Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரிடம் ரூ.4.4 கோடி நிதி திரட்டிய சமையல் செய்முறை தளம் ‘Cookd’-ன் கதை!

தொடர் தொழில்முனைவரான ஆதித்தியன் தொடங்கியுள்ள சமையல் தளம் ‘Cookd' தினசரி சமையலை எளிதாக்க குறிப்புகளை வீடியோ வடிவில் சமூக வலைதளம் மற்றும் ஆப் மூலம் வழங்குகிறது.

கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரிடம் ரூ.4.4 கோடி நிதி திரட்டிய சமையல் செய்முறை தளம் ‘Cookd’-ன் கதை!

Thursday December 09, 2021 , 4 min Read

கோவிட்டுக்கு பிறகு ஒவ்வொரு பிரிவிலும் பெரிய வளர்ச்சி இருக்கிறது. குறிப்பாக உணவு சார்ந்த பிரிவு பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேபோல ’டைரைக்ட் டு கஸ்டமர்’ பிரிவும் (D2C) வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.


சென்னையைச் சேர்ந்த 'Cookd' 'குக்டு’ நிறுவனம் இந்தப் பிரிவில் விரைவில் செயல்பாட்டை தொடங்க இருக்கிறது. 2019ம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சமீபத்தில் ரூ.4.4 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டி இருக்கிறது.


நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் கதிர் ஆகியோர் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். இதுதவிர, கேரளா ஏஞ்சல் நெட்வொர்க் மற்றும் காங்லோ வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. தவிர, மேலும் சில முதலீட்டாளர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.


இந்த நிறுவனத்தின் நிறுவனரான ஆதித்யன் உடன் மழைவிட்டிருந்த ஒரு மாலை பொழுதில் நீண்ட நேரம் உரையாடினேன். இதற்கு முன்பு ஹீரோ டாக்கீஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கிய அதனை யப் டிவிக்கு விற்றனர். அதன் பிறகு சில மாத இடைவெளிக்குப் பிறகு தொடங்கப்பட்ட நிறுவனம்தான் 'Cookd'.

Aathitiyan

ஹீரோ டாக்கீஸ் தொடங்கப்பட்டதற்கான காரணம், செயல்பாடு, விற்றதற்கான காரணம் புதிய நிறுவனத்துகான ஐடியா அடுத்தகட்டம் என பல விஷயங்கள் குறித்து பேசினோம்.

ஹீரோ டாக்கீஸ்

சொந்த ஊர் ஈரோடு. கொங்கு கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தேன். படிக்கும்போதே கல்லூரியில் கேன்டீன் எடுத்து நடத்தினேன். கல்லூரி முடிந்த பிறகும் ஓர் ஆண்டு நடத்தினேன். அப்போது என்னுடைய அண்ணன் ஹைதராபாதில் உள்ள ஐஎஸ்பியில் படித்துக் கொண்டிருந்தார்.


அப்போது துப்பாக்கி படம் வெளியாகி இருந்தது. தமிழ்நாட்டில் இருந்த நாங்கள் பார்த்துவிட்டோம். ஆனால், அண்ணனால் அங்கிருந்து பார்க்க முடியவில்லை. அப்போதுதான் ஆன்லைனில் சட்டப்பூர்வமாக பார்க்க வழி இருக்கிறதா என்று யோசித்தோம். அப்போது நெட்பிளிக்ஸ் மட்டுமே இருந்தது. ஒடிடி என்னும் வார்த்தை கூட உருவாக்கப் பட்டிருக்கவில்லை.


தெரிந்த நண்பர்கள் மூலமாக திரைத்துறையினரிடம் பேசினோம். திரைப்படத்துக்கான உரிமை இந்தியாவை பொறுத்தவரை மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. அதனை எங்களால் வாங்க முடியாது என்பது தெரிந்தது. அப்போதுதான் இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் மட்டுமே ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்தால் என்ன எனத்தோன்றியது.

தமிழ்படங்களின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய நிறுவனங்களிடம் வெளிநாட்டு டிஜிட்டல் உரிமையை மட்டும் நாங்கள் வாங்கினோம். உதாரணத்துக்கு லைகா, ஏபி இண்டர்நேஷனல் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளிநாட்டு உரிமத்தை வாங்கி வந்தன. இந்த நிறுவனங்களிடம் இருந்து வெளிநாட்டு டிஜிட்டல் உரிமம் சில லட்ச ரூபாய்க்குக் கிடைத்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு ’ஹீரோ டாக்கீஸ்’ எனும் இணையதளத்தை தொடங்கினோம்.

இந்தத் தளத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. தமிழில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை எங்களுடைய தளத்தில் வெளியிட்டோம். வெளிநாட்டு தமிழர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தத் தொழிலுக்கு ஆரம்பத்தில் குடும்பம் மற்றும் நண்பர்களிடன் நிதி திரட்டினோம். அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா முதலீடு செய்தார். வேறு சில முதலீட்டாளர்களும் இருந்தனர்.


பிஸினஸ் நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது. ஓரளவுக்கு உச்சம் அடைந்தது. அடுத்தகட்டமாக பிற மொழி படங்களை இணைப்பது என்பது தொழிலை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போல. அந்த சமயத்தில் ’Yupp' டீவியில் இருந்து நல்ல ஆபர் இருந்தது. அதனால் ’ஹீரோ டாக்கீஸ்’ நிறுவனத்ததை அவர்களுக்கு விற்றோம். முதலீட்டாளர்களுக்கு பிரமாதமான லாபம் கிடைத்தது என்று சொல்ல முடியாது, ஓரளவு லாபம் கிடைத்தது.

'Cookd'

ஹீரோ டாக்கீஸை நானும் அண்ணனும் சேர்ந்து நடத்தினோம். நிறுவனத்தை விற்ற பிறகு சில மாதங்கள் பிரேக் எடுத்தோம். நானும் அண்ணனும் பல பிஸினஸ் ஐடியாக்களை எழுதினோம். ஐடியா என்றால் ஒரு வார்த்தையில் எழுதுவது கிடையாது. ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு முழுமையான செயல் திட்டத்தை உருவாக்குவோம். இந்த சமயத்தில் அண்ணனும் சில திட்டங்களை வைத்திருந்தார். தவிர அண்ணன் கோவைக்கு செல்ல விரும்பினார். அதனால் இரு நிறுவனங்களைத் தொடங்கினோம்.

cookd team

Cookd குழுவினர்

சென்னையில் இருக்கும் நிறுவனத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். அதுதான் 'Cookd'. மற்றொரு நிறுவனத்தை அவர் பார்த்துக்கொள்வார். நான் கவனித்துக்கொளும் நிறுவனத்தில் என் அண்ணன் ஒரு முதலீட்டாளர் மட்டுமே. அதுபோல், அவர் கவனித்துக்கொள்ளும் நிறுவனத்தில் நான் முதலீட்டாளர் மட்டுமே. இதுதான் ’குக்டு’ உருவானக் கதை என்று கூறிய ஆதித்தியன் தன் நிறுவனத்தின் பிஸினஸ் மாடல் குறித்து விரிவாகப் பேசினார்.

பிஸினஸ் மாடல் என்ன?

இன்று என்ன சமைக்கலாம் என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களின் காலை நேரத்து கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்விக்கு யூடியூப்-ல் பல சமையல் சேனல்கள் இருக்கின்றன என்னும் பதில் இருக்கும். ஆனால், யூடியூப் சேனல்களில் இல்லாத ஒன்றை கொடுக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் 'Cookd'


2019-ம் ஆண்டு இறுதியில் நிறுவனம் தொடங்கப்பட்டாலும் சமீபத்தில்தான் ஆப் அறிமுகம் செய்தோம். இதுவரை 800-க்கும் மேற்பட்ட ரெசிபிகள் குறித்த வீடியோவை நாங்கள் அப்லோடு செய்திருக்கிறோம். இன்னும் சில நூறு வீடியோக்கள் தயாராக உள்ளன.

வீடியோ என்பது அனைவரும் செய்வது. ஆனால் சில புதுமைகளை அதன் அடுத்தகட்டமாக சில விஷயங்களையும் நாங்கள் செய்யத் திட்டமிட்டோம். எங்கள் வீடியோவில் குரல் இருக்காது. எப்படி செய்ய வேண்டும் என்னும் டிஸ்கிரிப்ஷன் மட்டுமே இருக்கும். அதேபோல ஒரு வீடியோ சரியாக வரவில்லை என்றால் அதனை ஸ்கிராப் செய்துவிட்டு மீண்டும் புதிதாக கூட எடுத்திருக்கிறோம்.
keerthy

நடிகர் கதிர் மற்றும் கீர்த்தி சுரேஷ்

எங்கள் ஆப்-ல் சில புதுமைகளை செய்திருக்கிறோம். உதாரணத்துக்கு உங்களிடம் முட்டை இருக்கிறது என வைத்துக்கொள்வோம், முட்டையை வைத்து என்னென்ன டிஷ்களை செய்ய முடியும் என்பதை எங்களுடைய ஆப் உங்களுக்கு வழி காட்டும்.


உதாரணத்துக்கு எக் பிரைட் ரைஸ் செய்யலாம் என முடிவெடுத்துவிட்டீர்கள் என இதற்கு என்னென பொருட்கள் தேவை என்பதை எங்களுடைய ஆப் உங்களுக்கு தெரிவிக்கும். சமையல் நன்கு தெரிந்தவர்களுக்கு இது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால், புதிதாக சமைப்பவர்கள் அல்லது வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைப்பவர்களுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதே தெரியாது.


தற்போது இந்த ரெசிபிகளுக்கு என்னென்ன தேவை என்பதை வகைப்படுத்துகிறோம். தவிர எத்தனை நபர்களுக்கு எவ்வளவு தேவை என்பதையும் நாங்கள் கொடுக்கிறோம் என்பதால் சமையலுக்கான நேரம் என்பது மிகவும் குறைந்துவிடுகிறது.

cookd app

வருமானம் எப்படி?

எங்கள் சேனல் மற்றும் ஆப்-இல் பிரபல செப்களை இணைத்துக் கொண்டு அவர்கள் சொல்லித்தரும் ரெசிப்பிகளை வீடியோவாக பதிவேற்றம் செய்கிறோம். சமூக வளைதளங்களில் எங்களுக்கு 1.5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். மாதத்துக்கு 31 மில்லியன் முறை 'Cookd' பார்க்கப்படுகிறது. இதனால் சமூக வலைதளம் மூலம் சில லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் எங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இதனை நாங்கள் வருமானமாகக் கருதவில்லை.

இதுவரை நாங்கள் கொடுத்திருக்கும் வீடியோக்கள் மூலம் எந்த வீடியோவுக்கு/ ரெசிப்பிக்கு அதிகத் தேவை இருக்கிறது என்பதை வகைப்படுத்தி இருக்கிறோம். அந்த ரெசிபிக்கு தேவையான பொருட்களை பேக்கேஜ் செய்து விற்பதுதான் எங்களுக்கு இலக்கு. இதுவரை ஐந்து ரெசிபிகளை கண்டறிந்திருக்கிறோம். டிசம்பருக்குள் எங்களுடைய புராடக்ட்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

இதனை நாங்கள் எங்களுடைய இணையதளம் மற்றும் சமூக வளைதளம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய இருக்கிறோம். வழக்கமான டிஸ்ட்ரிபியூஷன் முறையில் செல்வதன் மூலம் லாபம் குறையும் என்பதை விட , எங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களை சென்றடைவதுதான் இப்போதைய இலக்கு.

”நாங்கள் 2 முதல் 3 கோடி ரூபாய் வரை மட்டுமே நிதி திரட்டத் திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்திய அனைத்து முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதால் தேவைக்கு அதிகமாகவே எங்களுக்கு நிதி கிடைத்தது. நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் கதிர் மற்றும் வேறு சில முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.4.4 கோடி நிதி திரட்டினோம். அடுத்த பல மாதங்களுக்கு இந்த முதலீடு போதும் என்பதால் புதுப்புது புராடக்ட்களை அறிமுகம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம்,” என ஆதித்யன் தெரிவித்தார்.

பொருட்களை தயாரித்துவிட்டு அதற்கு ஏற்ற வாடிக்கையாளர்களை கண்டறிவது ஒரு வகையான தொழில். ஆனால் குக்டு வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை தயாரிப்பது புது வகையிலான தொழில்.