ட்விட்டர் சிஇஓ பதவியில் இந்தியர்: யார் இந்த பராக் அக்ரவால்?
ட்விட்டர் சிஇஒ ஜாக் டோர்சி ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து இந்தியரான பராக் அக்ரவால் சிஇஒ ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தனது சிஇஓ பதவியில் இருந்து விலகியுள்ளார். இதன்மூலமாக ட்விட்டர் நிறுவனத்தில் அவரின் 16 ஆண்டுகால பணி முடிவுக்கு வருகிறது.
2015 ஆம் ஆண்டு முதல் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் டோர்சியின் ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருகிறது. இருப்பினும், மே 2022 வரை டோர்சி நிர்வாக குழுவில் உறுப்பினராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ராஜினாமா தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டோர்சி,
“கடந்த 16 ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தில் இணை நிறுவனர் முதல் தலைமை நிர்வாக அதிகாரி வரை, நிர்வாகத் தலைவர், இடைக்கால சிஇஓ எனப் பல பொறுப்புகளில் பணியாற்றிய நான், தற்போது நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதற்கான நேரம் இது என முடிவு செய்துள்ளேன். ஏனெனில் ட்விட்டர் அதன் நிறுவனர்களிடம் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லத் தயாராக உள்ளது என நம்புகிறேன். எனவே என் பதவியை ராஜினாமா செய்கிறேன்," என்று நீண்ட விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
யார் இந்த பராக் அக்ரவால்?
இதனிடையே, டோர்சி ராஜினாமாவுக்கு பிறகு ட்விட்டர் சிஇஓ பதவிக்கு இந்தியர் ஒரு நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் பெயர் பராக் அக்ரவால். 2011 இல் ட்விட்டரில் இணைந்த அவர், 2017ம் ஆண்டு சிடிஓ பதவிக்கு உயர்த்தப்பட்டார். தொடர்ந்து இப்போது சிஇஓ பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தில் சேரும் முன் 2006 மற்றும் 2010க்கு இடையில், மைக்ரோசாஃப்ட் ரிசர்ச், யாஹூ போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அக்ரவால், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பேயில் பி.டெக் மற்றும் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்.
கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் அக்ரவால். 2017ம் ஆண்டுக்கு பிறகு சிடிஓ பதவியில் இருந்துகொண்டு ட்விட்டரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி இருக்கிறார். குறிப்பாக, ட்விட்டர் தளத்தின் தொழில்நுட்ப உத்தி, வளர்ச்சி வேகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இவரது மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, புதிய சிஇஓவாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அக்ரவால் அறிக்கை வெளியிட்டார். அதில்,
“கடந்த தசாப்தத்தில் நான் பெற்ற சிறந்த "வழிகாட்டி" அவர். இதற்காக டோர்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் கௌரவமாகவும் பணிவாகவும் இருக்கிறேன். உங்களின் (டோர்சியின்) தொடர்ந்த வழிகாட்டுதல் மற்றும் உங்கள் நட்புக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் உருவாக்கிய சேவை, கலாச்சாரம், ஆன்மா மற்றும் நோக்கத்திற்காக நீங்கள் எங்களிடையே வளர்த்து, நிறுவனத்தை வழிநடத்தியதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்றுள்ளார்.
முன்னதாக டோர்சி தனது அறிக்கையில், “ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பராக் அக்ரவால் மீதான எனது நம்பிக்கை ஆழமானது. கடந்த 10 ஆண்டுகளில் அவரது பணி நிறுவனத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரது திறமை, ஆன்மாவிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது அவர் வழிநடத்தும் நேரம்," என்று பராக் அக்ரவால் குறித்து பேசியுள்ளார்.