'இஸ்ரோ மிஷன்களில் இனி இவரது குரலை கேட்கமுடியாது' - மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் 'வளர்மதி' மரணம்!
சந்திரயான்-3 உட்பட இஸ்ரோவின் பல ராக்கெட் ஏவுதல்களுக்கு பின்னணியில் கவுண்ட்டவுன் குரல் கொடுத்த தமிழக விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ‘இனி வளர்மதியின் குரல் இஸ்ரோவில் கேட்கப் போவதில்லை’ என இஸ்ரோ விஞ்ஞானிகள் சமூகவலைதளப் பக்கங்களில் உருக்கத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
சந்திரயான்-3 உட்பட இஸ்ரோவின் பல ராக்கெட் ஏவுதல்களுக்கு பின்னணியில் கவுண்ட்டவுன் குரல் கொடுத்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வளர்மதி (64), மாரடைப்பால் மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரோவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கு 10, 9, 8... என்ற கவுண்டவுன் தொடங்கி விண்கலம் அதன் சுற்று வட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது என்பது வரை அறிவிக்கும் பணிதான் ‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்’ பதவி. தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த விஞ்ஞானிகளால் மட்டுமே இந்தப் பணியை திறம்பட செய்ய முடியும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இந்தப் பதவியை தமிழகத்தைச் சேர்ந்த வளர்மதி வகித்து வந்தார். இவரது கம்பீரக் குரலில் தான், சந்திராயன் 3 உட்பட பல ராக்கெட்டுகளின் அப்டேட்டுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கேட்டு வந்தனர்.
சந்திராயன் 3
ஜூலை 30 அன்று பி.எஸ்.எல்.வி சி56 ராக்கெட்டில் DS-SAR ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை ஏவுதல் மற்றும் எல்.வி.எம்3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலத்தின் ஜூலை 14 ஏவுதலின் ஒரு பகுதியாக வளர்மதி இருந்துள்ளார்.
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, உலகையே அசர வைத்த சந்திரயான்- 3 செயற்கைக் கோள்களை ஏந்திச் சென்ற பி.எஸ்.எல்.வி சி56 ராக்கெட் நிகழ்வின் கவுண்டவுனைத்தான் வளர்மதி கடைசியாக வர்ணனை செய்திருந்தார்.
இவர் கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட்டுகளுக்கு வர்ணனையாளராக இருந்தார். ராக்கெட் ஏவுதலின் போது அவரது கம்பீரக் குரலுக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
உடல்நலக் குறைவு
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த வளர்மதி, சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை ( செப்டம்பர் 2ம் தேதி) சிகிச்சைப் பலனின்றி மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்ரோ அதிகாரிகள் விஞ்ஞானி வளர்மதியின் மரணத்தை உறுதிசெய்து, சமூகவலைதளங்களில் தங்களது சோகத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் X தளத்தில் வளர்மதி மறைவு குறித்து வெளியிட்டுள்ள பதிவில்,
“சந்திரயான் 3 உட்பட பல இஸ்ரோ ஏவுகணைகளின் பின்னணியில் குரல் கொடுத்த என் வளர்மதி ஜியின் மறைவைக் கேட்டு வருத்தமாக உள்ளது,” என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், இயக்குனருமான பி.வி வெங்கிடகிருஷ்ணன் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில்,
“ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் எதிர்கால பயணங்களின் கவுண்டவுன்களுக்கு வளர்மதி மேடத்தின் குரல் இருக்காது. சந்திரயான் 3 அவரது இறுதி கவுண்டவுன் அறிவிப்பு. எதிர்பாராத மரணம். மிகவும் சோகமாக உணர்கிறேன்,” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் இரங்கல்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் தனது இரங்கலை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அதில்,
"இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த Mission Range Speaker திருமதி.வளர்மதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். மிகவும் சவாலான ஒரு பணியைத் திறம்படக் கையாண்டு. இஸ்ரோவின் முக்கியத் திட்டப் பணிகளுடைய வெற்றித் தருணங்களின் குரலாக ஒலித்த திருமதி வளர்மதி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது பணியிடத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஊடகங்கள் மூலம் வளர்மதியின் குரல் மக்களுக்கும் நல்ல பரிச்சயம் என்பதால், அவரது மறைவுக்கு சமூகவலைதளங்களில் மக்களும் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
“இனி வரும் இஸ்ரோ ராக்கெட் ஏவுதல்களின் போது உங்களது குரலை ரொம்பவே மிஸ் செய்வோம் வளர்மதி. கடைசியாக ஆதித்யா எல்1 ஏவுதலின் போதே உங்களது குரல் கேட்கவில்லையே என மிகவும் மிஸ் செய்தோம். ஆனால், இப்படி ஒரு சோகமான செய்தி வரும் என எதிர்பார்க்கவில்லை.”
“வியத்தகு சாதனை முயற்சிகளை இஸ்ரோ மேற்கொள்கிறபோது, விண்கலன்கள் புறப்படத் தயாராகும் நிலையில் நாம் எல்லோரும் காதுகளை கூர்மையாக்கி, கண்கள் விரிய பார்த்து கொண்டிருப்போம். அப்போது 3, 2, 1 என்று ஒலிக்கும் கணீர் குரலுக்கு சொந்தமானவரான தமிழகத்தை சேர்ந்த வளர்மதி காலமானார். ஆழ்ந்த இரங்கல்!” என தங்களது சோகத்தை வார்த்தைகளாகப் பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
(‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்’ வளர்மதி இறந்த செய்தியை அடுத்து பல ஊடகங்கள், ஓய்வு பெற்ற மற்றொரு இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதியின் புகைப்படத்தை பகிர்ந்தது. ஆனால், தற்போது இறந்துள்ள வளர்மதி அவரில்லை என்றும் மேலே உள்ள புகைப்படத்தில் இருப்பவர் தான் இறந்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.)
இந்திய பெண் விஞ்ஞானிகளின் மைல் கல்லாக மாறிய Chandrayaan 3 - விண்ணில் பாய்ந்த விண்கலம்!