'ஒரு லட்சம் கோடி சந்தை மதிப்பு' - புதிய உச்சத்தை தொட்ட Zomato!
சந்தை மதிப்பில் இந்தியாவின் தலைசிறந்த 50வது நிறுவனங்களுக்குள் இடம்!
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வின் ஐபிஓ விலை விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஜொமாட்டோ நிறுவனம் ஐபிஓ பங்கின் விலை ஒன்றுக்கு 72-76 ரூபாய் என நிர்ணயித்திருந்தது. இந்த நிர்ணயத்தால் ஐபிஓ மூலம் ரூ.9,375 கோடி நிதி திரட்ட முடியும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், ரூ.2.13 லட்சம் கோடி அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன. இது சமீபத்தில் விற்கப்பட்ட ஐபிஓ விற்பனையில் மிகப்பெரிய அளவாகும். ஐபிஓ வரலாற்றில், இது மூன்றாவது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று ஜொமோட்டோ நிறுவனம் பட்டியலிடப்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி, ஐபிஓவில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு பங்கு ரூ.76க்கு ஒதுக்கப்பட்டது. அதேநேரம், நேற்றுமுன்தினம் 40 சதவீத உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கிய, இந்த பங்கு நேற்று காலை பங்கு சந்தை ஆரம்பிக்கும்போது 80 சதவீத உயர்வுடன் (அதிகபட்சம் 82.5%) வர்த்தகமாகனது.
நேற்று ஐபிஓ பட்டியலாகும் முன்பு ஜொமாட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 65,000 கோடி என்ற அளவில் இருந்தது. ஆனால் சிறிதுநேரத்தில், 1 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்து ஆச்சரியப்படுத்தியது. இந்த வளர்ச்சியால், தற்போது சந்தை மதிப்பு அடிப்படையில் இந்தியாவின் முதல் 50 நிறுவனங்களுக்குள் ஜொமாட்டோ இடம் பிடித்தது. அதேபோல், வர்த்தகத்தின் இடையே முதல் 40 நிறுவனங்களுக்குள் ஒன்றாக இருந்தது.
இதற்கிடையே, ஜொமாட்டோ ஐபிஓ, ஜூலை 27-ம் தேதி பட்டியலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னதாகவே நேற்று ஐபிஓ பட்டியலானது. ஐபிஓ மூலம் தனது இலக்கான ரூ.9,375 கோடி ரூபாயை ஜொமாட்டோ நிறுவனம் திரட்டி இருக்கிறது. ஜொமாட்டோ நிறுவன பங்குகளை பெரும் அளவில் வைத்திருந்த இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் 375 கோடி ரூபாய் அளவுக்கான பங்குகளை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.