49பி பிரிவின் மூலம் விஜய் ‘சர்கார்’ பாணியில் ஓட்டு போட்ட சுவாரசிய நிகழ்வு!
தமிழக தேர்தல் களத்தில் சுவாரசியம்!
விஜய்யின் சர்கார் படத்தில் வாக்கு செலுத்துவதற்காக விஜய் இந்தியாவுக்கு வந்திருந்த போது அவரின் வாக்கை இன்னொருவர் செலுத்திவிடுவார். பின்னர் 49பி பிரிவை பயன்படுத்தி விஜய் வாக்கு செலுத்தும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். படத்தில் காட்டப்பட்டிருக்கும் இந்த சம்பவம் இன்றைய தமிழக தேர்தலில் நிஜத்திலும் நடந்துள்ளது.
திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் என்பவருக்கு தான் இந்த சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது. அபுதாபியில் பொறியாளராக இருக்கும் ரமேஷ், வாக்கு செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்படி, திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவரின் வாக்கு ஏற்கனவே பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் சொல்லி இருக்கின்றனர்.
அதிர்ச்சி அடைந்த ரமேஷ், தான் வாக்களிக்கவில்லை என்பதை அதிகாரிகளிடத்தில் எடுத்துக்கூறி அதை நிரூபிக்கவும் செய்தார். இதன்பின் நடந்த விசாரணையில், ரமேஷ் பெயரில் போலி ஆதார் அட்டையை காண்பித்து சிலர் கள்ள ஒட்டு போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் இந்திய தேர்தல் ஆணையத்தின் 1961 தேர்தல் நடத்தை விதி பிரிவு 49 பி படி ரமேஷ் டெண்டர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
அதன்படி, தன்னிடம் இருந்து உரிய ஆவணங்களை காண்பித்து, தனது வாக்கை வாக்குச்சீட்டு மூலமாக செலுத்தினார் ரமேஷ். 49 பி படி தகுந்த ஆதாரங்களை முன்வைத்து ரமேஷ் தனது வாக்கினை பதிவு செய்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல், சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்திரா காலனியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரும் சர்கார் பட பாணியில் தனது வாக்கினை செலுத்தினார். கிருஷ்ணன் காலை 8:30 மணிக்கெல்லாம் வாக்கு செலுத்த வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், யாரோ ஒருவர் ஏற்கனவே அவரின் வாக்கை பதிவு செய்து விட்டதாக அதிகாரிகள் கூற, பின்னர்,
"நான் வாக்களிக்க வேண்டும்" என்று கிருஷ்ணன் முறையிட அதன்படி வாக்குப்பதிவு மைய அதிகாரிகள், டெண்டர் முறையில் வாக்களிக்க அனுமதி அளித்தனர். அதன்படி கிருஷ்ணன் வாக்களித்து வந்துள்ளார்.