29 வயதில் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகரான இளம் தமிழர்!
சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான ஹரிஹரா அருண் சோமசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. மன்றத்தின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பான சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஹேக்கில் தனது தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வருகிறது. 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இருந்து இயங்கத் தொடங்கியது.
உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கியப் பணிகளாகும். 1980 களுக்குப் பின்னர் இந்நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில், வளர்ந்துவரும் நாடுகள் மத்தியில் ஆர்வம் காணப்படுகின்றது.
இந்த நீதிமன்றத்தில் சர்வதேச சட்ட விதிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சர்வதேச சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் 5 பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று செயல்படுகிறது. சர்வதேச சட்டம் படித்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு இயங்கும் இந்த ஐவர் குழுவின் ஆலோசனைப்படிதான் சர்வதேச சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இம்முறை இந்த சட்ட ஆலோசனைக் குழுவில் உள்ள ஐந்து பேரில் ஒருவராக தமிழகத்தைச் சேர்ந்த ஹரிஹரா அருண் சோம சங்கர் என்ற 29 வயது இளைஞர் நியமியக்கப்பட்டுள்ளார். இந்த உயரிய பதவியில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், குறிப்பாக தமிழர் அமருவது இதுவே முதல்முறை ஆகும்.
அதேபோல் பெரும்பாலும் இந்த ஆலோசனைக் குழுவில் இடம் பெறுபவர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், மிகக் குறைந்த வயதில் சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராகி புதிய சாதனை படைத்துள்ளார் ஹரிஹரா அருண் சோம சங்கர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவரான ஹரிஹரா அருண், சாகித்ய அகாடமி விருதுபெற்ற மீ.ப.சோமசுந்தரத்தின் மகள் வழி பேரன் ஆவார். இவரது தந்தை கோமதி நாயகமும் மூத்த வழக்கறிஞர். இவர் தமிழக அரசின் வழக்கறிஞராகச் செயல்பட்டவர். தாயார் பெயர் ராஜநந்தினி.
தந்தை வழியில் வழக்கறிஞராக விரும்பிய ஹரிஹரா அருண், புனே பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுக் கல்லூரிகளில் படித்து சர்வதேச சட்டத்தில் மேற்கொண்டு பல பட்டங்களைப் பெற்றார். கல்லூரி காலத்திலேயே சுமார் 28 ஆயிரம் மாணவர்களுக்கு கல்லூரி சேர்மனாக இருந்துள்ளார். சர்வதேச அளவில் கல்லூரிகளில் படித்து பட்டங்கள் பெற்றதன் மூலம் சர்வதேச வழக்கறிஞர் ஆனார் ஹரிஹரா அருண்.
படித்து முடித்ததும் சில காலம் லண்டனில் வேலை பார்த்தவர், பின்னர் இந்தியா திரும்பியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது வாதத் திறமையால் பல்வேறு வழக்குகளில் திறம்பட செயல்பட்டு வெற்றிகளைப் பெற்றார். குறிப்பாக மகாநதி ஷோபனா, கார்த்தி சிதம்பரம், எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி, பவர்ஸ்டார் சீனிவாசன் எனப் பல பரபரப்பான வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர் ஹரிஹரா அருண். இதற்காக பல நீதியரசர்களின் பாராட்டும் இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது சர்வதேச நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் ஹரிஹரா அருண். சர்வதேச அளவில் கல்வியிலும், பணி அனுபவத்திலும் தகுதி பெற்றிருந்ததால், இந்தப் பதவியை அவர் பெற்றுள்ளார். தனக்குக் கிடைத்த இந்தப் பதவியை, தாத்தா வழியில் தமிழின் பெருமையை சர்வதேச அளவில் தூக்கிப்பிடிக்க கிடைத்த வாய்ப்பாகவே கருதுவதாகக் கூறுகிறார் ஹரிஹரா அருண்.
“சின்ன வயதில் இருந்தே நான் பார்த்து வளர்ந்த பெரிய வழக்கறிஞர் என் அப்பா தான். அவர் தான் என் ரோல் மாடல். வீட்டிலேயே மூத்த வழக்கறிஞர் இருந்ததால், அவரைப் போலவே நானும் குறிக்கோளில் இருந்து விலகாமல் படித்து பெரிய வழக்கறிஞராக ஆக வேண்டும் என விரும்பினேன்,” என்கிறார்.
தாத்தா மீ.பா.சோமசுந்தரம் தமிழில் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அப்படிப்பட்ட எழுத்துக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் ஹரிஹரா அருணுக்கு எழுதுவதில் ஆர்வம் அதிகம். தற்போது இரண்டு புத்தகங்களை எழுதி வருகிறார்.
அவற்றில் ஒன்று குற்றவியல் மற்றும் சட்டம் சம்பந்தப்பட்டது, மற்றொன்று பருவநிலை மாறுபாடு பற்றியது. விரைவில் இந்தப் புத்தகங்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.
சட்டரீதியாக ஒருபுறம் நீதிக்காக குரல் கொடுத்து வரும் ஹரிஹரா அருண், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். எஸ்வீகேன் என்ற என் ஜி ஓ மூலம் நேரடியாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
“எந்தவொரு வேலை என்றாலுமே நிச்சயம் அதில் தடைகள் வரத்தான் செய்யும். நானும் அதுபோல் பல தடைகளை, இடையூறுகளை, தன்னம்பிக்கை அற்ற வார்த்தைகளைக் கடந்து தான் இந்த நிலையை அடைந்திருக்கிறேன்.
இந்தியாவிற்கும் தன் சேவையை வழங்க வேண்டும் என்பதே என் முதல் ஆசை. அதே சமயம் சர்வதேச அளவில் இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட வேண்டும் என்பதும் என் குறிக்கோள். சட்டரீதியாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும்,” என்கிறார் ஹரிஹரா அருண்.
இளம் வயதில் சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிஹரா அருண் சோமசங்கருக்கு துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.