400+ உணவுத் துறையினர் ஆர்வத்தோடு கலந்து கொண்ட உணவு தொழில்முனைவோர் மாநாடு!
சென்னையில் நடைபெற்ற இந்திய உணவு தொழில்முனைவோர் மாநாட்டில், 400க்கும் மேற்பட்ட உணவு தொழில்முனைவோர், துறை வல்லுனர்கள் பங்கேற்று, அத்துறையில் உள்ள வளர்ச்சி, சவால்கள் மற்றும் படிப்பினைகள் பற்றி தெரிந்து கொண்டனர்.
Mypreneur நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்திய உணவு தொழில்முனைவோர் மாநாடு, சென்னையில் செப் 21ம் தேதி, சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட உணவு தொழில்முனைவோர், துறை வல்லுனர்கள் பங்கேற்றனர். உணவுத்துறை சார்ந்தவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்ற நிகழ்ச்சியாக இது அமைந்தது.
மாநாட்டில், 5 விவாத அமர்வுகள், 4 துடிப்பான உரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், மைபிரேனர் நிறுவனர் சுரேஷ் ராதாகிருஷ்ணன் எழுதிய 'சீப் டீ ஆபிசர்' (Chief Tea Officer) புத்தகம் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, விருது வழங்கும் நிகழ்ச்சியில், உணவுத்துறையில் சிறப்பாக பங்களித்த 9 புதிய உணவு வர்த்தகங்கள் மற்றும் 5 பாரம்பரிய வர்த்தகங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஏ2பி ஸ்ரீனிவாச ராஜா, தலப்பாக்கட்டி ஹோட்டல்சின் சதீஷ் தனபாலன், மன்னா புட்ஸ் நிறுவனர் ஐசக் நாஸர், ஜானகி மாயா (கேக் ஸ்கொயர்) உணவு தொழிலை வளர்த்தெடுப்பது தொடர்பான தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
குக்டு (Cookd) உரிமையாளர் ஆதித்யன், தி டிவைன் புட்ஸ் கிரு மைகாபிள்ளை, ஆலடிபட்டியான் கருப்பட்டி காப்பி மோசஸ் தரம்பலன், ஓல்ட் மிர்ச் பிரியாணி காந்தினி விஜயகுமார், ஆர்.என்.ஆர் பிரியாணி ஸ்வேத்தா ரவி ஆகியோரும் புது யுக உணவகங்கள், டி2சி பிராண்டிங், டெலிவரி சேவை திரட்டிகள், கிளவுட் கிட்சன் சேவை பற்றி பேசினர்.
உணவுத்துறை தானியங்கிமயம் தொடர்பான சுவாரஸ்யமான அமர்வாக, சமையல் கலைஞர் கவுசிக் மற்றும் ஸ்ருஸ்டி குளோபல் சொல்யூஷன்ஸ் தேஜா கடம்செட்டி பங்கேற்ற நிகழ்ச்சி அமைந்தது.
"இந்திய உணவு தொழில்முனைவோர் மாநாட்டிற்கு கிடைத்த வரவேற்பு உற்சாகம் அளிப்பதாக," நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் ராதார்கிருணன் தெரிவித்தார்.
முதல் பதிப்பை தொடர்ந்து ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan