ஐஏஎஸ் கனவு பலிக்கும் வரை மருத்துவர்- இளம் கோவை ஆணையரின் ஐஏஎஸ் பயணம்!
ஐஏஎஸ் என்ற 3 எழுத்தை பெயருக்கு பின்னால் சேர்க்க பலவற்றை இழக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். ஐஏஎஸ் மட்டுமில்லாமல் எந்தவித படிப்பிலும் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு உழைக்க வேண்டும் அதிலும் ஐஏஎஸ் மருத்துவம் போன்ற படிப்புக்கு இழப்புகளும் அதிகம் உழைப்பும் அதிகம். ஆனால் இவ்விரண்டையும் ஒருவர் பெற்று கோயம்பத்தூர் மாநகராட்சியின் இளம் ஆணையராக வலம் வருகிறார் டாக்டர். கே.விஜயகார்த்திகேயன்.
பொதுவாக யூனியன் பொது சேவை ஆணைய தேர்வு (யுபிஎஸ்சி) எழுத வேண்டும் என்றால் ஐஏஎஸ் கனவுகொண்டிருந்தால் அத்தேர்வுக்கு நம்மை தயார்படுத்துவதோடு இது இல்லை என்றால் ஏதோ ஒரு அரசாங்க வேலை அல்லது படிப்பிற்கு ஏற்றாற்போல் ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற யோசனை வைத்திருப்போம். ஆனால் இந்த ஆணையரின் இலக்கு ஐஏஎஸ் ஆகும் வரை மருத்துவராக வேண்டும் என்பது தான்.
இந்த இளம் வயதிலே பல வெற்றிக்கதைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் இவர்.
மருத்துவப் படிப்பு முடித்து, ஐஏஎஸ்-ல் தேர்ச்சிப்பெற்ற கார்த்திகேயன் சில புத்தகங்களையும் எழுதி வெளியுட்டுள்ளார். இவரது எழுச்சியூட்டும் வாழ்க்கை பயணத்தைப் பார்ப்போம்...
தனது வாழ்க்கை பயணத்தைப்பற்றி பெட்டெர் இந்தியாவிற்கு இவர் அளித்த பேட்டியில்,
“என் தந்தை இந்திய வனத்துறை சேவையில் (IFS) இருந்தப்போது பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக பணியாற்றினார். அவரின் சேவை குணமே எனக்குள்ளும் இருந்தது ஆனால் அந்தத் தேர்வில் தேர்ச்சிபெறுவது கடினம், அதனால் அதிக சேவை இருக்கக் கூடிய மருத்துவத்தை ப்ளான் பி ஆக எடுத்தேன்,” என்றார்.
ஐஏஎஸ் தேர்வுக்கு நேரம் ஏடுத்து படிப்பதற்கு முன் பட்டமும் சேவை செய்யக்கூடிய வேலை வேண்டும் என்று முடிவு செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தார். தனது லட்சியம் வேறொன்றாக இருந்தாலும் தன் முழு கவனம் மற்றும் உழைப்புடன் மருத்துவரானார்.
மருத்துவப் படிப்பை முடித்ததும் ஐஏஎஸ் தேர்வை எழுதிய கார்த்திகேயன் அதில் தேர்ச்சி அடைய முடியவில்லை. இந்த உழைப்பு போதாதென்று ஒரு நாளுக்கு குறைந்தது எட்டு மணிநேரம் படிக்க முடிவு செய்தார்.
“5 வருடம் மருத்துவத்துறையில் இருந்து படித்ததால் எப்படி திட்டமிட்ட முறையில் படிக்க வேண்டும் என்பதை என் மருத்துவ படிப்பு எனக்கு கற்றுக்கொடுத்தது. அதாவது ஒரு தலைப்பில் 25 பக்கங்கள் படிக்க வேண்டியவை என்றால் அதில் தேவையானதை எடுத்து ஒன்றமைக்க முடிந்தது,” என்கிறார்.
மருத்துவப் படிப்பின் போதும் தன் கனவை மறக்காத இவர் தன்னை மெருகேற்றிக் கொள்ள வினாடி வினா, விவாதப்போட்டி, பொது மேடை பேச்சு, எழுத்து என சகலத்திலும் பங்கேற்று தன் திறமையை வளர்த்துக்கொண்டார்.
முதல் முதலில் தான் ஐஏஎஸ் தேர்வில் அடைந்த தோல்வியையும் அதன் தாக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ’Once Upon IAS Exam' ஒன்ஸ் அப்பான் ஐஏஎஸ் எக்சாம்” என்ற தலைப்பில் ஓர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
“நான் அடைந்த முதல் பெரிய தோல்வி ஐஏஎஸ் தேர்வு, அதிலிருந்து மீண்டெழுந்து முயற்சித்து வெற்றிப்பெற சில கால அவகாசம் தேவைப்பட்டது. என்னைப் போல் இருக்கும் பல மாணவர்களுக்கு அப்படி ஓர் மனநிலை இருக்கும் அதற்காகவே என் அனுபவத்தை புத்தகமாகக் கொடுத்தேன்,” என்கிறார்.
சிலர் முதல் தேர்விலே தேர்ச்சிபெற்று வென்று விடுகின்றனர், ஆனால் பலர் ஒன்று இரு தோல்விகளை தழுவுவிட்டால் வேறு ஒரு வாழ்க்கைப் பயணத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்காகவே இந்த புத்தகம் என தெரிவிக்கிறார்.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்