6 ஆண்டுகளில் 84 கோடி வருவாய்: பாத்ரூமில் அழகுடன் சுகாதாரம் சேர்க்கும் சானிட்டரிவேர் நிறுவனம்!
சுக்ரித் பன்சால் நஷ்டத்தில் இருந்த குழாய் தயாரிப்பு நிறுவனத்தை வாங்கி Eauset என்கிற பெயரில் ரீபிராண்ட் செய்து 2,000-க்கும் மேற்பட்ட சானல் பார்ட்னர்களுடன் 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
பொதுவாகவே ஒரு வணிகத்தைத் தொடங்கி வளர்ச்சியடைவது எத்தனையோ சவால்களை சந்திக்க நேரிடும். அதிலும், ஏற்கெனவே நஷ்டத்தில் இருக்கும் நிறுவனத்தை கையகப்படுத்தி நடத்துவதில் எத்தனை சவால்கள் இருக்கும்?
இந்த சவாலை ஏற்றுக்கொண்டு சாதித்துள்ளார் 43 வயது சுக்ரித் பன்சால். இந்தியாவில் நலிந்த மக்களுக்கும் சுகாதார வசதியைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட முயற்சி இது.
சுக்ரித் பன்சால் தனது அப்பா அசோக் பன்சாலுடன் சேர்ந்து நஷ்டத்தில் இருந்த நிறுவனம் ஒன்றை வாங்கினார். இந்நிறுவனம் குழாய் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது. இதன் விநியோக நெட்வொர்க்கையும் சேர்த்தே சுக்ரித் வாங்கினார்.
Eauset என்கிற பெயரில் ரீபிராண்டிங் செய்தார். தயாரிப்பின் விலையை அதிகரித்தார். ஆனால் ரீபிராண்டிங் முயற்சிக்கு விநியோகஸ்தர்களும் டீலர்களும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
”ரீபிராண்டிங் செய்ததால் நம்பிக்கை போய்விட்டது. அதை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டியிருந்தது,” என்கிறார் சுக்ரித்.
சுக்ரித், இந்தப் பிரச்சனைக்கான தீர்வைக் கண்டுபிடித்தார். இந்த உத்தி பலனளித்தது. ஆறு வருடங்களில் Eauset வருவாய் 84 கோடி ரூபாயாக அதிகரித்தது. இன்று 2,000 சானல் பார்ட்னர்களுடன் செயல்பட்டு வரும் Eauset, 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
மேலும் NBCC, இந்திய ரயில்வே துறை போன்ற அரசு நிறுவனங்களுக்கும் தயாரிப்புகளை விநியோகித்து வருகிறது. 100 ஊழியர்கள் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் தொழிற்சாலை குருகிராமில் உள்ளது. இந்நிறுவனத்தின் நவீன தொழிற்சாலை ராஜஸ்தானின் பிவாண்டியில் உள்ளது.
ஆரம்பக்கட்டம்
சுக்ரித் கட்டுமானப் பொருட்கள் துறையில் தொழில்முனைவு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதிலிருந்து வெளியேறிய பிறகு புதிய பிரிவில் செயல்பட திட்டமிட்டார். அந்த சமயத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சுகாதார வசதிகள் குறைவாக இருப்பதைத் தெரிந்துகொண்டார்.
”இந்த நகரங்களுக்கு நானே நேரில் சென்று பார்வையிட்டேன். பலர் திறந்தவெளியில் மலம் கழித்தனர். கழிப்பறை வெகு தொலையில் இருந்தன,” என்று குறிப்பிட்டார்.
சுக்ரித் சானிட்டரிவேர் பொருட்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நிறுவனத்தைத் தொடங்கத் தீர்மானித்தார். அப்பாவுடன் சேர்ந்து குழாய் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிறுவனம் ஒன்றை வாங்கினார்.
விநியோகம் தொடர்பான சவால்
நஷ்டத்தில் இருந்த குழாய் நிறுவனத்தை வாங்கிய சுக்ரித்தும் அவரது அப்பாவும் அதை Eauset என்கிற பெயரில் ரீபிராண்டிங் செய்தனர். புதிய தயாரிப்பை ரீபிராண்ட் செய்ததால் டீலர்கள் நம்பிக்கையிழந்தனர். இதற்கு சுக்ரித்தும் அவரது அப்பாவும் தீர்வு கண்டனர்.
Eauset அதன் தயாரிப்புகளின் விலையைக் குறைக்கவில்லை. ஆனால் ஒற்றை நெம்புகோல் குழாய் (single lever faucet), ஷவர், சானிட்டரிவேர் என தயாரிப்பு வகைகளை அதிகப்படுத்தியது.
சுக்ரித் Eauset தயாரிப்புகளை தீவிரமாக சந்தைப்படுத்தினார். வாடிக்கையாளர் சேவை வழங்கும் ஏஜென்சியை நியமித்து வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதில் மும்முரம் காட்டினார்.
ஒற்றை நெம்புகோல் ஷவர், குழாய் போன்றவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 6,299 ரூபாய் விலையில் ‘Bathroon in a box’ என்கிற பிரத்யேக தொகுப்பை வழங்க ஆரம்பித்தார்.
வழக்கமாக வெந்நீர், குளிர்ந்த நீர் என இரண்டிற்கும் தனித்தனியாக கைப்பிடி இருக்கும். அப்படியில்லாமல் ஒற்றை நெம்புகோல் அமைப்பில் ஒரே ஒரு கைப்பிடியே சுழலும்தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டது.
இதுபோன்ற தொகுப்புகளை மற்ற நிறுவனங்கள் 12,000 ரூபாய் வரை விற்பனை செய்யும் நிலையில் Eauset குறைந்த விலையில் மக்களுக்கு கொடுத்து பலரைச் சென்றடைய விரும்புகிறது.
மேலும், ஒற்றை நெம்புகோல் அமைப்பின் மூலம் தண்ணீர் அதிகம் வீணாகாமல் சேமிக்கப்படும் என்றும் சுக்ரித் குறிப்பிட்டார்.
“இந்தத் துறையைப் பொருத்தவரை தயாரிப்புகளுக்கு 10 வருட வாரண்டி வழங்கப்படும் என்றாலும் சானிட்டரிவெர் சர்வீஸ் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் எங்கள் தயாரிப்புகள் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதால் நாங்கள் இலவசமாகவே சேவை வழங்குகிறோம்,” என்கிறார்.
புதிய தொழில்நுட்பம் தொடர்பாகவும் பிவாண்டியில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்காகவும் இந்நிறுவனம் கூடுதலாக 40 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதுபோன்ற மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு மற்றும் சேவை டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் என Eauset திடமாக நம்பியது.
இறுதி வாடிக்கையாளர்களின் தேவைகள் சிறப்பாகப் புரிந்துகொள்ளப்பட்டு தீர்வளிக்கப்பட்டதால் இந்த உத்திகள் பலனளித்தது. Eauset தயாரிப்புகள் சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
சந்தை ஆய்வு மற்றும் திட்டங்கள்
உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, டெல்லி, குஜராஜ் ஆகிய இடங்களை முக்கிய சந்தையாகக் கொண்டுள்ளது Eauset பிராண்ட். வீட்டு உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், பில்டர்கள், அரசு அமைப்புகள் போன்றோரை இலக்காகக் கொண்டுள்ளது.
“வீடுகளில் நாங்கள் நிறுவும் தயாரிப்புகள் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை ஆகும். இத்தகைய நவீன டிசைன்களுக்கு மற்ற நிறுவனங்கள் 50,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கின்றன,” என்கிறார்.
Jaguar, Hindware, Cera, Parryware போன்றவை Eauset போட்டியாளர்கள் என்றாலும் Eauset தயாரிப்புகளின் குறைந்த விலை மற்ற நிறுவனங்களிடமிருந்து அதை வேறுபடுத்திக் காட்டுகிறது. அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் Eauset தூய்மை இந்தியா திட்டத்திலும் பங்களிக்கிறது.
நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்கள், குறிப்பாகப் பெண்கள் அருகிலிருக்கும் கழிப்பறைகளைக் கண்டறிய உதவும் செயலியை இந்நிறுவனம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
சுகாதாரப் பிரிவில் செயல்படும் ஸ்டார்ட் அப்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த உதவும் வகையில் Eauset வழிகாட்டி வருகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா