’உயிரை பணயம் வைக்கும் காட்சிகள்’ - இந்தியாவின் முதல் ஸ்டன்ட்வுமன் சனோபர்!
12 வயது முதல் பாலிவுட்டில் ஸ்டண்ட் காட்சிகளில் வலம் வரும் சனோபர் பார்டிவாலா மலையிலிருந்து குதிப்பது, தண்ணீருக்கு அடியில் நீந்துவது என பல்வேறு சாகச காட்சிகளில் பங்களித்திருக்கிறார்.
2009-ம் ஆண்டு மணிரத்தத்தின் ’ராவண்’ திரைபடத்திற்கான படப்படிப்பு நடந்து கொண்டிருந்தது. சனோபர் பர்டிவாலா கேரளாவின் அதிரபள்ளி நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருக்கும் 300 அடி உயரம் கொண்ட மலையிருந்து குதிக்கவேண்டிய காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
படத்தின் கதாநாயகி மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், பாறையிலும் மரங்களின் கிளைகளிலும் விழுந்து கடைசியில் கடலில் விழுந்து உயிர் பிழைத்துவிடுகிறார். இதுதான் காட்சி அமைப்பு.
ஸ்டண்ட் ஆர்டிஸ்ட் சனோபர் இந்த வேலையை செய்கிறார். ஆனால், மணிரத்னம் ரீடேக் அவசியம் என்கிறார். காரணம், அவர் கீழே விழுந்தது மிகவும் கச்சிதமாக இருந்திருக்கிறது.
“தற்கொலை செய்துகொள்ள கீழே குதிக்கும் பெண் ஒரு பழங்குடி இன பெண், அத்லெட் இல்லை என்று மணி சார் என்னிடம் சொன்னார். தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்பதுதான் அவளது திட்டம். விதி அவளை உயிர் பிழைக்க செய்துவிடுகிறது. இதுதான் களம். நான் கீழே குதித்தது புரொஃபஷனலாக இருந்தது என்றார்,” என்று சனோபர் அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
“என் காஸ்ட்யூம் பற்றியோ தலைமுடியைப் பற்றியோ கவலைப்படக்கூடாது என்றார். நானே வேண்டுமென்றே குதிப்பது போலவும் உயிர் பிழைத்துவிடுவது போலவும் இருக்கவேண்டும் என்றார். இந்த ஸ்டண்ட் Taurus World Stunt Award விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது,” என்கிறார்.
அதே திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த மற்றுமொரு சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். இதில் 150 அடி உயரத்திலிருந்து குதிக்கவேண்டியிருந்தது. ஆனால் சனோபரின் சேஃப்டி கேபிள் உடைந்துவிட்டதால் 75 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்தார். மேலே செல்லவும் முடியவில்லை கீழே இறங்கவும் முடியவில்லை.
அமைதியாக எதிர்கொள்ளும் பக்குவம்
இதுபோன்ற எதிர்பாராத சூழல்களில் அமைதியாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை சனோபர் வலியுறுத்துகிறார்.
“கேபிளை சரிசெய்ய சுமார் 30 நிமிடங்கள் ஆனது. அமைதியாக காத்திருப்பதைத் தவிர என்னால வேறு எதுவும் செய்யமுடியாது என்பது புரிந்தது. நான் தொண்டையை கிழித்துக்கொண்டு கத்தினாலும் நீர்வீழ்ச்சியின் சத்தத்தில் யாருக்கும் எதுவும் கேட்கப்போவதில்லை. எனவே, நிதானமாக ஆழமற்ற முறையில் சுவாசித்தேன். நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்தேன். என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் அதை சரிசெய்து மீட்டுவிடுவார்கள் என்கிற நம்பிக்கையுடன் பதட்டமின்றி அமைதியாக இருந்தேன்,” என்கிறார் பாலிவுட்டின் முதல் ஸ்டன்ட்வுமன் என்றழைக்கப்படும் சனோபர்.
சனோபர் 12 வயதிலேயே கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். நக்ஷத்ரா டயமண்ட்ஸ் விளம்பர படப்பிடிப்பில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஐஸ்வர்யா ராய்க்கு டூப்பாக சில ஜிம்னாஸ்டிக் அசைவுகளை செய்தார். அப்போதே தற்காப்புக் கலை சார்ந்து செயல்படுவது என தீர்மானம் செய்துகொண்டார்.
”தற்காப்புக் கலையில் தேசிய அளவில் வெற்றிபெற்றிருக்கிறேன். சண்டையிடும்போது நீங்கள் யார் என்பது முக்கியமல்ல. எப்படி திட்டமிடுகிறீர்கள், எப்படிப்பட்ட உத்திகளை வகுக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு அசைவின் சாதக, பாதகங்கள் என்ன என்பதையெல்லாம் ஒரு வினாடிக்குள் குறைவான நேரத்தில் தீர்மானிக்கவேண்டும். அதற்கு மேல அவகாசம் இருக்காது. நான் நல்ல பாக்சராக இருப்பதற்கு என் பாக்சிங் திறமை மட்டும் காரணமல்ல. என் மூளை எப்படி ஆய்வு செய்து, உத்திகளை வகுத்து, எதிர்த்து சண்டையிடுபவரின் அசைவுகளைப் புரிந்துகொண்டு ரியாக்ட் செய்கிறது என்பதுதான் காரணம்,” என்று விவரித்தார்.
மிகவும் இளம் வயதிலேலே இந்த நுட்பங்களைப் புரிந்துகொண்டதால் இவரது பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக குறிப்பிடுகிறார்.
“ஸ்டன்ட்களை என்னால் துல்லியமாக செய்ய முடிகிறது என்பதை நான் படப்பிடிப்பிற்கு சென்ற முதல் நாளே புரிந்துகொண்டேன். டைரக்டர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. கேமராவில் ஒரு குறிப்பிட்ட ஆங்கிளில் என் முகம் தெரியாமல் எப்படி தலையை சாய்த்து வைத்துக்கொள்வது என்பதுவரை புரிந்துகொண்டு ஸ்டண்ட் செய்தேன்,” என்கிறார்.
அதிக ஈடுபாடு
சனோபர் பள்ளிப் படிப்பை முடித்த காலகட்டத்திலேயே 40 திரைப்படங்களில் ஸட்ண்ட் காட்சிகளில் டூப்பாக பணியாற்றியிருந்தார்.
அவருக்கு 15 வயதிருக்கையில் Bhoot என்கிற திரைப்படத்திற்காக 16 மாடி கட்டிடத்திலிருந்து குதித்திருக்கிறார். The Hero: The Love Story of a Spy திரைப்படத்தில் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு டூப்பாக ஒரு மிகப்பெரிய குண்டுவெடிப்பு காட்சியில் பங்களித்திருக்கிறார்.
“இந்தக் காட்சி தண்ணீர், நெருப்பு, உடைந்த கண்ணாடி போன்றவற்றுடன் படமாக்கப்பட்டது. ஒரு கண்ணாடி வீட்டில் பலர் இருப்பதுபோன்றும் அங்கிருந்த ஒரு பெரிய மேடை தகர்க்கப்பட்டு எல்லோரும் தண்ணீரில் விழுவது போலவும் காட்சியமைப்பு இருந்தது,” என்கிறார்.
சமீபத்தில் Shamshera திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான காட்சியில் பங்களித்திருக்கிறார். தண்ணீருக்கு அடியில் இருப்பது போல் தோற்றமளிக்க அவர் 15 அடியிலிருந்து தண்ணீருக்குள் குதிக்கவேண்டியிருந்தது.
“இதற்காக புடவையணிந்து 20 அடி வரை நீந்தவேண்டியிருந்தது சவாலாக இருந்தது. போதிய ஆக்சிஜன் இல்லை, சுவாசிப்பதற்கான அப்பாரட்ஸ் இல்லை. குளிர்ந்த அந்த நீரில் அமைதிப்படுத்திக்கொண்டு வேலையை செய்து முடித்தேன். இதுபோன்ற சவால்களுக்கு மூச்சுப் பயிற்சி உதவியது,” என்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலிவுட்டில் ”ஸ்டண்ட்மேன்” என்கிற வார்த்தை மட்டுமே புழக்கத்தில் இருந்த நிலையில் இந்தத் துறையில் ஒரு பெண்ணாக கால் பதித்து முதல் பாலிவுட் ”ஸ்டண்ட்வுமன்”ஆகியிருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கும் இந்த ஸ்டண்ட்வுமன் திரைப்படங்களில் பணியாற்றியவர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் கிரெடிட்ஸில் தனது பெயர் வராததைக்கூட பொருட்படுத்தவில்லை.
ஸ்டண்ட் டபுள்ஸ் ’மூவி ஸ்டண்ட் ஆர்டிஸ்ட் அசோசியேஷனில்’ இணைந்திருப்பார்கள். இவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இந்த முயற்சியில் நடிகர் அக்ஷய் குமார் ஆதரவளித்து வருவதாக சனோபர் தெரிவிக்கிறார்.
“நான் எடுக்கும் ரிஸ்க் பணத்திற்கு அப்பாற்பட்டது. நான் எப்படி என்னை சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்கிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம். 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நான் இதே போல் திரைப்பட அரங்கில் இருக்கவே விரும்புகிறேன். காரணம் இந்தத் துறையில் எனக்கு ஈடுபாடு அதிகம்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா