ஒரே குடும்பத்தில் 2 ஐஏஎஸ், 2 ஐபிஎஸ் - சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சகோதர-சகோதரிகள்!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் சகோதர சகோதரிகள் 4 பேரும் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக மாறியுள்ள அதிசயம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் சகோதர சகோதரிகள் 4 பேரும் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக மாறியுள்ள அதிசயம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் லால்கஞ்ச் மாவட்டத்தில் அனில் பிரகாஷ் மிஷ்ரா என்பவரது பிள்ளைகளான யோகேஷ், ஷாமா, மாதுரி, லோகேஷ் ஆகிய 4 பேரும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வாகியுள்ளனர்.
ஒரே குடும்பத்தில் 4 உயர் அதிகாரிகள்:
நான்கு பிள்ளைகளில் மூத்தவரான யோகேஷ் மிஸ்ரா ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார். லால்கஞ்சியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், திலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
அதன் பின்னர், நொய்டாவில் வேலைக்குச் சேர்ந்த இவர், தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் தயாராகி வந்துள்ளார். 2013-ம் ஆண்டு UPSC தேர்வில் வெற்றி பெற்ற யோகேஷ் மிஸ்ரா தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
யோகேஷ் மிஸ்ராவின் சகோதரியும், இரண்டாவது பிள்ளையுமான ஷாமா மிஸ்ரா, சிவில் சர்வீசஸுக்குத் தயாராகி வந்த நிலையில், முதல் மூன்று முறைகள் தோல்வி அடைந்துள்ளார். ஆனால், விடாமுயற்சியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட ஷாமா, நான்காவது முறையாக எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
மூன்றாவது சகோதரியான மாதுரி மிஸ்ரா, லால்கஞ்சில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, முதுகலைப் பட்டப் படிப்பு படிப்பதற்காக அலகாபாத் சென்றார். இதற்குப் பிறகு, அவர் 2014ல் தனது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஜார்கண்ட்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
கடைக்குட்டியான லோகேஷ் மிஸ்ரா தற்போது பீகார் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து வருகிறார். இவர் 2015ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று 44வது ரேங்க் பெற்றுள்ளார்.
கிராமின் வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற 4 பிள்ளைகளின் தந்தையான தந்தை அனில் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில்,
“நான் சாதாரண வங்கி மேலாளராக பணியாற்றிய போதும், எனது பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. அவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க முயற்சி செய்தேன். என்னை விட எனது பிள்ளைகள் நல்ல நிலைக்குச் செல்ல வேண்டும் என நினைத்தேன். இப்போது எனது பிள்ளைகளால் இந்த பெருமை கிடைத்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
சாதாரண பின்னணியைக் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து 2 ஐபிஎஸ் மற்றும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் வந்துள்ளது, சோசியல் மீடியாவில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.