ரூ.200 கோடி டர்ன்ஓவர் இலக்குடன் பயணிக்கும் 3 தலைமுறை பாரம்பரிய நிறுவனம் ‘அன்னபூர்ணா மசாலா’
1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட அன்னபூர்ணா மசாலா & ஸ்பைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த விஜய் பிரசாத் பகிரும் வளர்ச்சிக் கதை.
அன்னபூர்ணா நிறுவனம் 1975ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மசாலாக்கள் மிகவும் பிரபலமானவை. சுத்தமான மசாலாக்கள், ரெடி டு குக் மிக்ஸ் மட்டுமல்லாமல் தமிழ்நாடு மற்றும் சுற்றுப்புற மாநிலங்களின் பிரத்யேக தேவைக்கேற்ப மசாலா கலவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப புதுமைகளைப் புகுத்தி இந்தப் பிரிவில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. கே.தாமோதரசுவாமி நாயுடு நிறுவிய இந்நிறுவனத்தை அவரைத் தொடர்ந்து 1980-களில் ஆர்.வேலுமணி நடத்தி வந்தார்.
இன்று மூன்றாம் தலைமுறை தொழில்முனைவர் ஆக விஜய் பிரசாத் (வேலுமணியின் மகன்), அன்னபூர்ணா மசாலா & ஸ்பைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தலைமையில் புதிய பிராண்ட் அடையாளம், டேக்லைன், பேக்கேஜிங், சந்தை இணைப்பு என பல வகைகளில் ரீபிராண்ட் செய்யப்பட்டுள்ளது.
விஜய் பிரசாத் நிறுவனத்தின் வணிக உத்திகள் மற்றும் திட்டமிடல் குறித்து யுவர்ஸ்டோரி தமிழ் இடம் பகிர்ந்துகொண்டார்.
அவருடனான உரையாடலின் தொகுப்பு இதோ:
யுவர்ஸ்டோரி தமிழ்: அன்னபூர்னா மசாலா எப்படித் தொடங்கியது என சொல்லுங்கள்?
விஜய் பிரசாத்: 1975ம் ஆண்டுகளில் மசாலாக்கள் வீடுகளிலேயே அரைக்கப்பட்டன. அந்த சமயத்தில் பல வகையான மசாலாக்களை பேக் செய்து சில்லறை வர்த்தக அவுட்லெட்களில் விநியோகம் செய்ய அன்னபூர்ணா திட்டமிட்டது. அரைக்கப்பட்ட ரெடி மசாலாக்களை ஹோட்டல்களில் விநியோகம் செய்வதே திட்டமாக இருந்தது. பின்னர் எஃப்எம்சிஜி நிறுவனமாக உருவானது.
யுவர்ஸ்டோரி தமிழ்: வணிகப் பொறுப்புகளை ஏற்பதற்கு முன்பு நீங்கள் ஈடுபட்டிருந்த செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
விஜய் பிரசாத்: 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பு சென்னையில் நெட்வொர்க் சப்போர்ட் என்ஜினியராகவும் பின்னர் ஹெச்.ஆர் எக்சிக்யூடிவாகவும் பணிபுரிந்தேன். எனக்கு உணவில் ஆர்வம் அதிகம் என்பதால் உணவுத் துறையில் செயல்பட விரும்பினேன்.
ஆஸ்திரேலியாவில் உணவு தொழில்நுட்பம் படித்து 2012ம் ஆண்டு சென்னை திரும்புவதற்கு முன்பு ஓராண்டு உணவு விஞ்ஞானியாக பணியாற்றினேன்.
யுவர்ஸ்டோரி தமிழ்: 2012ம் ஆண்டு உங்கள் அப்பாவிடம் இருந்து வணிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டபோது உங்கள் திட்டமும் இலக்கும் என்னவாக இருந்தது?
விஜய் பிரசாத்: என் அப்பா வேலுமணியுடன் 2012ம் ஆண்டு வணிகத்தில் இணைந்தேன்.
கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் வரை ஆய்வகத்தில் அதிக நேரம் செலவிட்டேன். மசாலாக்கள் எங்கிருந்து வருகிறது, அதன் தன்மை என்ன, சமைத்த உணவில் எத்தகைய ருசியை சேர்க்கிறது போன்றவற்றைத் தெரிந்துகொண்டேன். இதுதவிர அவுட்லெட்களுக்கு சென்று நுகர்வோரின் விருப்பத்தைத் தெரிந்துகொள்வதிலும் அன்னபூர்ணா சானல் பார்ட்னர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்வதிலும் நேரம் செல்விட்டேன்.
எஃப்எம்சிஜி நிறுவனங்கள் செயல்படும் விதம் குறித்து தெரிந்துகொள்ளவும் 2014ம் ஆண்டு முழுமையாக பொறுப்பேற்கவும் இந்த இரண்டாண்டு கால ஆய்வு உதவியது.
அடுத்தடுத்த தலைமுறையாக வணிகம் தொடரப்படுவதால் பாரம்பரிய முறையில் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தயாரிப்பு செயல்முறைகள் தானியங்கி முறையில் மாற்றப்பட்டாலும்கூட சிலவற்றில் பாரம்பரிய முறைகளே பின்பற்றப்படுகின்றன.
2014ம் ஆண்டு நான் பொறுப்பேற்ற பிறகு விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதிலும் சிறப்பு கவனம் செலுத்தினேன்.
யுவர்ஸ்டோரி தமிழ்: உங்கள் இலக்கு நோக்கி எப்படிப் பயணித்தீர்கள்? நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த மாதிரியான புதுமைகளையும் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தினீர்கள்?
விஜய் பிரசாத்: வலுவான கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தினேன். விற்பனை, மனிதவளம் என வெவ்வேறு செயல்பாடுகளுக்கு தொழில்முறை வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த செயல்முறையில் எங்கள் உற்பத்தித் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஆட்டோமெடிக் பேட்சிங் சிஸ்டம் உருவாக்கியுள்ளோம். இதன்படி சரியான அளவில் மூலப்பொருட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு அரைப்பதற்காக ப்ளெண்டருக்கு அனுப்பப்படும். அனைத்து பேட்ச்களிலும் தரம் நிலையாக இருக்கவே இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யுவர்ஸ்டோரி: நீங்கள் பொறுப்பேற்ற பின்னர் விரிவாக்கப் பணிகளில் எந்த அளவிற்கு வெற்றியடைந்திருக்கிறீர்கள்?
விஜய் பிரசாத்: நான் பொறுப்பேற்ற பிறகு, 3 முதல் 4 ஆண்டுகள் தமிழகத்தின் தெற்குப் பகுதிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு விரிவடைவதில் எங்கள் கவனம் இருந்தது.
5 ஆண்டுகளில் 6 கோடியாக இருந்த எங்கள் வருவாய் 36 கோடி ரூபாயாக அதிகரிக்க இந்த விரிவாக்கம் உதவியது.
யுவர்ஸ்டோரி: மூன்றாம் தலைமுறை தொழில்முனைவராக நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டதால் வணிகத்தைத் தொடர்வது எளிதாக இருந்ததா? சவால்கள் இருந்ததா?
விஜய் பிரசாத்: நிச்சயம் எளிதாக இருக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக அனைவரும் ஒரே மாதிரியான செயல்பாடுகளுக்கு பழகியிருந்ததால் அவர்களிடையே மாற்றத்தைக் கொண்டு வருவது எளிதாக இருக்கவில்லை. பலர் வேலையை விட்டு விலகினார்கள். இது தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்தன. இருப்பினும் திட்டமிட்டபடி மாற்றங்களைக் கொண்டு சேர்க்க புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
யுவர்ஸ்டோரி: கடந்த மூன்றாண்டுகளில் அன்னபூர்ணா மசாலா வளர்ச்சி விகிதம் எப்படி இருந்தது?
விஜய் பிரசாத்: 2018ம் ஆண்டில் 28 கோடி ரூபாயும், 2019ம் ஆண்டில் 32 கோடி ரூபாயும் 2020ம் ஆண்டில் 36 கோடி ரூபாயும் டர்ன்ஓவர் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி இருந்தாலும் நிலையான வளர்ச்சியை எட்டவில்லை என்பதை உணர்ந்தோம்.
சந்தையில் மின்வணிக செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் எங்களை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்துள்ளோம்.
யுவர்ஸ்டோரி: உணவு விஞ்ஞானியாக புதுமை மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய எத்தகைய அம்சங்களை இணைத்துள்ளீர்கள்?
விஜய் பிரசாத்: செயற்கை நிறங்கள் சேர்க்கப்படாத சுத்தமான தயாரிப்பை வழங்குகிறோம். ஒவ்வொரு மசாலா பொருளுக்கும் மருத்துவக் குணங்கள் உண்டு. இன்றளவும் ஆயுர்வேதத்தில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும், இன்றைய கோவிட் சூழலில் இவற்றின் முக்கியத்துவம் பலரைச் சென்றடைந்துள்ளது. எங்கள் தயாரிப்பு செயல்முறையில் மசாலா பொருட்களின் தன்மை மாறாதவாறு பார்த்துக்கொள்கிறோம்.
வழக்கமாக அரைக்கப்படும் மசாலா வகைகளுடன் 2014ம் ஆண்டு புதிதாக ‘கண்ட்ரி சிக்கன் கறி’ என்கிற வகையை அறிமுகப்படுத்தினோம். இது சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
யுவர்ஸ்டோரி: உங்கள் பயணத்தில் சவால்களை சந்திக்க நேரும்போது எது உங்களுக்கு ஊக்கமளிக்கிறது?
விஜய் பிரசாத்: அன்றாடம் சந்திக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்ள மனம் தளர்ந்துவிடாமல் விடாமுயற்சியுடன் செயல்படவேண்டியது முக்கியம். ஊக்கம் மட்டுமே இந்த மனநிலையைக் கொடுக்கும்.
“வாழ்க்கை எத்தனை கடினமாக இருந்தாலும் நீங்கள் செயல்பட்டு வெற்றியடையக்கூடிய ஏதோ ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும். நீங்கள் மனம் தளராமல் இருக்கவேண்டும்,” – ஸ்டீபன் ஹாக்கிங். இந்த வரிகளே எனக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
யுவர்ஸ்டோரி: ஒரு தொழிலதிபராக இன்றைய கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்? ஊரடங்கு உங்கள் வணிகத்தை பாதித்ததா?
விஜய் பிரசாத்: கோவிட் காலம் முதல் நுகர்வோர் வாங்கும் விதம் வெகுவாக மாறியுள்ளது. தங்கள் நோய் எதிர்பாற்றலை மேம்படுத்தும் ஆரோக்கியமான பொருட்களையே தேடி வாங்குகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதனை மிகப்பெரிய வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம். எனவே நுகர்வோர் தேவையறிந்து அதற்கேற்ப எளிதாக சமைக்கக்கூடிய புதுமையான மசாலா வகைகளை வழங்கி வருகிறோம்.
லாக்டவுன் சமயத்தில் லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான பிரச்சனைகள் இருந்தது. குண்டூரில் இருந்து மிளகாய், ராஜஸ்தானில் இருந்து தனியா, கேரளாவில் இருந்து மிளகு என இவை அறுவடை செய்யப்படும் பகுதிகளில் இருந்தே நாங்கள் நேரடியாக வாங்குகிறோம். இவை அத்தியாவசிப் பொருட்கள் பிரிவின்கீழ் வந்தாலும்கூட மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டபோது பிரச்சனைகளை சந்தித்தோம்.
அதேபோல் எங்கள் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் சானல் பார்ட்னர்களுக்கு அனுப்புவதும் பிரச்சனையாக இருந்தது. இதுபோன்ற இக்கட்டான சூழல்களைத் தவிர்க்க சொந்தமாக வாகனங்கள் ஏற்பாடு செய்யத் தீர்மானித்துள்ளோம்.
யுவர்ஸ்டோரி: நிறுவனத்திலும் ஊழியர்களிடையேயும் எத்தகைய மாற்றத்தை புதிதாக அறிமுகம் செய்துள்ளீர்கள்?
விஜய் பிரசாத்: இந்தப் பிரிவில் ஏராளாமானோர் செயல்படும் நிலையில் தனித்துவம் முக்கியம் என்பதை ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. நாங்கள் பாரம்பரியமாக செயல்படும் நிறுவனம் என்பதால் பிராந்திய ப்ளெண்ட்/மசாலாக்கள் என புதிய பிரிவைக் கொண்டு வரத் தீர்மானித்தோம்.
இந்தப் பகுதியில் ஒரு இடைவெளி இருப்பதை எங்களால் உணரமுடிந்தது. வாடிக்கையாளர்கள் புதுமையாகவும் அதேசமயம் எளிதாக சமைக்கும் வகையிலும் எதிர்பார்க்கிறார்கள். இங்கு காணப்படும் இடைவெளியை எங்கள் தயாரிப்புகள் பூர்த்தி செய்யும் என்று திடமாக நம்புகிறோம்.
யுவர்ஸ்டோரி: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
விஜய் பிரசாத்: நாங்கள் சந்தையில் மேற்கொண்ட ஆய்வுகள் தற்போதைய தேவைகளை உணர்த்தியுள்ளன. அதன்படி நாங்கள் எங்கள் பிராண்டை மாற்றியமைக்கவேண்டிய அவசியம் நிலவுகிறது.
எனவே பிரத்யேக பிராண்ட் ஸ்ட்ராடெஜி குழுவை நியமித்தோம். ஓராண்டு கடின உழைப்பிற்குப் பிறகு 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி பிராண்ட் மறுஅறிமுகம் செய்யப்பட்டது.
“மூன்றாண்டுகளில் 200 கோடி ரூபாயை எட்டவேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டுள்ளோம். இதை சாத்தியப்படுத்த ஜெனரல் ட்ரேட் (GT), மாடர்ன் ட்ரேட் (MT) என வணிகத்தை இரு வகைப்படுத்தியுள்ளோம்.
25,000 பேர் கொண்ட கிராமம், சிறு கடைகள் முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வரை கொண்ட மெட்ரோ போன்றவற்றில் ஜெனரல் ட்ரேட் கவனம் செலுத்தும். டி-மார்ட், ரிலையன்ஸ், Spar, Ratnadeep மற்றும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற மின் வணிக தளங்கள் என தேசிய மற்றும் பிராந்திய அளவில் செயல்படும் சங்கிலித் தொடர் நிறுவனங்களில் மாடர்ன் ட்ரேட் கவனம் செலுத்தும்.
இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு வணிகத் தலைவர் பொறுப்பேற்பார். மார்க்கெட்டிங் நடவடிக்கைகளைப் பொருத்தவரை டிஜிட்டல், பிரிண்ட், எலக்ட்ரானிக் என பல்வேறு வகைகளில் அணுகத் திட்டமிட்டுள்ளோம்.