சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக சி.இ.ஓ ஆக இந்தியர் சுரேஷ் குணசேகரன் நியமனம்!
யுனிவர்சிட்டி ஆஃப் சான்பிரான்சிஸ்கோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரேஷ் குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யுனிவர்சிட்டி ஆஃப் சான்பிரான்சிஸ்கோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரேஷ் குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகம் அதிநவீன மருத்துவம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ கவனிப்புக்காக உலகம் முழுவதும் புகழ் பெற்றது.
நூற்றாண்டுக்கும் மேலாக, பர்னாசஸ் ஹைட்ஸில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் சான்பிரான்சிஸ்கோ உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியை உருவாக்கி, மருத்துவப் பராமரிப்பு வழங்குநர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் சிக்கலான மருத்துவப் பராமரிப்புக்கான இடமாகச் செயல்பட்டு வருகிறது.
யு.சி.எஸ்.எஃப் ஹெல்த் நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் நோயாளிகளை கவனிப்பதில் அமெரிக்காவிலேயே சிறந்த மருத்துவ மையமாக விளங்குகிறது. மேலும், இங்கு புற்றுநோய், நீரிழிவு, முதியோர் மருத்துவம், கண் மருத்துவம், மனநோய் மற்றும் வாதவியல் ஆகியவற்றிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதால், நாடு முழுவதும் உள்ள முதல் 10 மருத்துவமனைகளில் இடம் பெற்றுள்ளது.
இத்தகைய உலகப்புகழ் பெற்ற மருத்துவ பல்கலைக்கழகத்தின் சி.இ.ஓ.வாக சுரேஷ் குணசேகரன் மார்ச் ஒன்றாம் தேதி அன்று பொறுப்பேற்க உள்ளார்.
யார் இந்த சுரேஷ் குணசேகரன்?
சுரேஷ் குணசேகரன் டல்லாஸில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். மேலும் அந்த பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் பரிசையும் பெற்றுள்ளார். அதன் பின்னர், டல்லாஸில் உள்ள தென்மேற்கு மருத்துவ மையம் மற்றும் நாஷ்வில்லி, டென்னில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம் ஆகியவற்றில் தலைமைப் பதவிகளை வகித்தார்.
மருத்துவத் துறையில் மட்டும் ஐ.டி. துறையிலும் நல்ல அனுபவம் மிக்கவர். கார்ட்னர் மற்றும் ஐபிஎம் ஆகிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களில் அனலிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார்.
2018ம் ஆண்டு அயோவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததில் இருந்து, குணசேகரனுக்கு ஹெல்த் கேர் துறையில் பணிபுரியும் தலைவர்களுடன் நெருக்கமாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து. அதன் மூலம் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகிய மூன்று பகுதி பணியை மேம்படுத்தினார். மேலும், 3 ஆண்டுகளிலேயே சுகாதார அமைப்பையும், கல்வி நிறுவனத்திற்காக முதலீடுகளையும் அதிகரித்தார்.
படிப்படியாக உயர்ந்த சுரேஷ் குணசேகரன், அயோவா மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். தற்போது அவரது கட்டுப்பாட்டின் கீழ் 11 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் அயோவா மருத்துவ நிர்வாகம் சார்பில் இதுவரை 2 பில்லினுக்கும் அதிகமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக தலைமைப் பொறுப்பு:
சுரேஷ் குணசேகரன் சுகாதார நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர். குறிப்பாக மருத்துவத் துறையில் தரம், நோயாளிகளுக்கான சேவை, ஒத்துழைப்பு, சிறப்பான செயல்பாடு ஆகியவற்றில் குணசேகரனின் சீறிய பணிக்கு பரிசாக தற்போது கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ பல்கலைக் கழகத்தின் புதிய தலைவர் (President) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (chief executive officer) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் குணசேகரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாவது:
“நோயாளிகளுக்கு கருணையுடன் கூடிய பராமரிப்பு முறைகளை எனது சக பணியாளர்களுடன் இணைந்து வழங்குவோம். இந்த அமைப்பின் இதயத்தில் சுகாதார சமத்துவத்திற்கான முறையான தடைகளை கடக்க ஒரு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ மருத்துவ மையத்தின் தலைமை பொறுப்பில் அமர உள்ள சுரேஷ் குணசேகரனுக்கு சம்பளமாக 1.85 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட உள்ளது.
2018ம் ஆண்டு முதல் அயோவா பல்கலைக்கழக மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளின் தலைமை நிர்வாக பணியாற்றி வரும் சுரேஷ் குணசேகரன் பிப்ரவரி மாதம் அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதோடு, மார்ச் 1ம் தேதி முதல் யுனிவர்சிட்டி ஆஃப் சான்பிரான்சிஸ்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொகுப்பு: கனிமொழி