதிகரிப்பதற்காக செயல்திறன் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டோம். தொடங்கப்பட்ட முதல் மாதத்தில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள செல்வாக்குமிக்கவர்களுடன் இணைந்துள்ளோம். நீங்கள் நிஷாவைச் சந்தித்தீர்களா? என்ற பிரச்சாரத்தையும், குறிப்பிட்ட தலைப்புகளைப் பற்றிப் பேசவும், விளையாட்டை ஊக்குவிக்கவும் பிரச்சாரத்தை நடத்தினோம்” என்றார்.
கேம் ஆஃப் சாய்ஸ், நாட் சான்ஸ் மற்ற இந்திய மொழிகளிலிலும் கேமை உருவாக்குவதற்காக நிதியுதவியை எதிர்நோக்கியுள்ளது. ஏனெனில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் மக்கள் ஆப்பினை தரவிறக்கம் செய்கின்றனர் என்று கூறினார் அய்யாகரி.