ஐ.டி துறையில் பெண்கள் நிலைத்து இருக்க ‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி குறிப்பிட்ட அந்த 3 தரப்புகள்!
கொரோனா காலம் தந்த கொடையான ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ முறை இப்போது பெண்களுக்கு புதிய கதவைத் திறந்துவிட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். புதிதாக வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களில் பலரும் WFH பணிகளுக்கே முன்னுரிமை தருகின்றனர் என்று சில தரவுகள் கூறுகின்றன. குறிப்பாக, ஐ.டி துறையில்தான் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தப் போக்குக்குப் பின்னால் சில கசப்பான உண்மைகளும் இருக்கவே செய்கின்றன. பணியிடத்தில் பாலினப் பாகுபாடு, ஹைராக்கியில் ஆண்களின் ஆதிக்கம், ஆண்களுடன் ஒப்பிடுகையில் அதிக பணிச்சுமைகளை ஏற்றுக்கொண்டு அவர்களைவிட குறைந்த ஊதியமே பெறும் அவலம், பணியிடங்களில் உடல், மன ரீதியிலான துன்புறுத்தல்கள்...
இவற்றை எல்லாம் எதிர்கொள்ளாமல் தவிர்க்கக் கூடிய சாத்தியத்தை ஒர்க் ஃப்ரம் ஹோம் அளிப்பதாக பெண்கள் பலரும் கருதுகின்றனர்.
ஆனால், இது தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்க முடியும். ஐ.டி துறையில் பெண்கள் தங்களுக்கு உரிய அதிகாரத்தையும், ஊதியத்தையும் பெற வேண்டும் என்றால் நேரடியாக முட்டி மோதுவதுதான் சிறந்த வழி. இங்கேதான் ‘இன்ஃபோசிஸ்’ நாரயணமூர்த்தி முன்வைத்த சில கருத்துகள் கவனம் பெறுகிறது.
மூன்று தரப்பினரின் பங்கு:
இந்திய ஐ.டி துறையின் தந்தையாக புகழப்படுபவரும், தொழில்துறையில் பல புரட்சிகளை மேற்கொண்டவருருமான '
' நாராயணமூர்த்தி இன்றளவும் நாட்டின் வளர்ச்சிக்காக தன்னால் இயன்றதைச் செய்து வருபவர்.குறிப்பாக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் மட்டுமின்றி, பெண்களின் முன்னேற்றத்துக்கும் பல முன்னெடுப்புகளைச் செய்து வருபவர். அவர் ஒரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றப்போது ‘நம் சமூகத்தில் பெண்களின் பங்கு என்ன? குறிப்பாக, ஐ.டி துறையில் பெண்கள் இன்னும் அடுத்த லெவலுக்குச் செல்வதற்கு யார் யார் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?’ - இப்படி பல கேள்விகள் அடுக்கப்பட்டன. அவற்றுக்கு அவர் அளித்த கவனிக்கத்தக்க பதில் இதுதான்:
"இந்த விவகாரத்தில் மூன்று தரப்பினரின் பங்கு உண்டு. முதல் தரப்பு, குடும்பம். இரண்டாவது கார்ப்பரேஷன். மூன்றாவது அரசு.”
1. நம் குடும்ப அமைப்புதான் நமக்கு ப்ரொஃபஷனலாக முன்னேற்றம் காண்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். அதற்கு, ஓர் இளம் தம்பதி தங்களது பெற்றோருடன் நல்ல உறவைப் பேண வேண்டும். அவர்களுடன் நாம் சேர்ந்து வாழும்போது, அவர்கள் தங்களது பேரப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார்கள். அதாவது, நம் பெற்றோர் நம் பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பார்கள். அப்போது, நாம் நமது புரொஃபஷனில் நிம்மதியாக முழு கவனத்தையும் செலுத்த முடியும்.
எங்களது குழந்தைகளை எங்களின் பெற்றோர்கள்தான் கவனித்துக் கொண்டார்கள். நானும் என் மனைவியும் பிள்ளைகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் வேலைகளின் முழு கவனம் செலுத்தினோம்.
2. இரண்டாவதாக, தற்காலத் தேவையின் அடிப்படையான சூழலில், ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவருமே வருவாய் ஈட்ட வேண்டியது அவசியமாகிறது. எனவே, இதற்கு துணைபுரியக் கூடிய நல்ல சப்போர்ட் சிஸ்டம் தேவை.
ஒரு பெண் புரொஃபஷன்லாக நல்ல நிலைகளில் எட்டவும், முன்னேறிச் செல்லவும் இந்த சப்போர்ட்டிங் சிஸ்டம் பக்க பலமாக இருக்க வேண்டும். எனவே, வீட்டுப் பணிகளை நிர்வகிப்பது தொடங்கி குழந்தைகளை கவனித்துக் கொள்வது வரையிலான விஷயங்களில் துணைநிற்கும் வகையிலான சமூகச் சூழல் இருக்க வேண்டும்.
இந்த இடத்தில்தான் அரசின் 'ரோல்' முக்கியத்துவம் பெறுகிறது. 'Norland Nannies' போன்ற உலகத் தரம் வாயந்த கல்லூரிகளின் தேவை என்பது இங்கேயும் இருக்கிறது. பிரிட்டனில் நார்லந்து நான்னீஸ் கல்லூரி மிகச் சிறந்த நான்னீஸ்களை உருவாக்குகிறது.
அதாவது, குழந்தைகளை பராமரிப்பவர்களைதான் நான்னீஸ் என்கிறோம். எளிய மொழியில் சொல்வது என்றால், ஆயாக்கள் எனச் சொல்வோம். நம் நாட்டிலும் நல்ல பயிற்சி பெற்ற நான்னீஸ்கள் உருவாக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் நல்ல ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், நாட்டில் பலரும் குழந்தைப் பராமரிப்பாளராக முன்வருவார்கள். அத்தகைய நிலை வந்தால், ஒரு குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இரட்டை வருமானம் சாத்தியமாகும்.
அதாவது, கூட்டுக் குடும்ப முறையே தேடினாலும் கிடைக்காத இந்தக் காலகட்டத்தில், கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் சென்று நல்ல ஊதியம் ஈட்ட வேண்டும் என்றால், குழந்தைப் பராமரிப்பு என்னும் சப்போர்ட்டிங் சிஸ்டமே உருவாக்கப்பட வேண்டும்.
இந்த சப்போர்ட்டிங் சிஸ்டத்துக்கும் கார்ப்பரேட்கள்தான் துணை நிற்க வேண்டும். அதாவது, வேலைக்கு வரும் தாய்மார்களின் குழந்தைகளை பராமரிக்கும் செலவை நிறுவனங்கள் ஏற்க வேண்டும்.
குறிப்பாக, வேலைக்குச் செல்லும் நேரத்தில் சிங்கிள் மதர்களின் குழந்தைகளை பராமரிக்கும் காப்பகங்களை ஏற்பாடு செய்வது, இணையதள வசதி மூலம் அவ்வப்போது தங்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தாய்மார்களுக்கு தெரியவைப்பது போன்றவற்றையும் நிறுவனமே செய்ய வேண்டும்.
3. அரசும் சமையல் மற்றும் வீட்டு வேலைகளுக்கான கல்வி நிறுவனங்களைத் தொடங்க வேண்டும். அதன் மூலம் நல்ல சம்பளம் கிடைக்கக் கூடிய ஒரு துறையே உருவாக்க முடியும்.
- அதேபோல், திருமணமான ஆண், பெண்களுக்கு, அவர்களுக்கு வசதிக்கு ஏற்ப வேலை நேரத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் வகுக்க வேண்டும். உதாரணமாக, மனைவிகளின் அலுவலக வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையாகவும், கணவர்களின் வேலை நேரம் என்பது அதிகாலை 7 மணி மணிமுதல் பிற்பகல் 3 மணி வரையாகவும் இருக்கலாம். இப்படி இருந்தால், கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவர் தங்களது நேரத்தில் வீட்டை கவனித்துக் கொள்ளலாம்.
”கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுபோன்ற யோசனைகளை வகுத்து செயல்படுத்தினால், பெண்கள் இன்னும் அதிக நம்பிக்கையுடன் தங்கள் புரொஃபஷன்லில் அடுத்தடுத்த பாய்ச்சலை நிச்சயம் காட்டலாம். இது, நம் சமூகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் வலுசேர்க்கும் விஷயமாகவும் இருக்கும்,” என்கிறார் 'இன்ஃபோசிஸ்' நாராயண மூர்த்தி.
ஐ.டி. நிறுவனங்களில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பதற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் தேவைப்படுகிறது என்று கேட்டதற்கு, அவர் கூறிய விஷயங்கள் மிக மிக முக்கியமானவை. அவை:
"ஐ.டி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் 95 சதவீதம் முழுக்க முழுக்க எக்ஸ்போர்ட் மார்க்கெட்டை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இங்கே தரமான சேவைதான் நமக்கு பலமாக இருக்கும். இதை உறுதி செய்வதற்கு, நம் நாட்டில் பெண் கல்விக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். பெண்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.”
மிகக் குறிப்பாக, அவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தாலும், அவர்களுக்கு உரிய உயர் கல்வியுடன், ஆங்கில அறிவும் கொடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் அவர்களால் ஐ.டி. துறையில் மிகப் பெரிய முன்னேற்றம் காண முடியும்.
ஐ.டி துறைக்குத் தேவையான தகுதியை கல்வி நிறுவனங்கள் மூலம் பெண்கள் 80 சதவீதத்தை வளர்த்துக் கொள்ள வழிவகை செய்துவிட்டால், எஞ்சிய 20 சதவீதத்தை ஐ.டி. நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும்.
நம் பிள்ளைகள் எந்த விதத்திலும் திறமையில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை எனது சொந்த முயற்சி மூலம் நிரூபித்திருக்கிறேன். 2006, 2007 காலகட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்காக ஒரு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தினேன்.
அதன்படி, ஆர்வமுள்ள எஸ்.சி., எஸ்.டி மாணவர்களைத் திரட்டி, அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அது மிகப் பெரிய வெற்றியைத் தந்தது. பயிற்சி பெற்ற அனைவருமே ஐ.டி துறையில் நல்ல நிலைக்கு உயர்ந்தார்கள். ஆனால், எந்த மாநில அரசும், மத்திய அரசும் துணை நிற்காததால், வெற்றிகரமான இந்தத் திட்டத்தை தொடர முடியாமல் போனது.
பொதுவாக, ஐ.டி துறையில் நல்ல நிலையில் இருக்கும் பெண்களை எடுத்துக்கொண்டால், வேலைக்குச் சேர்ந்த சில வருடங்கள் வேலையில் அசத்துவர்கள். அடுத்தடுத்த நிலைக்குச் செல்வார்கள்.
”ஆனால், திருமணம் முடிந்தபிறகு, குழந்தை பிறந்ததும் பெண்களில் பெரும்பாலானோரும் வேலையை விட்டுவிட்டு குடும்பம், குழந்தை என்று சென்றுவிடுவது இன்னமும் நடக்கிறது. இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் ஐ.டி. துறைக்கு நுழையும்போது, தொழில்நுட்பத்தில் நிறைய அப்டேட்டுகள் வந்திருக்கும். இதனால், அவர்களுக்கு பழைய வேகத்தில் மேலே செல்ல முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற நடைமுறைச் சிக்கலையும் களைய வேண்டியது அவசியம்,” என்கிறார் 'இன்ஃபோசிஸ்' நாராயண மூர்த்தி.
ஆம், இந்த விஷயங்களை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.