ரூ.351க்கு மாதாந்திர பிராண்ட் பேண்ட் சேவை: ஜியோ ஃபைபரின் ஆஃபர் யாருக்கு?
ரூ.351 மற்றும் ரூ.199 கட்டணத்தில் பிராண்ட் பேண்ட் சேவையை அளிப்பதாக இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. அப்படியான்னு மேல பறக்காதீங்க அங்க தான் இருக்கு ட்விஸ்ட்.
டெலிகாம் துறையில் குறைந்த காலகட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமென்றால் அது ஜியோ என்று சட்டென சொல்லிவிடலாம். இலவச கால்கள், டேட்டா என 2016ம் ஆண்டு இந்தியாவில் கால்தடம் பதித்தது முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம்.
3 ஆண்டுகளில் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று முன்னணி நிறுவனங்களை விழி பிதுங்க வைத்தது. ஜியோவின் அதிர்ச்சி வைத்தியத்தைக் கண்டு ஏர்டெல், ஏர்செல், வோடபோன் நிறுவனங்கள் ஆட்டங்கண்டு தான் போகின. வாடிக்கையாளர்களை நழுவ விடாமல் இருக்க இந்த நிறுவனங்களும் ஆஃபர்களைத் தந்த போதும் ஜியோவின் அசுர வளர்ச்சியைத் தடுக்கவும் முடியவில்லை நஷ்டத்தை ஈடு செய்யவும் முடியவில்லை.
டெலிகாம் துறையில் நிலவி வரும் போட்டிக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் மூடுவிழாவே கண்டுவிட்டது. இலவச டேட்டா + ஸ்மார்ட் போன் இருந்தா வேற என்ன வேணும், இளசுகள் கையில் புகுந்து விளையாடியது இணையதள பயன்பாடு.
யூடியூப் வீடியோக்களில் நேரத்தைக் கழிக்க இப்போது யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருப்பது வேறொரு கதை. ஒரு மனுஷன் கை, கால் இல்லாமல் கூட இருந்துவிடுவான் போனும், டேட்டாவும் இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற நிலைக்கு ஸ்மார்ட் போன் வாசிகள் வந்ததற்கு முக்கியக் காரணம் அள்ளிக்கோ ஆஃபர்களை அள்ளித்த தந்த ஜியோ நிறுவனமே.
டெலிகாம் துறையில் ஏற்படுத்திய புரட்சி போல அடுத்ததாக ஜியோ குறி வைத்திருப்பது பிராண்ட் பாண்ட் சேவையை. ரிலையன்ஸ் ஜியோவின் பிராண்ட் பேண்ட் சேவை 2019, செப்டம்பர் மாதம் முதல் இந்தியா முழுவதும் ’ஜியோ ஃபைபர்’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஜியோ ஃபைபர் பிரகாசிக்கவில்லை.
ரூ. 699 முதல் ரூ. 8,499 வரையிலான கட்டணத்தில் மாதாந்திர பிராண்ட் பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது ஜியோ ஃபைபர். தற்போதைய வாடிக்கையாளர்கள் ஜியோ ஃபைபர் பற்றி சில அதிருப்திகளை தெரிவிக்க அவர்களை தக்கவைத்துக் கொள்ள 2 கூடுதலான திட்டங்களை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ. 351க்கு மாதாந்திர பிராண்ட் பேண்ட் கட்டணம், மற்றொன்று ரூ.199க்கு வாராந்திர கட்டணத்தில் பிராண்ட் பேண்ட் சேவை.
என்னங்க சொல்றீங்க பிராண்ட பேண்ட் சேவை இவ்வளவு குறைந்த கட்டணத்திலா. கொஞ்சம் விவரமா சொல்லுங்கன்னு நீங்கள் கேட்பது புரிகிறது. இது தாங்க அந்த டீட்டெய்ல்ஸ்…
1. ரூ.351 ஃபைபர் திட்டப் பலன்கள் : இந்த திட்டத்திற்கு “FTTX Monthly Plan-PV-351” என்று பெயரிடப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல மாதாந்திர கட்டணமாக ரூ.351 செலுத்தினால் போதும் நிறுவல் கட்டணம், ஒன் டைம் கட்டணம் என்ற மறைமுக கட்டணங்களும் கிடையாது. ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.414.18 மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும். இதில் இலசவ உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு அழைப்புகளையும் செய்து கொள்ளலாம்.
10 Mbps வேகத்தில் மாதம் முழுவதிற்கும் 50 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். முழு டேட்டாவும் முடிந்த பின்னர் 1 MBps வேகத்தில் தொடர் இணையதள சேவையைப் பெற முடியும். இது தவிர இந்தத் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு டிவி மூலம் வீடியோ காலிங் செய்யும் வசதியும் போனஸாக வழங்கப்படும். டிவி வீடியோ காலிங் செய்யத் தனியாக ஒரு கருவியை வாங்கிப் பொருத்த வேண்டும். இதற்கு செலுத்தும் முன்பணம் ரூ.3,500, ரூ.1,500ஐ திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இது தவிர இந்தக் கருவியைப் பொருத்த தனியாக நிறுவல் கட்டணம் செலுத்த வேண்டும்.
2. ரூ.199 திட்டத்தில் என்ன நன்மைகள் இருக்கிறது? : இந்த திட்டத்திற்கு “FTTX Weekly Plan- PV–199” என ஜியோ ஃபைபர் பெயரிட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களும் 100 ஜிபி அதிவேகத்தில் டேட்டாவையும், வரம்பற்ற வாய்ஸ் கால்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். காம்ப்ளிமென்டரி வீடியோ கால்களையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். ஆனால் இந்தத் திட்டம் புதிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. ஏற்கனவே RJILவின் வாடிக்கையாளராக இருப்பவர்கள் மட்டுமே 199 திட்டத்தில் சேர முடியும். ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.234.82.
3. இரண்டு திட்டங்களிலுமே இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் வீடியோ கால், டிவி வீடியோ கால்களும் டேட்டாவில் உள்ளடக்கம் என்று ஜியோ ஃபைபர் தன்னுடைய விதிமுறைகள் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. ரூ.500க்குள்ள மலிவு கட்டணத்தில் அதிலும் வயர்நெட் சேவையில் டேட்டா கிடைப்பது சென்னை போன்ற பெருநகரக் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியோ இல்லையோ. இரண்டாம் நகரத்துவாசிகளுக்கு பட்ஜெட்டுக்குள்ள இணையதள வசதி கிடைப்பது உறுதி.
ஆனால் அங்க தான் இருக்கு ஜியோ ஃபைபரின் வியாபார யுக்தி இந்த புதிய 2 திட்டங்களும் ஏற்கனவே ஜியோ ஃபைபரில் வாடிக்கையாளராக இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது ரூ.699 முதல் ரூ.8,499 சந்தா கட்டணத்தில் இருப்பவர்கள் தங்களது கணக்கில் ஏற்கனவே இருக்கும் பணத்தை வைத்து இந்த புதிய திட்டத்தில் சேர முடியும் அல்லது அவர்களுக்கான ரீசார்ஜ் முறையை பயன்படுத்தி இந்த சேவையை பெற முடியும்.
வருவாயை அதிகரிக்கும் விதமாக ஜியோ புதிய வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் அளிக்கவில்லை. எனவே புதிதாக இணைப்புப் பெற விரும்பும் வாடிக்கையாளருக்கு ஜியோ இந்த புதிய வவுச்சர் திட்டங்களை www.jio.com என்ற இணையதள பக்கத்தில் காண்பிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்