மாற்றம் ஏற்படுத்தும் இல்லத்தரசி: சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சீமா!
48 வயது சீமா திருமணம் முடிந்து இருபதாண்டுகள் கடந்த நிலையில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் என்ஜிஓ நிறுவியுள்ளார்.
“மற்றொரு இலக்கை நிர்ணயிப்பதற்கோ அல்லது புதிய கனவு காண்பதற்கோ இன்னும் காலம் கடந்துவிடவில்லை,” என்றார் பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் மற்றும் இறையியலாளர் சிஎஸ் லூயிஸ்.
இதை முழுமையாகப் புரிந்துகொண்ட 48 வயதான சீமா கண்டலே, இதை தன் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறார். சீமாவிற்கு எப்போதும் சமூக நலனில் பங்களிப்பதில் ஈடுபாடு அதிகம். விருப்பம் அதிகம் இருந்தபோதும் சீமாவால் அதற்கு செயல்வடிவம் கொடுக்க முடியாமல் போனது.
சீமாவிற்குத் திருமணம் நடந்து இருபதாண்டுகள் ஆகிறது. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். காலம் கடந்துவிட்டதே என்று மனம் தளர்ந்துவிடாத சீமா, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி பாடத்தில் முதுகலைப் பட்டம் படித்தார். கடினமாக உழைத்து பட்டப்படிப்பை முடித்தார்.
அதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு மும்பையில் Ashay Social Group என்கிற என்ஜிஓ தொடங்கினார். இந்த என்ஜிஓ பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் மோசமான பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பழைய துணிகளை பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்து துணி பைகளாக மாற்றுவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதவிடாய் பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
“மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிகளவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதைக் கவனித்து வருகிறேன். எனது சுற்றுவட்டாரத்தில் மளிகைப் பொருட்களை கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், ஸ்ட்ரா, உணவுப் பொட்டலங்களின் ராப்பர்கள் போன்றவற்றை மக்கள் தூக்கியெறிவதை கவனித்தேன். எனவே இந்தப் பிரச்சனையைக் கையிலெடுத்து பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தீர்மானித்தேன்,” என்று சோஷியல்ஸ்டோரி இடம் சீமா தெரிவித்தார்.
பசுமையான சுற்றுச்சூழலை நோக்கிய பயணம்
சீமா முதலில் துணி பைகள் தயாரித்து விநியோகிக்கத் தொடங்கினார். அருகில் வசிப்பவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் உள்ள பழைய புடவை, பிளவுஸ் உள்ளிட்ட பழைய துணிகளை என்ஜிஓ-விற்குத் தருமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் நான்கு பெண்களை பணியமர்த்தினார். நன்கொடையாகப் பெறப்பட்ட துணிகளைக் கொண்டு பைகள் தைப்பதற்கு அவர்களுக்கு பயிற்சியளித்தார். துணி பைகள் தயாரானதும் அவற்றை மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், உள்ளூர் சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்.
சீமா கடந்த ஐந்தாண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
“கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் கொடுப்பதைத் தடுக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டேன். மேலும் துணி பைகள் மறுபயன்பாட்டிற்கு உகந்தவை என்பதால் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு குறையும். இதனால் நிலத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவும் குறையும். பிளாஸ்டிக் கழிவுகள் நம் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது,” என்றார்.
48 வயதான சீமா செய்தித்தாளில் மாதவிடாய் கப் குறித்து படித்தார். அதை பயன்படுத்திப் பார்க்க விரும்பிய இவர், ஒரு மாதவிடாய் கப் வாங்கிப் பயன்படுத்தினார். சானிட்டரி பேட்களைக் காட்டிலும் இது வசதியாக இருப்பதாக உணர்ந்தார்.
மாதவிடாய் கப் குறித்து மேலும் ஆய்வு செய்தார். இவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதை உணர்ந்தார். சானிட்டரி பேட்கள் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படுவதால் அவை மக்குவதற்கு எத்தனையோ நூறாண்டுகள் எடுத்துக்கொள்வதைப் புரிந்துகொண்டார்.
“ஒவ்வொரு பெண்ணும் தங்களது வாழ்நாளில் 11,000 பேட்கள் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன,” என்றார் சீமா.
2017ம் ஆண்டு சீமா மாதவிடாய் கப் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே இதுகுறித்து பேசினார். சமூக வலைதளங்களில் மாதவிடாய் கப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி வீடியோவாகப் பதிவிட்டார். இவரது பதிவு மக்களிடையே பிரபலமானது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதவிடாய் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அமர்வுகளை ஏற்பாடு செய்யுமாறு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இவரைத் தொடர்பு கொண்டன.
“நான் அமர்வுகளைத் தொடங்கும்போது மாதவிடாய் கப்பை பெண்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அதைப் பயன்படுத்தும் விதம் குறித்தும் உதிரப்போக்கு அதில் சேகரிக்கப்படுவது குறித்தும் பெண்களுக்கு விளக்குகிறேன். இதைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளையும் சுட்டிக்காட்டுகிறேன். தடிப்புகள், சரும தொற்றுகள், லீக்கேஜ் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு அளிப்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கிறேன்,” என்றார் சீமா.
இவைதவிர மாதவிடாய் கப் தயாரித்து, விற்பனை செய்யும் பணிகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். இவரே சொந்தமாக கப் டிசைன் செய்துள்ளார். ரப்பர் மற்றும் சிலிக்கான் பொருட்களைத் தயாரிக்கும் இவரது நண்பர் ஒருவரிடம் சொந்த டிசைனைக் கொடுத்து தயாரிப்புப் பணிகளை அவர் மூலம் அவுட்சோர்ஸ் செய்கிறார்.
RUTU என்றழைக்கப்படும் இவரது மாதவிடாய் கப் ஒன்றின் விலை 555 ரூபாய். சீமா இதுவரை 2,600 மாதவிடாய் கப் விற்பனை செய்துள்ளார்.
பலருக்கு உந்துதலளிக்கிறார்
சீமா Ashay சோஷியல் குரூப் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்துள்ளார். துணிப் பைகளை இலவசமாக வழங்கும் முயற்சியும் மாதவிடாய் கப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவைதவிர பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரியளவில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்கிறார்.
சீமாவின் இந்த முயற்சிகள் எளிதாக இருந்துவிடவில்லை. இவரது பயணத்தில் எத்தனையோ சவால்களைக் கடந்து வந்துள்ளார்.
“இருபதாண்டுகள் கழித்து படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருந்தது. ஆனால் நான் மனம் தளர்ந்துவிடவில்லை. என் முயற்சியைத் தொடர்ந்தேன். அதேபோல் மாதவிடாய் குறித்த தவறான கற்பிதங்கள் மக்கள் மனதில் பதிந்துள்ளது. இதை மாற்றுவது மற்றுமொரு சவாலாக இருந்தது. மாதவிடாய் கப் குறித்து நான் பேசத் தொடங்கும்போது பலர் காது கொடுத்துக் கேட்கவில்லை,” என்றார் சீமா.
சீமா தனது முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருங்காலத்திற்கு பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கித் தர விரும்புகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா