அசாதாரண சேவை புரிந்து பத்மஸ்ரீ விருது வென்ற சாதாரண மனிதர்கள்!
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு என பல்வேறு பிரிவுகளில் முத்திரை பதித்த இந்தியர்களுக்கு மிக உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
பகட்டாக உடையணிந்து காமிரா வெளிச்சம் படுபவர்கள் மட்டும் பிரபலங்கள் அல்ல. அவர்கள் மட்டுமே சாதனையாளர்கள் கிடையாது. எத்தனையோ பேர் சாதாரண உடையணிந்து அதிக வெளிச்சம் படாமல் அமைதியாக சமூகத்திற்கு சேவை புரிந்தும் சாதனையும் படைத்தும் வருகின்றனர்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு என பல்வேறு பிரிவுகளில் முத்திரை பதித்த இந்தியர்களுக்கு மிக உயரிய விருதாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் வெவ்வேறு துறைகளில் மக்கள் சேவையில் ஈடுபட்டு தங்களையே அர்ப்பணித்துக்கொண்டு பத்மஸ்ரீ விருது வென்றுள்ள சில எளிமையானவர்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
துளசி கவுடா
துளசி கவுடா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கர்நாடவைச் சேர்ந்த இவர் ‘காடுகளின் என்சைக்ளோபீடியா’, ’மரங்களின் கடவுள்’ என்றெல்லாம் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். முறையான கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 12 வயது முதல் மரங்கள் நட்டு வருகிறார். ஆயிரக்கரணக்கான மரங்களை நட்டுள்ளார்.
காட்டின் எந்தப் பகுதியில் என்ன வகையான மரம் இருந்தாலும் அதை இவரால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். விதைகளை சேகரித்து பல்வேறு ரக மரங்களைப் பாதுகாத்திருக்கிறார்.
துளசிக்கு இரண்டு வயதிருக்கையில் அவரது அப்பா உயிரிழந்துவிட்டார். பத்து வயதிலேயே திருமணம் முடிந்தது. சிறு வயதிலேயே மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்டிய துளசி மரங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் மக்களுக்கு புரிய வைக்கிறார். இவைதவிர பெண்கள் உரிமைக்கும் குரல் கொடுக்கிறார்.
சங்கராஷன் ஜெனா
2013-ம் ஆண்டு ஒடிசாவின் ஜோரண்டா கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று சங்கராஷன் ஜெனாவின் மனைவியைத் தாக்கி கொன்றுவிட்டது.
ஏதோ ஒரு யானை செய்த தவறுக்காக ஒட்டுமொத்த விலங்கினத்தையும் வெறுத்து ஒதுக்கக்கூடாது என்று நினைத்தார் சங்கராஷன் ஜெனா.
62 வயதாகும் இவர் ஒரு ஆசிரியர். மாணவர்கள் விலங்குகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று ஊக்குவித்து வருகிறார். ஒவ்வொரு கிராமமாக சென்று விலங்குகள் பாதுகாக்கப்படவேண்டும் என தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
பாப்பம்மாள்
நீலகிரி மாவட்டத்தின் தெக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கு 106 வயதாகிறது. 70 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தைப் பாதுகாத்து வருவதற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
முப்பதுகளில் இவர் கிராமத்தில் ஒரு கடை நடத்தி வந்தார். அந்த வருமானத்தைக் கொண்டு 10 ஏக்கர் நிலம் வாங்கினார். காலை 5.30 மணிக்கு படுக்கையை விட்டு எழுந்து 6 மணி ஆனதும் நிலத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் குழுவிலும் இவர் இடம்பிடித்துள்ளார். கருத்தரங்குகளில் பங்கேற்கிறார். அரசியலையும் விட்டு வைக்கவில்லை. தெக்கம்பட்டி பஞ்சாயத்து முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்த பாப்பம்மாள் காரமடை பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலராகவும் தேர்வாகியிருக்கிறார்.
நந்தா பிரஸ்டி
கல்வித் துறையில் பங்களித்ததற்காக நந்தா பிரஸ்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இவர்’நந்தா சார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். ஒடிசாவைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு இலவசமாக கல்வியளிவு வழங்குவதில் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் நந்தா சார்.
நந்தா பிரஸ்டி ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். இருந்தபோதும் நாட்டில் படிப்பறிவில்லாதவர்களே இருக்கக்கூடாது என்பது இவரது கனவு.
இவர் வாரத்தில் ஏழு நாட்களும் காலை முதல் இரவு 9 மணி வரை தற்காலிக பள்ளி அமைத்து மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார். 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பால் 102 வயதில் நந்தா பிரஸ்டி உயிரிழந்துவிட்டார்.
சுவாமி சிவானந்தா
பத்மஸ்ரீ விருது வென்ற மூத்த வயதுடைய சுவாமி சிவானந்தா. இவருக்கு வயது 125. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த குடும்பத்தில் பிறந்தார். ஆறு வயதிருக்கையில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து தனிமரம் ஆனார். மேற்குவங்கத்தில் இருக்கும் குரு ஓம்காரனந்தா ஆசிரமத்திற்கு சென்றார்.
இந்த ஆசிரமத்தில் குருவின் அரவணைப்பில் வளர்ந்தார். குரு இவருக்கு யோகா பயிற்சியும் அளித்துள்ளார்.
சுவாமி சிவானந்தா தனது வாழ்க்கையையே யோகா பயிற்சியிலும் ஏழை மக்களுக்கு உணவளிப்பதிலும் அர்ப்பணித்தவர்.
கடந்த ஐம்பதாண்டுகளாக தொழுநோயால் பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களுக்கு உணவளித்துள்ளார். உணவு மட்டுமின்றி மற்ற அத்தியாவசியப் பொருட்களையும் கொடுத்து உதவுகிறார்.
இவர் தனது வாழ்நாளில் வேகவைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். எண்ணெய், காரம் போன்றவற்றை தவிர்த்துவிடுகிறார்.
ஹரேகலா ஹஜப்பா
ஹரேகலா ஹஜப்பாவிற்கு 65 வயதாகிறது. இவர் ஆரஞ்சு பழ வியாபாரி. இவருக்கு வருமானம் குறைவு என்றபோதும் பணம் சேமித்து தன்னுடைய கிராமத்தில் ஒரு பள்ளி கட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு கல்வி வழங்குவதில் இவருக்கு ஈடுபாடு.
குடும்ப வறுமை காரணமாக இவரால் படிக்க முடியாமல் போனது. குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்கு செல்லவேண்டிய சூழல். ஹரேகலா ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்து வந்தார். ஒருமுறை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இவரிடம் ஆரஞ்சு பழத்தின் விலையை ஆங்கிலத்தில் கேட்டுள்ளார்.
ஹரேகலாவிற்கு ஆங்கிலம் தெரியாது. கேள்வியைப் புரிந்துகொண்டு பதில் சொல்ல முடியவில்லை. படிப்பின் அருமை அப்போது புரிந்தது. ஆனால் இதே நிலைமை மற்ற குழந்தைகளுக்கும் வரக்கூடாது என நினைத்தார்.
பழ வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணத்தை சேமிக்கத் தொடங்கினார். சிறிய பள்ளி ஒன்றைக் கட்டினார்.
இப்போது இந்தப் பள்ளி ‘ஹஜப்பா பள்ளி’ என்று அழைக்கப்படுகிறது. அரசாங்கமும் தனிப்பட்ட நன்கொடையாளர்களும் இந்தப் பள்ளி செயல்பட ஆதரவளித்து வருகின்றனர். அடுத்தபடியாக எப்படியாவது ப்ரீ-யுனிவர்சிட்டி கட்டிவிடவேண்டும் என்பது ஹரேகலாவின் கனவு.
ஆங்கிலத்தில்: சோஷியல் ஸ்டோரி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா