லாக்டவுன் இல்லாமல் கொரோனாவை தைவான் வென்றது எப்படி?
கொரோனாவின் மையப்புள்ளியான வூஹான் நகரில் இருந்து 1000கிமி தொலைவில் உள்ள ஆசிய நாடான தைவான், வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்து இன்று உலகிற்கே வழிகாட்டியாக விளங்குகிறது.
கொரோனா வைரசால் உலகமே முடங்கிக் கிடக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க பெரும்பாலான நாடுகளில் லாக்டவுன் அமல் செய்யப்பட்டுள்ள நிலையில், வைரசோடு பொருளாதார பாதிப்பும் மக்களைத் திண்டாட வைத்திருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக போராட்டத்திற்கு மத்தியில், லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும் என்பதே பல நாடுகளில் மக்கள் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது.
ஆனால் ஆசிய நாடான தைவான் சற்று மாறுபட்டு இருக்கிறது. அங்குள்ள மக்களுக்கோ, அரசுக்கோ இந்த பதற்றம் இல்லை. அவர்கள் எப்போதும் போல, ஆனால் எச்சரிக்கையோடு தங்கள் வழக்கமான செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏனெனில்; உலகில் லாக்டவுனை அமல் செய்யாமலேயே கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள வெகு சில நாடுகளில் ஒன்றாக தைவான் இருக்கிறது.
அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்கள் எண்ணிக்கையில் மிரள வைக்கும் நிலையில், தைவானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440 ஆக மட்டுமே இருக்கிறது. அங்கு வைரஸ் பாதிப்பால் ஏழு பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர்.
இத்தனைக்கும் தைவான், கொரோனா வைரஸ் முதலில் தோன்றி, உலகம் முழுவதும் பரவிய சீனாவின் வூஹான் நகரில் இருந்து மிக அருகாமையில் இருக்கு நாடு. அப்படி இருந்தும் கூட, மற்ற நாடுகள் போல தைவான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படவில்லை.
தைவான் நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதற்குக் காரணம், அந்நாடு கொரோனா தடுப்பில் காட்டிய தீவிரமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முதலிலேயே மேற்கொண்டதும் தான்.
அந்த வகையில், தைவான் வைரஸ் தடுப்பில் உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கிறது. இன்று பல நாடுகள், தைவான் மேற்கொண்டு வரும் வைரஸ் தடுப்பு அணுகுமுறையை உற்று கவனித்து வருகின்றன.
பணக்கார ஐரோப்பிய நாடுகளும், வல்லரசு என சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவும், யூகே-வும் கொரோனா தடுப்பில் கோட்டை விட்டு நிற்கும் போது, தைவான் இதில் சிறப்பாக செயல்பட்டு, முன்னோடியாக மாறியது எப்படி என பார்க்கலாம்.
சார்ஸ் பாடம்
கொரோனா வைரசை எதிர்கொள்வதில் தைவான் சிறப்பாக செயல்படுவதற்கு முதல் காரணம், சில ஆண்டுகளுக்கு முன் பரவிய சார்ஸ் நோய் பாதிப்பில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் தான். கொரோனாவோடு ஒப்பிடும் போது, சார்ஸ் வைரஸ் அத்தனை மோசம் இல்லை என்றாலும், 2003ல் இந்த நோய், தெற்காசிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தைவான் நாட்டிலும் சார்ச் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் அந்நாட்டு அரசு விழித்துக்கொண்டு, எதிர்காலத்தில் இது போன்றதொரு பெருந்தொற்று தாக்கினால் என்ன செய்வது என முன்னெச்சரிக்கை திட்டத்தை வகுத்தது. இதன் ஒரு பகுதியாக, தேசிய சுகாதார தலைமை மையம் எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தொற்று நோயை சமாளிக்க தைவான் தயாராக இருக்க இந்த அமைப்பு உதவியது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் வைரஸ் பாதிப்பு தொடர்பான செய்திகள் வரத்துவங்கிய உடனே, தைவான் விழித்துக்கொண்டு விட்டது. ஜனவரி மாத துவக்கத்தில் சீனாவில் பாதிப்பு மெல்ல அதிகரித்த நிலையில், உலக நாடுகள் நடிவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என விவாதித்துக் கொண்டிருந்தன.
ஆனால், தைவானோ அதற்குள் காரியத்தில் இறங்கிவிட்டது. சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வைரஸ், மற்ற இடங்களிலும் பரவத்துவங்கி தைவானுக்கும் நுழைந்துவிட்டால் அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை அரசு அனைத்து மட்டங்களிலும் முடக்கி விட்டது.
விமான சோதனை
முதல் கட்டமாக, விமானம் மூலம் தைவானுக்கு வரும் பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே சோதிக்கப்பட்டு, அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதே போல, வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களும் தனிமைப்படுத்தலில் இருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அரசியல் நோக்கில் சீனாவுக்கும், தைவானுக்கும் பழைய பகை தீராமல் இருந்தாலும், இரு நாடுக்கும் இடையே வர்த்தகப் போக்குவரத்து இருக்கிறது. எனவே தைவான் நாட்டவர் கணிசமாக சீனாவுக்கு விமானத்தில் சென்று வருவது வழக்கம். சீனாவில் இருந்து வரும் தைவான் நாட்டவர்கள் கவனமாக சோதிக்கப்பட்டு தொடர்ந்து அறிகுறிகளுக்காக கண்காணிக்கப்பட்டனர்.
பயணிகளை பரிசோதிப்பதோடு தைவான் நிர்வாகம் நின்றுவிடவில்லை. அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கென தைவான் அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
விமான நிலையத்தில் சோதனைக்கு பின், தனிமைபடுத்தப்பட வேண்டியவர்கள், பொது போக்குவரத்தில் செல்ல அனுமதிக்கப் படவில்லை. இவர்களுக்கு என்று தனியே டாக்சிகள் இயக்கப்பட்டன. இந்த டாக்சிகள், ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. இந்த டாக்சிகள் வேறு எந்த பயணிகளையும் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்டவில்லை.
கொரோனா டாக்சிகளை இயக்கி டிரைவர்களுக்கு நல்ல சம்பளம் அளிக்கப்ப்ட்டடோடு, ஒரு மாத காலத்திற்கு பின் அவர்களும் இரு வார கால தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பரிவும், கவனிப்பும்
இதே போல நோய் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைபடுத்தப்பட்டவர்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்கான செலவை அரசு வழங்கியது. மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதை கண்காணிக்கவும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தைவானுக்குள் நுழைந்ததுமே, அவர்களின் செல்போன்கள் அரசு பதிவு செய்து கொண்டது. தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் குறிப்பிட்ட பகுதியை விட்டு வெளியே செல்கின்றனரா என்பது செல்போன் சிக்னல் மூலம் கண்காணிக்கப்பட்டது. செல்போனில் தவறான தகவல் கிடைத்தால் அடுத்த பத்தாவது நிமிடம் காவலர்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.
இதுதவிர, தனிமையில் இருப்பவர்களைக் கவனிகும் பொறுப்பு உள்ளாட்சி தலைவர்களில் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தினமும் காலை, மாலை என இருவேளையும் தனிமையில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இப்படி போன் செய்வது, உள்ளாட்சி பிரநிதிகளுக்கு பெரும் சுமையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்குத் தேவையான உதவிகளை அவர்களிடம் போன் மூலம் கேட்டுப்பெற இது வழி வகுத்தது. பலர் போர் அடிப்பதாக கூறி இவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதும் வழக்கமானது.
மாஸ்க் உற்பத்தி
நோய் பரவலை தடுப்பதற்கான இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தவிர, மாஸ்க் உற்பத்தி போன்றவையும் முடிக்கிவிடப்பட்டன.
பல நாடுகளில் மாஸ்க் தேவையா, இல்லையா எனும், விவாதம் நடந்தாலும், தைவான் துவக்கத்திலேயே மாஸ்கின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தது. இதனால், ஜனவரி மாதத்திலேயே போதுமான மாஸ்க் உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டது.
மேலும், பொதுமக்கள் குறிப்பிட்ட மருந்து கடைகளில் மாஸ்க் வாங்கிக் கொள்ளவும் வழி செய்யப்பட்டது. மாஸ்க் தட்டுப்பாடு ஏற்படாததோடு, பொதுமக்களும் மாஸ்க் அணிவதை தவறாமல் பின்பற்றினர். அரசுக் கட்டிடங்கள் போன்றவற்றில் கிருமிநாசினிகள் வழங்கப்பட்டன. அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால், மக்கள் பொது இடங்களில் சமூகத் தொலைவையும் கடைப்பிடித்தனர்.
விமான நிலையங்கள் தவிர, பொது இடங்களிலும் மக்கள் அறிகுறிகளுக்காக கவனிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகள் தொடர்ந்து இயங்கினாலும், மாணவர்கள் மத்தியில் காய்ச்சல் அறிகுறிகள் கவனிக்கப்பட்டன.
இது போன்ற நடவடிக்கைகளால் தைவான் லாக்டவுன் அமல் செய்யாமலேயே கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளது.
பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் அரசு விழிப்புணர்வில் எந்த தளர்வும் இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறது.
இதுவே தாய்வான் நாட்டின் கொரோனா வெற்றி ரகசியம்...
மேலும் தகவல்களுக்கு : https://www.nbcnews.com/news/world/taiwanese-authorities-stay-vigilant-virus-crisis-eases-n1188781