500 புதிய நகரங்களில் Rapido சேவை அறிமுகம்!
தேசிய அளவில் பஞ்சாப், ஹரியானா என பல மாநிலங்களில் சுமார் 500 புதிய நகரங்களுக்கு தனது சேவையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது ரேபிடோ.
போக்குவரத்து நெரிசலில் பொது போக்குவரத்து வாகனங்களிலும் செல்ல முடியாமல், சொந்த வாகனங்களையும் ஓட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு வரமாக கிடைத்ததுதான் ரேபிடோ, ஓலா, ஊபர் போன்றவை. அதிலும், குறிப்பாக Rapido பைக் டாக்ஸிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ரொம்பவே அதிகம்.
தற்போது தமிழகம், கர்நாடகா, குஜராத், மேற்குவங்காளம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் முக்கிய நகரங்களில் மட்டுமே தனது சேவையை வழங்கி வருகிறது ரேபிடோ. முக்கிய பெருநகரங்களில் மட்டுமே உள்ள ரேபிடோ சேவையை மற்ற மாவட்ட மக்களும் எதிர்பார்ப்பதைத் தொடர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக அதன் சேவையை மற்ற இடங்களுக்கும் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், தற்போது இந்தியாவில் 120 நகரங்களில் இயங்கி வரும் ரேபிடோ சேவையை, விரைவில் மேலும் 500 நகரங்களுக்கு விரிவு படுத்த இருப்பதாக ரேபிடோ அறிவித்துள்ளது.
500 நகரங்களுக்கு சேவை
பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ 2025ல் கலந்து கொண்ட ரேபிடோவின் இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி இதனை தெரிவித்துள்ளார். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் சில புதிய மாநிலங்களில் ரேபிடோ நுழைய இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில்,
“தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு நேர்மறையான சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். சுமார் 1.3 கோடிக்கும் அதிகமான கேப்டன்கள் (ரேபிடோ டிரைவர்கள்), ரேபிடோ மூலம் சுமார் 15,000 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்து வரும் சூழலில், நாங்கள் மேலும் 500 நகரங்களுக்கு எங்கள் சேவையை விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். இது தனிநபர்களை மேம்படுத்துவதற்கும், இணைக்கப்பட்ட இந்தியாவை உருவாக்குவதற்கும், எங்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும்,” என பவன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தொழில்நுட்ப முதலீட்டாளரான ப்ரோசஸ், cab aggregator எனப்படும் தொழில்நுட்பம் வாயிலாக பயணம் செய்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் இணைக்கும் வர்த்தகத்தில், 5% பங்குகளை $1 பில்லியன் மதிப்பில் எடுக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்த ஒரு சில மாதங்களில் இந்த அறிவிப்பை ரேபிடோ வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, யுவர்ஸ்டோரி இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல்-பேக்டு நிறுவனம் 2024ம் ஆண்டு சீரிஸ் இ நிதிச் சுற்றில் 200 மில்லியன் டாலர் நிதி திரட்டிய பிறகு யூனிகார்ன் ஆனது.
ரேபிடோவின் இலக்கு
கடந்த செப்டம்பர் மாதம் ரேபிடோவின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அரவிந்த் சங்கா, யுவர்ஸ்டோரிக்கு அளித்த பேட்டியில், தங்களது நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத் திட்டங்களைப் பற்றி பேசியிருந்தார். அதில்,
“எங்களது சேவையை புதிய நகரங்களிலும் அறிமுகப்படுத்த இருக்கிறோம். புதிய பயன்பாட்டு நிகழ்வுகளில் முதலீடு செய்வதன் மூலம் ஏற்கனவே உள்ள சந்தையில் எங்கள் சேவை மேலும் ஆழமாக பயணிக்க முடியும். மக்கள் சவாரி-பகிர்வுகளைப் பயன்படுத்துவதற்கான தடைகளைத் தீர்ப்பதே எங்கள் இலக்கு,” எனத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட உபெர், பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா நுகர்வோர் மற்றும் நம்ம யாத்ரி ஆகியவற்றுடன் இந்த ஒருங்கிணைப்புத் துறையில் ரேபிடோ போட்டியிட்டு வருகிறது. ரேபிடோவானது தினமும் சுமார் 3.6 மில்லியன் சவாரிகளை வழங்கி வருகிறது.