மாமல்லபுரத்தை விசிட் அடித்த சுந்தர் பிச்சை; Exclusive போட்டோஸ் மற்றும் சுவாரசிய தகவல்கள்!
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர்பிச்சை மாமல்லபுரத்திற்கு திடீரென விசிட் அடித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களுடன் சுவாரஸ்யமான சில தகவல்கள் இதோ...
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர்பிச்சை மாமல்லபுரத்திற்கு திடீரென விசிட் அடித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களுடன் சுவாரஸ்யமான சில தகவல்கள் இதோ...
சென்னை வந்த சுந்தர் பிச்சை
உலகின் முன்னணி தேடுபொறி தளமான கூகுள் 2015ம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அப்போது கூகுளின் தயாரிப்பு மற்றும் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த சுந்தர் பிச்சைக்கு, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கூகுளின் புதிய நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அப்போது கூகுள் குரோம் மற்றும் குரோம் ஓஎஸ் ஆகிய கூகுள் தயாரிப்புகள் நல்ல வளர்ச்சி அடைந்தன. இதனால் ஜிமெயில் மற்றும் கூகுள் டாக்ஸ் போன்ற பிற கூகுளின் தயாரிப்புகளின் நிர்வாக பொறுப்பும் சுந்தர் பிச்சையிடம் வழங்கப்பட்டது.
இப்படி உலகமே வியந்து பார்க்கும் முன்னணி நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை நம்ப தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. பள்ளிப்படிப்பை பத்மா சேஷாத்ரி பாலா பவனிலும், ஐஐடி கரக்பூரில் பட்டப்படிப்பையும் முடித்த சுந்தர் பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் இயற்பியலில் பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த வாரம் கூகுள் ஃபார் இந்தியா என்ற நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்த சுந்தர் பிச்சை, டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார். கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வான ’கூகுள் ஃபார் இந்தியா’ (Google for India) நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிர்வாகிகள் பல்வேறு புதிய பிராடக்டுகளையும் திட்டங்களையும் அறிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உரையாடினார். அதோடு, அன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார் சுந்தர் பிச்சை.
என்னதான் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் சுந்தர் பிச்சை டெல்லிவரை வந்துவிட்டு அமெரிக்கா சென்றுவிடுவார் என்று நினைத்தபோது, சுந்தர் பிச்சை தான் யார் என்பதே தெரியக்கூடாது என அடையாளங்களை மறைத்துக்கொண்டு மாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இது சுந்தர்பிச்சை தானா? வேறு யாரையாவது தவறாக சொல்கிறார்களா? என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், அது சுந்தர்பிச்சை தான் என்பதை அடித்துக்கூறும் விதமாக பிரத்யேக போட்டோவுடன், சுவாரஸ்யமான தகவல்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டினரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மாமல்லபுரம் விளங்குகிறது. இங்குள்ள சிற்ப வேலைபாடுகளை கண்டு ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அந்தவகையில் சுற்றுலா பயணியாக தான் சுந்தர்பிச்சை தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரத்திற்கு வந்துள்ளார்.
தனது தந்தை ரகுநாதா பிச்சை, லக்ஷ்மி பிச்சை, மனைவி அஞ்சலி பிச்சை மற்றும் குழந்தைகள் காவ்யா, கிரண் ஆகியோருடன் இன்பச் சுற்றுலாவாக மாமல்லபுரம் வந்துள்ளார். முழுக்க முழுக்க குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்கிய சுந்தர் பிச்சை, அவர்களுடன் பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை கண்டு ரசித்துள்ளார்.
தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காகவும், சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்கவும் கருப்பு தொப்பி, கருப்பு நிற மாஸ்க், சிம்பிளான டீ-ஷர்ட் அணிந்து மாமல்லபுரத்தில் வலம் வந்த சுந்தர் பிச்சை, மொத்தம் அரை மணி நேரங்கள் மட்டுமே சிற்பங்களை சுற்றிப்பார்த்துள்ளார்.
மாமல்லபுரத்தில் உள்ள முக்கியமான இடங்கள் குறித்து சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அவருக்கு விளக்கமளிக்க, சுந்தர் பிச்சை ஆர்வத்துடன் அந்த இடங்களை கண்டு ரசித்திருக்கிறார். அதன்பின், அசோக்நகரில் உள்ள அவரது பெற்றோர்கள் வசிக்கும் வீட்டிற்கு சென்றுவிட்டு, சுந்தர் பிச்சை அன்றைய தினம் இரவே அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
'என்னுடன் தமிழிலே பேசினார்; மறக்க முடியாத 16 நிமிட சந்திப்பு’ - சுந்தர் பிச்சை உடன் செல்வமுரளி உரையாடியது என்ன?