Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

51 ரூபாயில் தொடங்கி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த நகை பிராண்ட்!

அம்பாலால் சோக்ஷி தொடங்கிய நாராயண் ஜூவல்லர்ஸ் தனித்துவமான நகைகள் பிரபலங்கள் பலரைக் கவர்ந்துள்ளது.

51 ரூபாயில் தொடங்கி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த நகை பிராண்ட்!

Friday September 11, 2020 , 4 min Read

1932-ம் ஆண்டு அம்பாலால் சோக்‌ஷி தனது அப்பாவின் நகை வணிகத்தில் இணையலாமா அல்லது சொந்த வணிக முயற்சியைத் தொடங்கலாமா என்று சிந்தித்தார். வடோடராவைச் சேர்ந்த இவருக்கு இந்திய நகைகள் மீது ஆர்வம் இருந்ததால் புதிதாக வணிகம் தொடங்கத் தீர்மானித்தார்.


அம்பாலால் தன்னிடம் இருந்த வெறும் 51 ரூபாய் பணத்தைக் கொண்டு நகைகளுக்கான மொத்த வணிகத்தைத் தனது பெயரில் தொடங்கினார். 1940ம் ஆண்டு நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக சில்லறை வணிக மாதிரிக்கு மாறினார்.

“என் தாத்தா அம்பாலால் அனைத்து வணிக அம்சங்களையும் தானே நிர்வகித்தார். அந்த நாட்களில் ஆட்களை பணியமர்த்தும் முறை பின்பற்றப்படவில்லை. பொதுப் போக்குவரத்து இல்லை. முறையான சாலை வசதிகள் இல்லை. நீண்ட தொலைவைக் கடந்து சென்று பொருட்களை டெலிவர் செய்ய நடந்தே செல்வார். அல்லது குதிரை வண்டியைப் பயன்படுத்துவார்,” என்றார் கேத்தன் சோக்‌ஷி.

இவர் மூன்றாம் தலைமுறைத் தொழில்முனைவர். இவர் அம்பாலால் உருவாக்கிய ஜுவல்லரி நிறுவனமான நாராயண் ஜுவல்லரியின் இணை உரிமையாளர்.


இன்று இவர்களது குடும்ப வணிகம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது. ஒலிவியா வைல்ட், சோனம் கபூர், டாப்சி பன்னு, ஷில்பா ஷெட்டி போன்றோர் சிவப்புக் கம்பளம் நிகழ்ச்சிகளில் இவர்களது நகைகளையே அணிந்துகொள்கின்றனர். கிட்டத்தட்ட ஏழாண்டுகளாக அகாடெமி விருது (ஆஸ்கார்) நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு நகை வடிவமைக்க Forevermark உடன் இணைந்து செயல்படுகிறது.


குஜராத்தின் வடோடரா பகுதியில் 5,200 சதுர அடியில் நாராயண் ஜூவல்லர்ஸ் முக்கியக் கடை அமைந்துள்ளது. இங்கு தங்கம், வைரம், polka, jadau போன்றவை உள்ளன. 35 ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.


நாராயண் ஜூவல்லர்ஸ் வெற்றிக்கதை குறித்தும் அதன் வணிக மாதிரி குறித்தும் கேத்தன் எஸ்எம்பிஸ்டோரி உடனான பிரத்யேக உரையாடலில் விவரித்தார்.


அந்த நேர்காணலின் தொகுப்பு இதோ:


எஸ்எம்பிஸ்டோரி: அம்பாலாலின் வணிகம் மிகப்பெரிய அளவில் செயல்படும் குடும்ப வணிகமாக வளர்ந்தது எப்படி?


கேத்தன் சோக்‌ஷி: இளம் வயதில் என் தாத்தா இந்த வணிகத்தில் ஈடுபடும்போது போதிய வளங்களோ உதவியோ கிடைக்கவில்லை. சிறந்த விலையில் மூலப்பொருட்களை வாங்குவது, போக்குவரத்து ஏற்பாடு என அனைத்தையும் அவரே செய்யவேண்டியிருந்தது. பொறுப்புணர்வு, கடின உழைப்பு, நேர்மை ஆகியவையே வணிகத்தில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது.


1969ம் ஆண்டு அம்பாலாலின் மகன் (என் அப்பா) நரேந்திர அம்பாலால் சோக்‌ஷி வணிகத்தில் இணைந்துகொண்டு புதுமைகளை புகுத்தினார். 1971-ம் ஆண்டு வைரம் மற்றும் Jadau நகைகளை அறிமுகப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தார். 1984ம் ஆண்டு நாராயண் ஜூவல்லர்ஸ் என்கிற பெயரில் மறு அறிமுகம் செய்தார்.


1997-1999 காலகட்டத்தின் இடையே என்னுடைய சகோதரர் ஜடினும் நானும் வணிகத்தில் இணைந்துகொண்டோம். வடிவமைப்பிலும் மேலாண்மையிலும் எங்களுக்குள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை மாற்றியமைத்தோம். முன்னணி டிசைனர் ஜூவல்லரி பிராண்டாக வளர்ச்சியடையச் செய்து, விருதுகளை வென்று எங்களது முக்கிய ஸ்டோரைத் தொடங்கினோம்.


எஸ்எம்பிஸ்டோரி: தயாரிப்புப் பணிகள் எங்கே நடைபெறுகின்றன? சொந்தமாக தொழிற்சாலைகள் இயங்குகிறதா?


கேத்தன் சோக்‌ஷி: எங்களிடம் பல வகையான தயாரிப்புகளும் நகை வடிவமைப்புகளும் உள்ளன. எனவே ஒரே தொழிற்சாலையில் இருந்து வாங்குவது சாத்தியமில்லை. மேலும் இந்தியாவின் ஜுவல்லரி துறை திறன் சார்ந்தது. Jadau ஜுவல்லரிக்கு மார்வாரி பணியாளரும் வைரம் மற்றும் தங்க நகைகளுக்கு பெங்காலி பணியாளரும் அவசியம். இந்தத் துறையைப் பொறுத்தவரை அளவைக் காட்டிலும் திறனே முக்கியம். ஒவ்வொன்றும் பிரத்யேக முறையில் வடிவமைக்கப்படுவதால் அனைத்தையும் ஒரே இடத்தில் தயாரிப்பது சாத்தியமில்லை.


எங்களது வடிவமைப்பே எங்களின் மிகப்பெரிய பலம். இந்தியாவின் மத்தியப் பகுதியில் பிகானர் மற்றும் ஜெய்ப்பூர், வட இந்தியாவில் சண்டிகர் மற்றும் டெல்லி, இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கொல்கத்தா, இந்தியாவின் மேற்குப் பகுதியில் மும்பை, ராஜ்கோட், சூரத், வடோடரா என எங்கள் நகைகள் சிறந்த கைவினைஞர்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.


இந்தத் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 30 முதல் 33 சதவீதம் வரை எங்களது கட்டுப்பாட்டில் உள்ளன. மற்றவை அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. இந்த மாதிரியானது தயாரிப்பாளரின் திறனை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் இதுவரை ஜுவல்லரி துறையில் இத்தகைய ஏற்பாடுகளே பின்பற்றப்படுகின்றன.

2

எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வணிக மாதிரி எத்தகையது?


கேத்தன் சோக்‌ஷி: எங்கள் வடிவமைப்பு நுணுக்கமானது, தனித்துவமானது. இந்த அம்சங்களே எங்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன. வாடிக்கையாளர்கள் எங்கள் பிராண்டை விரும்பித் தேர்வு செய்யவும் இந்த அம்சங்களே முக்கியக் காரணம். எங்கள் பிராண்ட் 80 ஆண்டு பாரம்பரியமிக்கது. உலகளவிலான ட்ரெண்ட் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப புதுமையான வடிவமைப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.


எங்களது முக்கிய ஸ்டோர் தவிர உலகளவில் செயல்படுவது குறித்தும் ஆன்லைனில் செயல்படுவது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.


நாராயண் ஜுவல்லர்ஸ் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. சில ஆயிரம் ரூபாய் முதல் கோடி ரூபாய் வரையில் எங்களது நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.


எஸ்எம்பிஸ்டோரி: பிராண்ட் குறித்த விழிப்புணர்வை உங்கள் நிறுவனம் எப்படி ஏற்படுத்துகிறது? மார்க்கெட்டிங் நடவடிக்கைகள் எவ்வாறு கையாள்கிறீர்கள்?


கேத்தன் சோக்‌ஷி: பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Jadau மற்றும் வைர நகைககள் கொண்ட நகைப் பிரிவு உள்ளது. இவை நியூயார்க் பேஷன் வீக், லாக்மே ஃபேஷன் வீக், FDCI Couture வீக் ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவு திருமணம், பார்ட்டி என ஆடம்பர ரகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை இலகக்காகக் கொண்டுள்ளது.  


ஹர்பஜன் சிங், கீதா பாஸ்ரா போன்ற பிரபலங்கள் தங்களது திருமணங்களுக்கு நாராயண் ஜுவல்லர்ஸ் நகைகளைப் பயன்படுத்தியுள்ளனர். Forevermark, Bibhu Mohapatra ஆகியோருடன் இணைந்து நியூயார்க் ஃபேஷன் வீக்கின் ஐந்து சீசன்களில் எங்களது தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  


இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், Pinterest, வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்து அவர்களது தேவைகளைப் புரிந்துகொள்கிறோம். விரைவில் மின்வணிக தளத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.


எஸ்எம்பிஸ்டோரி: நிறுவனம் சந்தித்த கடினமான சூழல்கள் என்னென்ன?


கேத்தன் சோக்‌ஷி: 1990-ம் ஆண்டு தங்க கட்டுப்பாடு சட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு யாரும் வீட்டில் தங்கத்தை வைத்திருக்க அனுமதியில்லை. வணிகம் புரிவதும் எளிதாக இருக்கவில்லை.


வடோடராவில் பிஐஎஸ் ஹால்மார்கிங் உரிமம் பெற்ற முதல் ஜூவல்லரி பிராண்டாக உருவானோம். இந்த உரிமம் இந்தியாவில் 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2008ம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, தற்போது கோவிட்-19 போன்றவை நாங்கள் சந்தித்த சவால்கள். கடினமான சூழல்களை நேர்மறையான அணுகுமுறையுடன் எதிர்கொண்டு வெற்றியடைகிறோம்.

3

எஸ்எம்பிஸ்டோரி: கோவிட்-19 உங்கள் வணிகத்தை எவ்வாறு பாதித்துள்ளது? அதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?


கேத்தன் சோக்‌ஷி: கோவிட்-19 மொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். ஸ்டோர்களுக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆர்டர் கொடுத்தவர்களும் வாங்கிக்கொள்ள வரவில்லை. இந்தச் சூழலை சமாளிக்க ஒவ்வொருவரும் தங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர்.


வழக்கமாகவே ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டு மந்தமாகவே இருக்கும். கோவிட் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. வழக்கத்தைவிட வணிகம் 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. தீபாவளி சமயத்தில் சூழல் மாறும் என்று நம்புகிறோம்.


சமீபத்தில்தான் நாங்கள் எங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளோம். ஜுவல்லரி துறையின் பக்கம் மக்கள் கவனம் திரும்பும் என்றும் வருங்காலம் சிறப்பாகவே இருக்கும் என்றும் நம்புகிறோம். திருமண சீசனும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தள்ளிப்போடப்பட்டிருப்பதால் அந்த வகையிலும் சவால்களை சந்திக்கவேண்டியுள்ளது.


இருப்பினும் டிசைனர் ஜுவல்லரி பிரிவில் செயல்படுவதால் நிச்சயம் இத்தகைய சவால்களை சிறப்பாகவே எதிர்கொள்வோம். நகைகள் தங்கள் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதும் வாடிக்கையாளர்களே எங்களது மிகப்பெரிய பலம்.


ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா