தண்ணீரில் இயங்கும் பைக், கார் ஹைட்ரோஜன் இன்ஜின்: ஜப்பான் அரசை வியக்க வைத்த கோவை தமிழர்!
11ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கோவை சவுந்தரராஜன் கண்டுபிடித்துள்ள ஹைட்ரோஜன் இன்ஜின் 10லி தண்ணீரில் 200கிமீ மைலேஜ் தரும். இவரின் கண்டுபிடிப்பை அறிமுகம் செய்ய இந்திய அரசு கைவிரித்ததை அடுத்து ஜப்பான் அரசு அறிமுகம் செய்கிறது.
நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களின் பெருங்கவலை என்னவென்று கேட்டால், நிச்சயம் அது பெட்ரோல், டீசல் விலை உயர்வாகத்தான் இருக்கும். ஏனெனில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதன் விலை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறதே தவிர. குறைந்த பாடில்லை.
ஆனால் சொந்தமாகவோ அல்லது போக்குவரத்துத்துறை வாகனங்களையோ பயன்படுத்தாமல் இன்று ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது சாத்தியமில்லை. அதோடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உணவுப் பொருட்களின் விலை முதற்கொண்டு அனைத்திலும் எதிரொலிக்கிறது. இதனால், நேரடியாகவோ மறைமுகமாகவோ பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைவரின் பர்சுகளையும் பதம் பார்த்து விடுகிறது.
பண ரீதியாக மட்டுமின்றி, அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. இதற்கான மாற்று என்ன என அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில், இதற்கு நல்ல ஒரு தீர்வைத் தந்திருக்கிறார் கோவை அருகே வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சவுந்தரராஜன் குமாரசாமி.
சிறு வயதில் இருந்தே, புதுவிதமான மிஷின்கள் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவரான சவுந்தரராஜன், டெக்ஸ்டைல் மிஷின் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரை அனைவரும் இன்ஜினியர் என்றே அழைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர் பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தனது கடும் உழைப்பினால் என்.ஜி. ஆட்டோ மொபைல்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு இந்த நிறுவனத்தை இவர் தொடங்கினார். தற்போது இதற்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் கிளை உள்ளது.
தொழில் ஒருபுறம் இருந்தாலும், சமுதாயத்திற்கும் பயன்படக் கூடிய வகையில் நல்லதொரு கண்டுபிடிப்பைத் தந்துள்ளார் சவுந்தரராஜன். அதாவது, சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எபிசியன்ஸி இன்ஜினை அவர் கண்டுபிடித்துள்ளார். இது பற்றி ஏஎன்ஐக்கு அளித்துள்ள பேட்டியில்
“இந்த இன்ஜினை உருவாக்க எனக்கு 10 ஆண்டுகள் ஆனது. உலகிலேயே இத்தகைய தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. ஹைட்ரஜனை எரிபொருள் ஆதாரமாக கொண்டு இயங்கும் இந்த இன்ஜின் ஆக்ஸிஜனையே வெளியிடும். தற்போயை நிலையில் 100 சிசி என்ற திறனுடன்தான் இந்த இன்ஜினை டிசைன் செய்துள்ளேன். வாகனம் ஓடும்போது இந்த இன்ஜின் ஆக்ஸிஜனை வெளியிடும். இதுதொடர்பான அனைத்து சோதனைகளிலும் வெற்றிகரமாக ரிசல்ட் கிடைத்துள்ளது,'' என பெருமையுடன் கூறுகிறார் சவுந்தரராஜன்.
வழக்கமாக வாகனங்களில் இண்டர்னல் கம்போசிசன் எனப்படும் ஐசி இன்ஜின் தான் தற்போது அதிகமாக புழக்கத்தில் உள்ளது. இதில் 100 சதவீதம் பெட்ரோல் நிரப்பினால், 30 சதவீதம் மட்டுமே எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் புகையாக வெளியேறி விடுகிறது. பெட்ரோல், டீசல் என இரண்டிலும் கார்பன் இருப்பதால், அதில் இருந்து வெளிப்படும் கரும்புகையானது சுற்றுச்சூழலை மாசடைய வைத்து, மக்களை நோயாளி ஆக்குகிறது.
அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். ஏனெனில், ஹைட்ரஜன், கார்பன் இல்லாமல் ஆக்ஸிஜனை வெளியிடக்கூடியது.அதனால்தான் ராக்கெட்டுகளுக்கு, ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். ஆனாலும், இதற்கு உலகளவில் அதிக வரவேற்பு இல்லை. காரணம் அதிக விலை.
இந்தச் சூழ்நிலையில் தான், இதற்கு நல்லதொரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார் சவுந்தரராஜன். இவருடைய கண்டுபிடிப்பான இந்த இன்ஜினே, தனக்குத் தேவையான ஹைட்ரஜனைத் தயாரித்துக் கொள்ளும்.
“கோவையிலுள்ள, பி.எஸ்.ஜி.,தொழில்நுட்பக் கல்லுாரியில், எங்கள் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து, கடின உழைப்பினால் இந்த ஹைட்ரஜன் இன்ஜினை கண்டுபிடித்துள்ளேன். இதனை, பைக், கார், பஸ், லாரி, டிரக், கப்பல், எலக்ட்ரிக் பவர் ஜெனரேட்டர் என, அனைத்திலும் பயன்படுத்தலாம்,” என்கிறார் சவுந்தரராஜன்.
பொதுவாக, பெட்ரோல் பங்க் போன்று, வாகனங்களில் ஹைட்ரஜன் நிரப்புவதற்கு என வெளிநாடுகளில் ஹைட்ரஜன் பில்லிங் ஸ்டேஷன்கள் புழக்கத்தில் உள்ளது. ஆனால், அவற்றை அமைக்க குறைந்தது, 15 கோடி ரூபாய் வரை செலவாகும். அதுவும், நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கிலோ வரை மட்டுமே சேமிக்க முடியும். அதை வைத்து, 100 முதல் 150 கார்களுக்கு மட்டும்தான் ஹைட்ரஜன் நிரப்ப முடியும். இதனாலேயே இந்தியாவில் இது போன்ற ஃபில்லிங் ஸ்டேஷன் எதுவும் இல்லை.
ஆனால், சவுந்தரராஜன் கண்டுபிடித்துள்ள இந்த இன்ஜினுக்கு ஃபில்லிங் ஸ்டேஷன் எதுவும் தேவையில்லை என்பது தான் இதன் மற்றொரு சிறப்பம்சம். பேட்டரிகளில் பயன்படுத்தும் டிஸ்ட்டல் வாட்டரை நிரப்பினாலே போதும். அதிலிருந்து, ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் தன்மை கொண்டது சவுந்தரராஜன் கண்டுபிடித்த இன்ஜின். இதன் மூலம் 100 சி.சி.,கொண்ட ஒரு பைக்கில், 10 லிட்டர் டிஸ்ட்டல் வாட்டர் ஊற்றினால், 1 கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்து விடும். இன்ஜின் திறன் அதிகரிக்கும். அதன் மூலம், 200 கி.மீ., வரை மைலேஜ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“சுற்றுச்சூழல் மாசடையாத வகையில் ஆக்ஸிஜன் மற்றும் நீராவியை மட்டுமே வெளிவிடும். என்னுடைய இந்த முயற்சி வெற்றியடைந்தால், உலக அளவில் சுற்றுச்சூழல் மாசடைவதை பெருமளவு குறைக்க முடியும். இத்தகைய இன்ஜின் தயாரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. ராயல்ட்டி அடிப்படையில் இந்த தொழில்நுட்பம், மோட்டார் நிறுவனங்களுக்கு, விற்பனை செய்யப்பட உள்ளது,” என்கிறார் சவுந்தரராஜன்.
கோவை மாவட்ட மைய நூலகத்தின் உதவியுடன் சவுந்திரராஜன் குமாரசாமி தனது இந்த ஆராய்ச்சியை செய்துள்ளார். சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஐசி இன்ஜினிற்காக, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய அரசு அவருக்கு காப்புரிமையையும் வழங்கியுள்ளது. ஆனால், அதனைத் தொடர்ந்து இந்த இன்ஜினை செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்திய அதிகாரிகள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே தனது கண்டுபிடிப்பை அறிமுகம் செய்ய சவுந்தரராஜன், ஜப்பான் அதிகாரிகளை அணுகினார். ஜப்பானும் சவுந்தரராஜனின் கண்டுபிடிப்பை இருகரம் நீட்டி வரவேற்றது. எனவே ஜப்பானில் அவரது ஆட்டோமொபைல் இன்ஜின் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.இதுகுறித்து அவர் கூறுகையில்,
''இந்த இன்ஜினை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக அனைவரின் கதவையும் தட்டி பார்த்து விட்டேன். ஆனால் பாஸிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. எனவே ஜப்பான் அரசை அணுகி வாய்ப்பு பெற்றேன். வரும் நாட்களில் இந்த இன்ஜின் அங்கு அறிமுகம் செய்யப்படும்,'' எனத் தெரிவித்துள்ளார்.
சவுந்தரராஜன் கண்டுபிடித்துள்ள இந்த இன்ஜின் உதவியுடன், கார் மற்றும் பைக் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களையும் இயக்க முடியும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காற்று மாசுபாடு என மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து வரும் வேளையில், விரைவில் சவுந்தரராஜனின் இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவிலும் புழக்கத்திற்கு வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.