'சில்லறை தேவையில்லை; க்யூஆர் கோட் போதும்’ - இந்தியாவின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர்!
எல்லோரும் டிஜிட்டல் கரன்சிக்கு மாறும் போதும் நானும் மாறக்கூடாதா? என பிச்சைக்காரர் ஒருவர் செய்த செயல் இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எல்லோரும் டிஜிட்டல் கரன்சிக்கு மாறும் போதும் நானும் மாறக்கூடாதா? என பிச்சைக்காரர் ஒருவர் செய்த செயல் இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். போதாக்குறைக்கு பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை கூகுள் பே, போன் பே என விதவிதமான பணப்பரிவர்த்தனை ஆப்கள் வந்துவிட்டது.
எனவே, எங்க போனாலும் பர்ஸை தூக்கிக்கொண்டு அலைய வேண்டிய அவசியம் கிடையாது. கையில் செல்போன் இருந்தாலே போதும், டக்கென QR Code-யை ஸ்கேன் செய்து, ஒரே டிக்கில் பேமெண்ட்டை செட்டில் செய்துவிடலாம்.

இதனால், 100, 500 ரூபாய் தாள்களுக்கே வேலையில்லாமல் போய்விட்டது. அப்புறம் சில்லறை காசுகளை மக்கள் எங்கே போய் தேடப்போகிறார்கள். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது பிச்சைக்காரர்கள் தான்.
வழக்கமாகவே யாசகம் கேட்பவர்கள் நம்மிடம் நெருங்கி வந்தாலே, ‘சில்லறை இல்லை’ எனச் சொல்லி எஸ்கேப் ஆகிவிடும் பழக்கம் பலரிடமும் உள்ளது. இப்போது நிஜமாகவே சில்லறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் சொல்லவும் வேண்டுமா? இதனால் பிச்சைக்காரர்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது.
ஆனால், இந்த கதை எல்லாம் பீகாரில் உள்ள பெட்டியா ரயில் நிலையத்தில் இருக்கும் பிச்சைக்காரர் ஒருவரிடம் செல்லுபடி ஆகாது.
’சில்லறை இல்லப்பா’ என யாராவது இவரிடம் சொன்னால் உடனே கழுத்தில் இருக்கும் ‘QR Code போர்டை’ தூக்கிக் காண்பித்து, டிஜிட்டல் பிச்சை கேட்கிறார். இந்தியாவின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர் ஆன இவர் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம பிரபலமாகியுள்ளார்.
டிஜிட்டல் பிச்சைக்காரர்:
‘அம்மா தாயே...’ என பிச்சை எடுத்தது எல்லாம் அந்த காலம். எல்லா பரிவர்த்தனைகளையும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாக மேற்கொள்ளும் போது, பிச்சை எடுப்பதையும் செய்ய முடியாதா? என்ற கேள்வி பீகாரைச் சேர்ந்த ராஜூ பட்டேலுக்கு வந்துள்ளது.
பீகாரில் உள்ள பெட்டியா ரயில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வரும் இவர், தனது வங்கி கணக்கிற்கான QR Code -யை கழுத்தில் தொங்க விட்டுள்ளார். அவருக்கு பிச்சை போட விரும்புவர்கள் யாராவது, ‘அய்யய்யோ மனமிருக்கு, கையில் பணமில்லையே’ என கதறினால் உடனடியாக தனது கழுத்தில் தொங்கும் QR Code -யை பற்றி சொல்கிறார்.
பிச்சையிட விரும்புவோரும் தங்களது செல்போனில் இருந்து அவரது வங்கிக் கணக்கிற்கான QR Code -யை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பிச்சை போடலாம். என்னடா இது பிச்சைக்காரரிடம் வங்கிக் கணக்கு, QR Code -ஆ என்றெல்லாம் அங்குள்ளவர்கள் யோசிப்பது கிடையாது.
யாகசம் பெறுவது தொழிலாக இருந்தாலும், அதையும் டிஜிட்டல் முறையில் மாற்றி, இந்தியாவின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரராக உருவெடுத்துள்ள ராஜூ பட்டேலை பாராட்டிவிட்டு தான் செல்கின்றனர்.
தொகுப்பு: கனிமொழி