லாபம் தரும் ‘எலுமிச்சை புல்’ - 25 ஆயிரம் முதலீட்டில்; 4-5 லட்சம் ரூபாய் லாபம் பெறலாம்!
விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட உதவுகிறது `லெமன் கிராஸ்’ எனப்படும் எலுமிச்சை புல் சாகுபடி.
'மாத்தி யோசி' என்கிற வார்த்தை பலரின் வெற்றிக்கு கைகொடுத்திருக்கிறது. இது எல்லா துறைக்கும் பொருந்தும். அந்த வகையில், மாற்று யோசனை, லாபத்திற்கு வழிவகுக்கும் என்கிறனர் விவசாயிகள்.
வழக்கமான பயிர்களையே நம்பியிருக்காமல் புதிய விவசாய முறைகளைப் பின்பற்றி பலர் வருமானத்தை பெருக்கி வருகிறார்கள். அப்படிப்பட்ட விவசாய முறையில் அதிக லாபம் ஈட்ட உதவுகிறது 'லெமன் கிராஸ்’ எனப்படும் எலுமிச்சை புல் சாகுபடி. இதன் மணம் எலுமிச்சை போன்றே இருப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
எலுமிச்சை புல் நன்மைகள்
காஸ்மெடிக் துறையில் எலுமிச்சை புல் பயன்படுத்தப்படுகிறது. சோப், டிடெர்ஜெண்ட் போன்றவற்றில் இந்த நறுமணப் பயிர் பயன்படுத்தப்படுகிறது. காக்டெயில் பானத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க எலுமிச்சை புல் உதவுகிறது. இவைதவிர எடை குறைப்பிற்கும் ரத்த ஓட்டம் சீராவதற்கும்கூட உதவுகிறது.
எலுமிச்சை புல் சாகுபடி
எலுமிச்சை புல் விதைப்பதற்கு மழைக்காலம் ஏற்ற பருவமாக இருக்கும். இந்த பருவத்தில் காணப்படும் காற்றின் ஈரப்பதம் பயிர் வளர்வதற்கு உதவும். அதேசமயம், சூரிய வெளிச்சமும் பயிரின் வளர்ச்சிக்கு முக்கியம்.
நீர் பாசனம் செய்து முறையாக பராமரித்தால் நல்ல அறுவடை கிடைக்கும். எலுமிச்சை புல்லை விதைத்த ஆறு மாதங்களில் அறுவடை தயாராகிவிடும். அதைத் தொடர்ந்து ஒரு வருடத்தில் 4-5 முறை விளைச்சல் பார்த்துவிடலாம். இந்தத் தாவரத்தை முறையாக பராமரித்தால் 5-7 ஆண்டுகள் வரை தொடர்ந்து உற்பத்தியைப் பெறமுடியும்.
முதலீடு மற்றும் லாபம்
ஒரு ஹெக்டேர் நிலத்தில் எலுமிச்சை புல் பயிரிட ஆண்டிற்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். அறுவடை, களை எடுத்தல், பணியாட்களுக்கான சம்பளம் போன்ற இதர செலவுகளையும் சேர்த்தால் 20-25 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யவேண்டியிருக்கும்.
ஒருமுறை அறுவடை செய்த பிறகும் மீண்டும் மீண்டும் விளைச்சல் கிடைப்பதால் ஆண்டிற்கு சுமார் 60-65 டன் வரை அறுவடை கிடைக்கும். ஒரு டன் எலுமிச்சை புல் மூலம் சுமார் 5 லிட்டர் வரை எண்ணெய் கிடைக்கும். அதாவது, ஒரு ஆண்டிற்கு 65 டன் அறுவடை செய்யும்போது 325 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் எண்ணெய் 1200-1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. அப்படியானால் எலுமிச்சை புல் சாகுபடி மூலம் ஆண்டிற்கு 4-5 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
சொந்த நிலம் இல்லையென்றாலோ எண்ணெய் பிரித்தெடுக்கம் இயந்திரம் இல்லாமல் போனாலோ, அதற்கேற்றபடி லாபம் குறையும் என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும்.
எலுமிச்சை புல் சாகுபடியின் இதர சிறப்பம்சங்கள்:-
- நீர்பாசனம் குறைவு.
- அடர்த்தியாக வளர்க்கப்படும்போது களை எடுப்பதற்கான செலவு குறையும்.
- அதிக உரம் தேவைப்படாது.
- பயிருக்கு ஏற்படும் நோய் குறைவு.
- பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு குறைவு.
- காட்டு விலங்குகள் இவற்றை சாப்பிடாது என்பதால் பயிர் சேதம் தவிர்க்கப்படும்.