ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை ரூ.700; வாழ்நாள் சந்தாதாரர்களுக்கு இலவச 4k டிவி: அதிரடி சலுகைகள் அறிவிப்பு!
ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சேவை செப்டம்பர் மாதம் வர்த்தக ரீதியாக அறிமுகமாகிறது. 700 ரூபாயில் இருந்து இதற்கான கட்டணத் திட்டங்கள் அமைந்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ இல்லங்களுக்காக பிராட்பேண்ட் இணைய வசதி செப்டம்பர் மாதம் முதல் அறிமுகம் ஆகும் என நிறுவனத்தின் 42வது பொதுப்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி முதல் இந்த சேவை அறிமுகமாகிறது.
முகேஷ் அம்பாயினியின் ரிலையன்ஸ் குழுமம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் செல்போன் சேவையில் நுழைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. செல்போன் சேவை அறிமுகம் செய்த மூன்றாவது ஆண்டு நிறைவில் ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் இணைய சேவையை அறிவித்துள்ளது.
பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணம் 700 ரூபாயில் இருந்து துவங்கும் என்றும், 100Mbps முதல்1Gbps வரை சேவையின் வேகம் அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையின் மூலம் 20 மில்லியன் இல்லங்களை சென்றடைய திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 1600 நகரங்களில் உள்ள 15 மில்லியன் இல்லங்களில் இருந்து ஏற்கனவே பிராட்பேண்ட் இணைப்பிற்கான விசாரணைகள் வந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்த சேவையின் நீட்டிக்கப்பட்ட சோதனை வசதி, கடந்த சில மாதங்களாக ஐந்து லட்சம் வீடுகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
”வாடிக்கையாளர்கள் குரல் அல்லது டேட்டாவிற்கு மட்டும் தான் கட்டணம் செலுத்த வேண்டும்,” என ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறினார்.
இந்த சேவையுடன், ஜியோ ஹோம் போன் சேவையும் கூடுதலாக அளிக்கப்படும். இந்த வயர்லெஸ் போனில் இருந்து இலவசமாக உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை பேசலாம். சர்வதேச அழைப்புகள் தற்போதைய கட்டணத்தில் 1/10 பங்கு மட்டுமே இருக்கும்.
அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு 500 ரூபாயில் அன்லிமிடெட் கட்டண திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜியோ பைபர் சேவையின் மூன்றாவது முக்கிய அங்கமாக தொலைக்காட்சி இருக்கும். இந்த சேவை மூலம் வாடிக்கையாளர்கள் அதி நுட்ப தொலைக்காட்சி சேவைக்கு சந்தா பெறலாம். 4 கே செட்டாப் பாக்ஸ் இணைந்திருக்கும். இவை உள்ளூர் கேபில் சேனல்களில் இருந்து விரும்பிய சேனல்களை பெறும் வகையில் இருக்கும்,
அறிமுக திட்டமாக, ஜியோ வாழ்நாள் திட்டத்தில் இணைபவர்களுக்கு இலவச HD/4K TV , 4K STB வழங்கப்படும் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை OTT ஸ்டீரிமீங் சேவையும் இணைக்கப்பட்டதாக இருக்கும்.
அடுத்த ஆண்டு நடுவே, ஜியோ சந்தாதாரர்கள் புதிய திரைப்படங்களை, வெளியாகும் தினத்தன்று பார்த்து ரசிக்கும் வகையில் ’பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ’ வசதி அளிக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தமிழில் : சைபர்சிம்மன்