போலி கிரிப்டோ கரன்ஸி செயலிகளை அடையாளம் காண்பது எப்படி?
கிரிட்போ கரன்ஸிகளை சம்பாதிக்க வழி செய்வதாக ஈர்த்து பயனாளிகளை ஏமாற்றும் செயலிகளை சில கூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ள பின்னணியில், இத்தகைய போலி செயலிகளை கண்டறியும் வழிகள் பற்றி பார்க்கலாம்.
பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. கிரிப்டோகரன்ஸிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, இவற்றை சிறந்த முதலீட்டாக கருதுபவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.
கிரிப்டோ கரன்ஸி முதலீடு அள்ளித்தரக்கூடியது என்று சொல்லப்பட்டாலும், இதில் உள்ள இடர்களை மறந்து விடக்கூடாது. கிரிப்டோ கரன்ஸிகளின் அடிப்படைப் பற்றிய புரிதல் இல்லாமல், வெறும் செய்திகளை மட்டும் நம்பி அவற்றை முதலீடாகக் கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில், கிரிப்டோ கரன்ஸி முதலீட்டில் உள்ள ஆர்வத்தை பயன்படுத்திக்கொண்டு மோசடி வலை விரிக்கும் போலி செயலிகள் பற்றி எச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியமாகிறது. இத்தகைய 8 போலி செயலிகள் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
கிரிப்டோ கரன்ஸிகளை அவற்றுக்கான இணைய பரிவர்த்தனை மையங்களில் வாங்கலாம். இவற்றுக்கான விலை அதிகம் என்பது வேறு விஷயம்.
அதே நேரத்தில், மைனிங் என்று சொல்லப்படும் முறையிலும் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்ஸிகளை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், புதிய பிட்காயின்களை அகழ்ந்தெடுக்கத் தேவைப்படும் கம்ப்யூட்டர் ஆற்றலையும், அவற்றை இயக்குவதற்கான மின்சக்தி ஆற்றலையும் தெரிந்து கொண்டால், யாரும் அந்த பக்கமே செல்ல மாட்டார்கள்.
இந்நிலையில், ஒரு சில செயலிகள், கிரிப்டோ கரன்ஸிகளை அகழ்ந்தெடுக்க வழி செய்து, வருவாய் ஈட்டித்தருவதாக ஆசை காட்டி இணையவாசிகளை ஏமாற்றி வருகின்றன என தெரிய வந்துள்ளது.
உண்மையில் மால்வேர் அல்லது ஆட்வேர் வகையைச்சேர்ந்த இந்த போலி செயலிகள், பிட்காயின் போன்ற கரன்ஸிகளை உருவாக்கித்தரும் போர்வையில், பயனாளிகளை விளம்பரங்களை பார்க்க வைத்து பணம் சம்பாதிக்கின்றன. இன்னும் சில செயலிகள், மேற்கொண்டு கட்டணம் செலுத்த வைத்தும் ஏமாற்றுகின்றன.
இன்னும் சில செயலிகள் பயனாளிகள் போனில் ஊடுருவி நாசம் விளைவிக்கின்றன.
சைபர் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான டிரென்ட் மைக்ரோ இது தொடர்பாக கண்டறிந்து, போலி செயலிகள் குறித்து கூகுள் நிறுவனத்திடம் தகவல் அளித்துள்ளது. இந்தத் தகவல் அடிப்படையில் எட்டு போலி செயலிகள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டிரென்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது.
பிட்ஃபண்ட்ஸ், பிட்காயின் மைனர், மைன் பிட் புரோ, பிட்காயின் கிளவுட் மைனிங், டெய்லி பிட்காயின் ரிவார்ட்ஸ் உள்ளிட்ட எட்டு செயலிகள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த செயலிகள் நீக்கப்பட்டுவிட்டாலும், ஏற்கனவே இவற்றை தரவிறக்கம் செய்தவர்கள் உடனடியாக இவற்றை அகற்றிவிடுவது நல்லது. மேலும், போலி கிரிப்டோ செயலிகள் தொடர்பாக எச்சரிக்கை கொள்வதும் நல்லது.
பொதுவாக போலி கிரிப்டோ கரன்ஸி செயலிகளை கண்டறிவதற்கான வழிகள் வருமாறு:
- செயலி தொடர்பான பயனாளிகள் விமர்சன கருத்துக்களை கவனமாக வாசிக்கவும். போலி செயலிகள் அறிமுகம் ஆகும் போது அதிகமாக ஐந்து நட்சத்திர விமர்சனங்களை பெறலாம். ஒரே ஒரு நட்சத்திர விமர்சனங்களை கவனமாக படிக்கவும்.
- கிரிப்டோ கரன்ஸியில் அனுபவம் உள்ளவர்கள் போலியான கிரிப்டோ வாலெட் முகவரிகளை சமர்பித்து சோதனை செய்யலாம். இதை செயலி ஏற்றுக்கொண்டு, அகழ்வில் ஈடுபடும் செயல்முறையை தொடர்ந்தால் போலி எனப் பொருள்.
- மைனிங் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது போனை ரீஸ்டார்ட் செய்யவும். மைனிங் நிகழும் போது ரீஸ்டார்ட் செய்யப்பட்டால், பின்னணியில் மைனிங் செயல்முறை நிறுத்தப்பட்டு, கவுண்டர் ஜீரோவுக்கு வந்துவிடும்.
- கிரிப்டோ கரன்ஸிகளை பெற உண்மையில் அதிக பரிவர்த்தனை கட்டணம் உண்டு. கிளவுட் மைனிங் என்ற போர்வையில், குறைவான கட்டணம் கேட்டால், அது மோசடி என்று அறியவும்.