6 மாதத்தில் 25,000 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்: ‘மாம்’களுக்கு உதவும் ஆப் உருவாக்கிய பத்மினி ஜானகி!
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பெண்களைவிட வேறு யாருக்கு சுலபமாக புரிந்து விட முடியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ‘Mind and Mom' என்ற ஆப்'பை உருவாக்கியுள்ளார் தொழில்முனைவோரான பத்மினி ஜானகி.
பிரவசம் என்பது ஒவ்வொரு பெண்களுக்குமே மறுபிறவி தான். தன் வயிற்றில் சுமக்கும் மற்றொரு உயிரை பூமிக்கு பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்கும் வரை, உடலளவிலும், மனதளவிலும் பெண்கள் படும்பாடு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதிலும் குறிப்பாகத் தலைப் பிரசவம் என்றால், அப்பெண்ணுக்கு மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கும்.
தான் செய்வது எந்தளவிற்கு சரி, தான் உட்கார்ந்தால், எழுந்தால் என ஒவ்வொரு அசைவிலும் குழந்தைக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டு விடுமா என சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும். இது சகஜமான விசயம் தான்.
ஆனால், இந்த சந்தேகங்களுக்கு எப்போதுமே கையோடு ஒரு மகப்பேறு மருத்துவரை வைத்துக் கொண்டே இருக்க முடியாது. அப்படியென்றால், தனது சந்தேகங்களை யாரிடம் கேட்பது, அவர்களிடம் சரியான விளக்கம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு பேருததவியாக உருவாக்கப்பட்டது தான் பத்மினி ஜானகி-யின் 'Mind and Mom' ஆப்.
2021 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப், மூலம் இதுவரை சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர் என்கிறார் பத்மினி.
சுகமான முறையில் தெளிவான சிந்தனையுடன் பெண்கள் பிரவசத்தை எதிர்கொள்ள தங்களது ஆப் மிகவும் உதவிகரமானதாக இருப்பதாக கூறுகிறார் அவர்.
தனது சொந்த சேமிப்புப் பணம் ரூ. 20 லட்சம் முதலீட்டில் இந்த ஆப்'பை உருவாக்கியுள்ளார் பத்மினி. மருத்துவம் மற்றும் உளவியல் சார்ந்த ஆப் என்பதால், சந்தையில் அறிமுகப் படுத்துவதற்கு முன்னதாக பல்வேறான ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
விஸ்காம் மாணவியான எனக்கு ஆரம்பத்தில் நடிக்கச் செல்ல வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. ஆனால் கல்லூரி காலகட்டத்தில் எனக்குள் இருந்த டிசைனிங் திறமையை தெரிந்து கொண்டேன். இதனால் கல்லூரி வளாகத் தேர்வு மூலம் பிரபல மென்பொருள் நிறுவனம் ஒன்றில் டிசைனராகச் சேர்ந்தேன். ஓன்றரை ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த பின்னர் வேறொரு நிறுவனத்திற்கு பணி மாறினேன். ஹெல்த்கேர் தொடர்பான அந்த நிறுவனம் மூலம், பல்வேறுபட்ட மக்களோடு பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது தான், பிரசவம் பற்றிய பெண்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றி எனக்குத் தெரிய வந்தது.
”இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கும் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தது. 23 வயதில் கர்ப்பமாக இருந்தபோது, நானும் பிரசவம் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் பற்றி ஏகப்பட்ட குழப்பங்களைச் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இதற்கு யாரிடமிருந்தாவது தெளிவான பதில் கிடைத்து விடாத என்ற ஆசை ஏற்படும். அந்த தேடல் தான் ’மைண்ட் அண்ட் மாம்’ உருவாக அடித்தளம்,” என்கிறார் பத்மினி.
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பெண்களைவிட வேறு யார் அவ்வளவு சுலபமாக புரிந்து விட முடியும் என்பதே பத்மினியின் கருத்து. எனவே தானே, பெண்களுக்கான குறிப்பாக கர்ப்பிணிகளுக்கான பிளாட்பார்ம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மருத்துவரும், விஞ்ஞானியுமான விநாயக் என்பவருடன் சேர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
“ஒவ்வொரு பெண்களின் உடலமைப்பும் வெவ்வேறு மாதிரியானது. நான் வேறு, நீங்கள் வேறு. எனவே எல்லோரின் சந்தேகங்களுக்கும் ஒரே மாதிரியான தீர்வை, விளக்கத்தைக் கொடுத்துவிட முடியாது. எனவே தான் பல்வேறு மருத்துவர்கள் மற்றும் பெண்களுடன் பேசி, அவர்களின் கர்ப்பகால உடல் பிரச்சினைகள் என்னென்ன, அதற்கான தீர்வுகள் எப்படிப்பட்டது என்பது குறித்து ஆழமான ஆராய்ச்சிகள் மேற்கொண்டேன்.
அதிலும், குறிப்பாக கொரோனா லாக்டவுனில் கர்ப்பிணிகள் தங்களது மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இவற்றை எல்லாம் மனதில் வைத்து தான் கடந்த மார்ச் மாதம் ’Mind and Mom' செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
எதிர்பார்த்தைப் போலவே அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த குறுகிய காலகட்டத்திலேயே எங்களது ஆப் மூலம் சுமார் 25 ஆயிரம் கர்ப்பிணிகள் சுகமான முறையில் மற்றும் இனிமையான மனநிலையில் பிரசவத்தை எதிர்கொண்டு, நல்ல முறையில் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர், என்கிறார் பத்மினி.
’மைண்ட் அண்ட் மாம்’ ஆப் மூன்று விதமான பிரிவுகளின் கீழ் பெண்களுக்கான வழிகாட்டுத்தளமாக உள்ளது. அதில் முதலாவது கர்ப்பிணிப் பெண்களின் மனநலம். இதில் கர்ப்ப காலத்தில் பெண்கள் தியானம் உள்ளிட்டவற்றின் மூலம் மனதை எப்படி அமைதியாக வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றியது.
அடுத்தது கர்ப்பகாலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் மற்றும் அதிக உடல் எடையைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றியது. மூன்றாவது; அந்தக் காலகட்டத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கம் பற்றியது. இந்த மூன்று பிரிவுகளுமே கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது என்பதால், பத்மினியின் ஆப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
“இணையத்தில் இது போன்ற ஏகப்பட்ட ஆப்கள் உள்ளன. ஆனால், அதில் இருந்து எங்கள் ஆப் தனித்துவமாக அதிக மக்களைச் சென்றடையக் காரணம், நம்பகத்தன்மை தான். சுமார் 70 மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எங்களது ஆப்பை சிபாரிசு செய்கின்றனர். இதன்மூலம் எங்களைப் பற்றிய அறிமுகம் பல்லாயிரக்கணக்கான கர்ப்பிணிப் பெண்களைச் சென்றடைகிறது. இந்த வாய்மொழி விளம்பரமே எங்களின் மார்க்கெட்டிங் யுக்தி ஆகும்,” என்கிறார் பத்மினி.
இந்த ஆப் மட்டுமின்றி கர்ப்பிணிகள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான ஆன்லைன் ஸ்டோர் ஒன்றையும் பத்மினி நடத்தி வருகிறார். இந்த வெப்சைட்டில் இந்தியா முழுவதும் இருந்து பல தொழில்முனைவோர்கள் உருவாக்கிய பொருட்களை அவர் விற்பனை செய்கிறார். அவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் பெண்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
”கர்ப்பிணிகள் மட்டுமின்றி குழந்தையின்மை, பிசிஓடி, பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல்பருமன் என மேலும் பல பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி ’மைண்ட் அண்ட் மாம்’ விரைவில் பேச இருக்கிறது. இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்னும் ஏழு ஆண்டுகளில் சுமார் 100 மில்லியன் மக்களை எங்கள் ஆப் சென்றடைய வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு,” என எதிர்காலம் பற்றிய தெளிவான திட்டத்தோடு பேசுகிறார் பத்மினி.
நமக்கான கேள்விகளுக்கான பதிலைத் தேடிக் கொண்டே இருக்காமல், மற்றவர்களுக்கான சந்தேகங்களை எப்படி தீர்ப்பது என யோசிக்கும் போது தான் நாம் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். அப்படித்தான் தன் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கான பதிலைத் தேடிய பத்மினி, இன்று வெற்றிகரமான தொழில்முனைவோராகி இருக்கிறார்.