2020-ன் சிறந்த ‘வனவிலங்கு புகைப்படக் கலைஞர்’ விருது வென்றுள்ள முதல் இந்திய பெண் ஐஸ்வர்யா ஸ்ரீதர்!
ஐஸ்வர்யா ஸ்ரீதர் இந்த ஆண்டின் வனவிலங்கு புகைப்பட கலைஞர் விருதினை வென்றுள்ள அறிவிப்பு லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ஸ்ரீதர்; 23 வயதாகிறது. பன்முகத் திறன் கொண்ட இவருக்கு புகைப்படக் கலையில் தீராத ஆர்வம் உண்டு. இயற்கையான சூழலையும் வன விலங்குகளையும் தன் கேமராவிற்குள் அடக்கிவிடுவதில் வல்லவர்.
இவர் 2020-ன் ‘Wildlife Photographer of the Year’ என்ற விருதினை வென்றுள்ளார். இந்த விருதை பெறும் இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் புகைப்படக்கலைஞர் என்ற பெருமையும் இவரைச் சேரும்.
சிறந்த புகைப்படக்கலைஞர் விருது
வனவிலங்குகளை புகைப்படங்கள் எடுத்து அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் போட்டி வருடாவருடம் நடைப்பெறுகிறது. இந்த சர்வதேச போட்டியை லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி ம்யூசியம் நடத்தி வருகிறது. இதில் உலகமெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த விருதினை ஐஸ்வர்யா இந்தாண்டு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதினை வென்ற இந்தியாவின் முதல் பெண் என்கிற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இந்த அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
உலகம் முழுவதிலும் 80 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 50,000 விண்ணப்பங்களில் இவரது புகைப்படம் வெற்றி பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா ‘Lights of Passion’ என்கிற தலைப்பில் Canon DSLRs-EOS-1DX Mark II ரக கேமராவில் 35 mm லென்ஸ் பயன்படுத்தி படம்பிடித்துள்ளார். இந்தப் புகைப்படம் நூற்றுக்கணக்கான மின்மினி பூச்சிகள் ஒரு மரத்தை சுற்றியிருப்பது போன்ற காட்சியை வெளிப்படுத்துகிறது.
இந்த விருதினை வென்றது பற்றி ட்வீட் செய்திருந்த ஐஸ்வர்யா,
“இது இந்தியாவுக்கும், தன்னை போன்ற ஒரு இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கு ஒரு பெரிய அங்கீகாரம். இந்தியாவில் இருந்து இவ்விருதினை பெறும் முதல் இளம் பெண் என்ற வகையில் பெருமையாக கருதுகிறேன்...” என்று பதிவிட்டார்.
ஐஸ்வர்யா ஸ்ரீதர் பற்றி
இயற்கையை அப்படியே படம்பிடிப்பதுடன் அதன் அழகை வார்த்தைகளால் வர்ணிப்பதிலும் இவர் வல்லவர். ஆம்! 200-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் 23 வயதாகும் ஐஸ்வர்யா.
பிபிசி வைல்ட்லைஃப், கார்டியன், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல அச்சு மற்றும் ஆன்லைன் இதழ்களில் இவரின் படங்கள் மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Panje – The Last Wetland என்கிற இவரது அறிமுக ஆவணப்படம் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த இளம் புகைப்படக்கலைஞர் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
இவை தவிர மக்களிடையே உரையாற்றுகிறார். குழந்தைகளுக்கு வன விலங்குகள் தொடர்பான போட்டிகள் நடத்துகிறார். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விரிவுரை வழங்குகிறார்.
படங்கள் உதவி: ஐஸ்வர்யா-வின் பக்கம்